“நான் காமெடியனா நடிக்கமாட்டேன்னு சொல்லலையே” – கருணாஸ் விளக்கம்

252

கிட்டத்தட்ட நூறு படங்களுக்கு மேல் நடித்துவிட்டார் கருணாஸ். அதில் கதாநாயகனாக நான்கு படங்கள். கடந்த வருடம் அவர் கதாநாயகனாக நடித்த ‘சந்தமாமா’, ‘ரகளபுரம்’ படங்கள் அவரது எதிர்பார்ப்பை நிறைவேற்றவில்லை. கதாநாயகனான பிறகு காமெடி வேடங்களில் நடிப்பதில்லையே ஏன் என்று கருணாஸிடம் கேட்டோம்.

“நான் எப்பவுமே காமெடி வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று சொன்னதில்லை. காமெடி வேடங்கள் தான் ரசிகர்களிடம் அதிகம் கொண்டு சேர்க்கும். இப்போது பி.வி.பிரசாத் இயக்கத்தில் ‘சகுந்தலாவின் காதலன்’, தனுஷ் நடிக்க வெற்றிமாறன் இயக்கும் படம், கார்த்தி நடிக்கும் ‘கொம்பன்’ என பத்து படங்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன்” என்கிறார் கருணாஸ்.

நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகனாக தொடர்வதில்லையே என்றால் அதற்கும் சரியான விளக்கம் வருகிறது கருணாஸிடமிருந்து. “நகைச்சுவை நடிகர்களுக்கென்று ஒரு வரைமுறையான கதைகள் மட்டுமே பொருந்தும்.. பத்துப் பேரை அடிப்பது பஞ்ச்டயலாக் பேசுவது எதுவுமே காமெடி நடிகர்களுக்கு ஒத்துவராது. அப்படிப்பட்ட கதைகளில் நடித்தால் படத்தின் ரிசல்ட் வேற மாதிரி ஆகும்”.

மீண்டும் படம் தயாரிக்கும் எண்ணம் கருணாஸுக்கு இருக்கிறதா..? “நல்ல கதை கிடைத்து, சரியான தயாரிப்பாளர் கிடைக்காத போதுதான் நானே தயாரிப்பாளரானேன் அதனால் கொஞ்சம் கடனாகி விட்டது..அதையெல்லாம் கொஞ்ச கொஞ்சமாக அடைத்துக் கொண்டிருக்கிறேன். சிறிது காலத்திற்கு தயாரிப்பாளர் என்கிற கிரீடத்தை கழட்டிவைத்துவிட்டு நகைச்சுவை நடிகனாக மேக்கப் போடவே விரும்புகிறேன்” என்றார் கருணாஸ்.

Comments are closed.