’கோட்’ விமர்சனம்

194

நடிகர்கள் : விஜய், சினேகா, மீனாட்சி செளத்ரி, பிரஷாந்த், ஜெயராம், பிரபு தேவா, அஜ்மல், மைக் மோகன், யோகி பாபு, வைபவ், பிரேம் ஜி, அஜய், அரவிந்த் ஆகாஷ்
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு : சித்தார்தா நுனி
இயக்கம் : வெங்கட் பிரபு
தயாரிப்பு : ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் – கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ்

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் ‘கோட்’ ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? அல்ல பூஜ்ஜியம் ஆக்கியதா?, விமர்சனத்தை பார்ப்போம்

இந்த உளவுத்துறையில் பணியாற்றும் விஜய், பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல் ஆகியோருடன் சேர்ந்து பல்வேறு தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். அதன்படி, ரகசிய பணிக்காக தாய்லாந்து செல்பவர் உடன் தனது குடும்பத்தையும் அழைத்துச் செல்ல, போன இடத்தில் அவரது மகன் கடத்தப்படுகிறார். மகனை காப்பாற்றும் முயற்சியில் விஜய் ஈடுபடும் போது, அவரது மகன் இறந்து விடுகிறார். பிள்ளையின் பிரிவால் விஜயின் மனைவி சினேகா அவரை விட்டு பிரிந்து விட, விஜயும் தனது உளவாளியை பணியை விட்டுவிடுகிறார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது அரசாங்க பணிக்காக ரஷ்யா செல்லும் விஜய், அங்கு தனது மகனை சந்திக்கிறார். இறந்து விட்டதாக நம்பிய தனது மகனை அங்கு பார்த்ததும் மகிழ்ச்சியடையும் விஜய், அவர் ஆபத்தில் சிக்கியிருப்பதை அறிந்து அதில் இருந்து அவரை காப்பாற்றி தன்னுடன் சென்னைக்கு அழைத்து வருகிறார். மகன் வருகையால் பிரிந்த கணவன், மனைவி மீண்டும் ஒன்று சேர்கிறார்கள். குடும்பமே மகிழ்ச்சியில் இருக்க, திடீரென்று விஜயுடன் பணியாற்றுபவர்கள் ஒவ்வொருவராக கொலை செய்யப்படுகிறார்கள். கொலையாளியை கண்டுபிடிக்க மீண்டும் களத்தில் விஜய் இறங்க, அந்த கொலையாளியை எப்படி கண்டுபிடிக்கிறார்?, அவர் யார்?, எதற்காக விஜய் தரப்பினரை கொலை செய்கிறார்? போன்ற கேள்விகளுக்கான பதில் தான் ‘கோட்’ படத்தின் மீதிக்கதை.

காந்தி மற்றும் ஜீவன் என அப்பா, மகன் வேடங்களில் நடித்திருக்கும் விஜய், அப்பா கதாபாத்திரத்தில் நடிப்பு மற்றும் உடல் மொழியில் முதிர்ச்சியை நேர்த்தியாக வெளிப்படுத்தியிருப்பதோடு, மகன் கதாபாத்திரத்தில் நடிப்பில் வேகத்தையும், விவேகத்தையும் வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். வழக்கம் போல் சில இடங்களில் தனது குறும்புத்தனமான நடிப்பையும், கிண்டலான வசன உச்சரிப்பின் மூலமும் ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பவர், படம் முழுவதும் ரசிகர்களை குஷிப்படுத்த வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வலம் வந்திருக்கிறார்.

விஜயுடன் பணியாற்றும் அவரது நண்பர்களாக நடித்திருக்கும் பிரபுதேவா, பிரசாந்த், ஜெயராம், அஜ்மல் ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள். அப்பா விஜயின் மனைவியாக நடித்திருக்கும் சினேகா மற்றும் மகன் விஜயின் காதலியாக நடித்திருக்கும் மீனாட்சி செளத்ரி இருவரும் அளவாக நடித்திருக்கிறார்கள். மைக் மோகனுக்கு வில்லன் வேடம் எடுபடவில்லை.

பிரேம்ஜி, வைபவ், அஜய், ஆகாஷ் அரவிந்த் என இயக்குநர் வெங்கட் பிரபுவின் கோஷ்ட்டியும் சில இடங்களில் தலைகாட்டுகிறார்கள். யோகி பாபு சில காட்சிகளில் வந்தாலும் தனது வழக்கமான பாணியில் ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் மற்றும் திரிஷா ஆகியோரின் சிறப்பு தோற்றம் படத்திற்கு எந்தவிதத்திலும் சிறப்பு சேர்க்கவில்லை.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் சுமார் ரகம். ஒளிப்பதிவாளர் சித்தார்தா நுனியின் பணியை விட, வி.எப்.எக்ஸ் பணி தான் படத்தில் அதிகமாக இருக்கிறது. அது படத்திற்கு பல இடங்களில் கைகொடுக்கவும் செய்திருக்கிறது.

விஜயை அப்பா மற்றும் மகனாக காட்டிய தொழில்நுட்பத்தை மிக சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள். அதற்கு ஏற்றவாறு நடிகர் விஜயும் தனது உடல் மொழியிலும், நடிப்பிலும் வித்தியாசத்தை வெளிப்படுத்தி கதாபாத்திரங்களுக்கு பலம் சேர்த்திருக்கிறார்.

விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்த அதிரடி பஞ்ச் வசனங்கள் மற்றும் அரசியல் வசனங்கள் படத்தில் இல்லை என்றாலும், படம் முழுவதும் சிறு சிறு விசயங்களை தனது பாணியில் சொல்லி ரசிக்க வைத்திருப்பதோடு, ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் பின்னணியில் கிளைமாக்ஸை சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

படத்தில் பல குறைகள் இருந்தாலும், அந்த குறைகளை மக்கள் மறந்து போகும் அளவுக்கு இயக்குநர் வெங்கட் பிரபு, படத்தை முழுக்க முழுக்க கமர்ஷியலாக இயக்கியிருக்கிறார். விஜயின் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு படம் இல்லை என்றாலும், கமர்ஷியல் படத்தை விரும்புகிறவர்களுக்கு ஏற்ற வகையில் படம் இருக்கிறது.

ரேட்டிங் 3/5

Comments are closed.