விஸ்வரூபம்-2 படத்தை தொடர்ந்து கமல் அடுத்ததாக நடிக்க இருக்கும் படம் ‘உத்தம வில்லன்’. இந்தப்படத்தை கமலின் நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் தான் இயக்குகிறார். விஸ்வரூபம்-2 படத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் மே மாதம் தான் ரிலீஸ் என்பதாக முடிவு செய்திருக்கிறார்களாம்.
அதனால் ‘உத்தம வில்லன்’ படப்பிடிப்பை ஆரம்பித்து விடலாம் என முடிவு செய்து படத்தை நாளை மறுநாள்(மார்ச்-3) படத்தை எந்த வித பூஜையும் இன்றி ஆரம்பிக்க இருப்பதாக ரமேஷ் அரவிந்த் கூறியுள்ளார். மேலும் இதன் படப்பிடிப்பை ஜூன் மாதத்திற்குள் முடித்துவிட்டால் அடுத்ததாக ‘த்ரிஷ்யம்’ ரீமேக்கில் நடிக்க வசதியாக இருக்கும் என்று கமல் நினைக்கிறாராம்.
ரமேஷ் அரவிந்த் ஏற்கனவே கமலை வைத்து ‘சதிலீலாவதி’ படத்தின் ரீமேக்கை கன்னடத்தில் இயக்கி இருக்கிறார். இந்நிலையில் மீண்டும் தமிழுக்கு வர சரியான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரமேஷ் அரவிந்துக்கு ‘உத்தம வில்லன்’ படத்தை இயக்குவதன் மூலம் தமிழிலும் இயக்குனராகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
இந்தப்படத்தில் காஜல் அகர்வால், தமன்னா மற்றும் த்ரிஷா என மூன்று முன்னணி கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் இப்போது அவர்கள் இல்லையென்றும் விஸ்வரூபம் தோழிகளான ஆண்ட்ரியாவும் பூஜாகுமாரும் ஒருவேளை நடித்தாலும் நடிக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இயக்குனர் லிங்குசாமி தயாரிக்க இருக்கும் இந்தப்படத்தின் வசனங்களை கமலின் ஆஸ்தான வசனகர்த்தாவான கிரேசி மோகன் எழுதுகிறார்.