இசைஞானி இளையராஜா இத்தனைநாளும் செவிகளுக்கு விருந்தளித்து வந்தார். இப்போது நம் கண்களுக்கும் விருந்தளித்திருக்கிறார். இசையைப்போலவே அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று புகைப்படம் எடுப்பது. இப்படி பல வருடங்களாக அவர் எடுத்த புகைப்படங்களை பாதுகாப்பாக வைத்திருந்தார். ஐயாயிரத்திற்கும் மேற்ப்பட்ட அற்புதமான படங்களை ஃபிலிம் நிலையில் இருந்து மாற்றி அவைகளை கண்காட்சிக்காக வைக்க இளையராஜா திட்டமிட்டார். இதற்காக சென்னையின் பிரபல ஓவியர் ஸ்ரீதருடன் பேசி அவர் கண்காணிப்பில் இருக்கும் ‘ஆர்ட் ஹவுஸ்’ கேலரியில் கண்காட்சியாக வைக்கப்பட்ட்து. இந்த கண்காட்சியை நேற்று மாலை கலைஞானி கமல்ஹாசன் ரிப்பன் வெட்டி துவக்கி வைக்க, இயக்குனர் பாலுமகேந்திரா, பி.சி.ஸ்ரீராம், மிஷ்கின், பார்த்திபன், விவேக், கவிஞர் மு.மேத்தா, வின்செண்ட் அடைக்கலராஜ், ஓவியர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்துகொண்டனர். ஒவ்வொருவரும் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.
கமல் பேசும்போது, “இளையராஜா இசையில் எவ்வளவு வித்தகம் பெற்றவரோ அதே போல புகைப்படம் எடுப்பதிலும் வித்தகம் பெற்றவர். அவர் கையில் இப்போதும் கேமரா மட்டும் இருந்திருந்தால் பல கேமராமேன்களுக்கு வேலையிருந்திருக்காது. நல்லவேளை அது நடக்கவில்லை. நான் அப்போதே நினைத்தேன். இவைகளெல்லாம் ஒருநாள் கண்காட்சியாக வைக்கப்படும் என்று. அதற்கு இவ்வளவு நாள் ஆகிவிட்டது. பல்வேறு திறமைகள் படைத்த இளையராஜா இன்னும் பல திறமைகள் படைத்து அதையும் வெளிப்படுத்துவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.” என்று பேசினார்.
இந்த கண்காட்சி 15 ம் தேதி தொடங்கி 22 ம் தேதிவரை சென்னை கஸ்தூரிரங்கன் சாலையில் உள்ள ஆர்ட் ஹவுஸ் என்ற இடத்தில் நடைபெறுகிறது.