வளர்ந்து வரும் இளம் நடிகர் கௌதம் கார்த்திக்.. நடிகர் கார்த்திக்கின் மகன்.. அவரைப்பற்றி அவ்வபோது வெளியாகும் விஷயங்கள் அவர் தனது கேரியரை அவராகவே கெடுத்துக்கொள்கிறாரோ என்றே இத்தனை நாள் நினைக்க தூண்டியது.. ஆனால் இன்று பத்திரிகையாளர்களை முதன்முதலாக தனியே சந்தித்த கௌதம் கார்த்திக், அவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு எல்லாம் மனம் திறந்து பதிலளித்தார். அவர் பேசியதிலிருந்து சில விஷயங்கள்..
“நான் படித்தது எல்லாமே போர்டிங் ஸ்கூலில் தான்.. அதனால் தமிழ் சினிமா பார்க்கும் வாய்ப்பே கிடைக்கவில்லை.. அப்படியே போனாலும் அது ஆங்கிலப்படமாகத்தான் இருந்தது.. தாத்தா முத்துராமனை பற்றி எல்லோரும் பெருமையாக பேசுவதை கேட்கும்போதுதான் அவர் எவ்வளவு பெரிய சாதனையாளர் என்பது தெரிகிறது.. இப்போதுதான் அவர் நடித்த காதலிக்க நேரமில்லை படம் எல்லாம் பார்த்தேன்..
என் நடிப்பு விஷயத்தில் அப்பா தலையிடுவதும் இல்லை.. எந்த உதவிக்கும் வருவதுமில்லை.. எப்படி அவர் அப்பா இறந்த சமயத்தில் சினிமாவில் நுழைந்து தானாகவே தனியாக முடிவுகளை எடுத்து முன்னேறினாரோ அதேபோல என் விஷயத்தில் நல்லது கெட்டதுக்கான முடிவுகளை நானே எடுக்கட்டும் என விட்டுவிட்டார்.. அம்மாவும் இதில் சேர்த்தி தான்.
அதனால் தான் சினிமாவில் நுழைந்த சமயத்தில் பல விஷயங்களை என்னால் சரியாக புரிந்துகொள்ள முடியவில்லை.. நான் சரியாக இருந்தாலும் என்னை பற்றி தவறான விஷயங்கள் பரவுவதை நானும் உணர்ந்தேன்.. இந்த நேரத்தில் சில தவறான படங்களிலும் நடித்தேன்.. இப்போதுதான் சரியான படங்களை நானாகவே தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்துள்ளேன்” என கூறினார் கௌதம் கார்த்திக்.

Comments are closed.