நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் பூமியைபோல நாம் அறியாத பல உலகங்கள் இந்த பிரபஞ்சத்தில் உண்டு. இந்த பூமியில் இருந்து வேறு ஓர் உலகத்திற்கு செல்லும் ஒருவன் அங்கே உள்ள மனிதர்களிடம் எப்படி முதன்முதலாக காதல் என்ற உணர்வை தோற்றுவிக்கிறான் என்பதைத்தான் இரண்டாம் உலகம் மூலம் சொல்லியிருக்கிறார் செல்வராகவன்.
இருவிதமான உலகங்களில் நிகழும் காட்சிகள் ஒரே நேரத்தில் காட்டப்படுகின்றன. பூமியில் இருக்கும் ஆர்யா இரக்க குணம் உள்ளவர். மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்காக தனது பெரும்பகுதியை செலவிடுபவர். அவர்மீது டாக்டரான அனுஷ்காவுக்கு காதல் மலர ஆர்யாவிடம் அதை வெளிப்படுத்துகிறார்.
ஆர்யா முதலில் தயங்கவே, அவர் தன்னை மறுப்பதாக நினைத்துகொண்ட அனுஷ்கா, தன் வீட்டில் பார்த்த மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்ட சம்மதிக்கிறார். ஆனால் அனுஷ்காவின் அன்பை தாமதமாக உணர்ந்த ஆர்யாவின் காதல் பல போராட்டங்களுக்குப்பின் கைகூடுகிறது. ஆனால் விதி அனுஷ்காவின் உயிரைப் பறிக்க பித்துப்பிடித்தவராகிறார் ஆர்யா.
சந்தர்ப்ப சூழ்நிலையால் இரண்டாவது உலகத்திலிருக்கும் ஆர்யா இந்த உலகில் இருக்கும் ஆர்யாவை காப்பாற்றி தன்னுடைய உலகத்திற்கு அழைத்துச்செல்கிறார். அங்கேயும் ஓர் அனுஷ்கா இருக்கிறார். ஆனால் அந்த ஆர்யாவுக்கும் அனுஷ்காவுக்கும் திருமணம் நடந்தாலும் இருவரும் கீரியும் பாம்புமாகவே இருக்கிறார்கள். இவர்களுக்குள் காதலை தோற்றுவிக்கிறார் புதிதாக வந்த ஆர்யா.
அவர்களுக்குள் காதல் தோன்றிய மறுகணமே அங்கிருந்து இன்னொரு புதிய உலகத்திற்குள் தள்ளப்படுகிறார் ஆர்யா. விசித்திரமான அந்த உலகத்திலும் ஓர் அனுஷ்கா. உண்மையான காதலுடன் ஒருவன் இருந்தால் அவன் எந்த உலகத்துக்கு போனாலும் அவன் காதலி அவனுக்குத் தெரிவாள் என படம் முடிகிறது.
இந்தப்படத்தை கதையாக சொல்வதைவிட விஷுவலாக பார்க்கும்போதுதான் அதன் இன்னொரு பரிமாணம் தெரியும். ஏனென்றால் அப்படி ஒரு புதுமையான முயற்சியில் இறங்கி இருக்கிறார் செல்வராகவன். இரண்டு ஆர்யா, இரண்டு அனுஷ்கா என இரண்டுவித குணாதியசமுள்ள ஜோடிகளை இருவேறு உலகங்களில் உலாவ விட்டுள்ளார்.
சாந்த சொரூபியாக வரும் ஆர்யா காதலில் உருகிறார் என்றால் இரண்டாவது உலகத்தில் கட்டுமஸ்தான உடலுடன் வீரனாக வரும் ஆர்யா, காதலி தன்னை திரும்பி பார்க்கமாட்டாளா என ஏங்குகிறார். இரண்டிற்கும் ஒரே நேரத்தில் உடல்மொழியிலும் உருவ அமைப்பிலும் நிறையவே வித்தியாசம் காட்டியிருக்கிறார் ஆர்யா.
அனுஷ்காவிற்கு பூப்போலவும் புயல் மாதிரியும் இரண்டு கதாபாத்திரங்கள். காதல்காட்சிகளிலும் இன்னொரு பக்கம் சண்டைக்காட்சிகளிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். முதல் உலகத்தில் உள்ள அனுஷ்கா இறந்துபோனாலும் இரண்டாம் உலகத்தில் வரும் அனுஷ்கா அவருக்கும் சேர்த்து இழப்பை ஈடுகட்டிவிடுகிறார்.
இரண்டாம் உலகத்தை சிருஷ்டித்தற்கான மெனக்கெடல்களில் ஒளிப்பதிவாளர் ராம்ஜியின் பங்கு நிறையவே இருப்பது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது. ஹாரிஸின் இசையில் பாடல்கள் இனிமை. பின்னணி இசையில் அனிருத்தும் ஸ்கோர் செய்திருக்கிறார்.
வழக்கமான தமிழ்சினிமாவில் இருந்து மாறுபட்டு ஹாலிவுட் தரத்தில் ஒரு புதிய களத்தில் புதுவிதமான முயற்சியை மேற்கொண்டிருக்கிறார் செல்வராகவன். அதற்காகவே நாம் அவரை பாராட்டி ஆகவேண்டும். செல்வாவின் இந்த ஃபேண்டஸியான இரண்டாம் உலகத்திற்குள் சென்றுவரும் அனுபவம் உங்களுக்கும் கிடைக்கட்டும்.
தயாரிப்பு : பிவிபி சினிமாஸ்
Very interesting information!Perfect just what I was searching for!Blog range