‘ஹரா’ விமர்சனம்

74

நடிகர்கள் : மோகன், அனுமோல், யோகி பாபு, கெளசிக் ராம், அனிதா நாயர், சந்தோஷ் பிரபாகர், சிங்கம் புலி, வனிதா விஜயகுமார், பழ கருப்பையா
இசை : ரஷாந்த் அர்வின்
ஒளிப்பதிவு : பிரகாத் முனுசாமி, மோகன் குமார், விஜய் ஸ்ரீ ஜி
இயக்கம் : விஜய் ஸ்ரீ ஜி
தயாரிப்பு : கோவை எஸ்.பி.மோகன்ராஜ்

மகளின் தற்கொலைக்கான உண்மையான காரணத்தை தேடிச் செல்லும் நாயகன் மோகனுக்கு சமூகத்தில் நடக்கும் அதிர்ச்சிகரமான குற்ற செயல் பற்றியும், அதன் பின்னணி பற்றியும் தெரிய வருகிறது. அதனை நோக்கி பயணிப்பவர், தனது மகளின் மரணத்திற்கும் அவர்களுக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கிறார். மகளின் மரணத்திற்கு மட்டும் இன்றி சமூகத்திற்காகவும் அவர்களை களை எடுக்க களத்தில் இறங்கும் மோகன், அவர்களுக்கு எத்தகைய தண்டனை கொடுக்கிறார், அவர்கள் யார்?, என்ன செய்தார்கள்? என்பதை சொல்வது தான் ‘ஹரா’.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் மோகன், தனது வயதுக்கு ஏற்ற வேடத்தில் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார். ஆனால், படம் முழுவதும் அவ்வளவு பெரிய தாடியுடன் அவர் இருப்பது ஏன்? என்று தான் தெரியவில்லை.

மோகனின் மனைவியாக நடித்திருக்கும் அனுமோல், மகளாக நடித்திருக்கும் சுவாதி, வில்லனாக நடித்திருக்கும் சுரேஷ் மேனன், அமைச்சராக நடித்திருக்கும் வனிதா விஜயகுமார், முதலமைச்சராக நடித்திருக்கு பழ கருப்பையா, அனிதா நாயர் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

இளம் நாயர்களாக நடித்திருக்கும் அறிமுக நடிகர்கள் சந்தோஷ் பிரபாகர் மற்றும் கெளசிக் ராம் இருவரும், நாயகன் மோகனுக்கு மட்டும் இன்றி படத்திற்கும் பக்கபலமாக பயணித்திருக்கிறார்கள். சந்தோஷ் பிரபாகர் காதல் மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளில் முதல் படம் என்ற அடையாளம் தெரியாதவாறு நேர்த்தியாக நடித்திருக்கிறார். நல்ல வாய்ப்பு கிடைத்தால் கோலிவுட்டில் நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார்.

யோகி பாபு ஒரு காட்சியில் வந்தாலும் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார். அவருடன் சேர்ந்து சிங்கம் புலியும் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர்கள் பிரகாஷ் முனுசாமி, மோகன் குமார் மற்றும் விஜய் ஸ்ரீ ஜி ஆகியோரது ஒளிப்பதிவும், ராஷாந்த் அர்வினின் இசையும் சுமார் ரகம்.

எழுதி இயக்கியிருக்கும் விஜய் ஸ்ரீ ஜி, ஒன்றல்ல.. இரண்டல்ல…, பல விசயங்களை படத்தில் திணித்து ஆக்‌ஷன் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானர் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார். ஆனால், அதில் ஒன்றை கூட அவர் உறுப்படியாக சொல்லாததால் எதுவும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கவில்லை.

கதைக்களம் சமூகத்தில் நடக்கும் மிகப்பெரிய மோசடியை தோளுரித்து காட்டினாலும், அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளும் ஒரு திரைப்படமாக கொடுப்பதில் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தோல்வியடைந்திருக்கிறார்.

ரேட்டிங் 2/5

Comments are closed.