’கேம் சேஞ்சர்’ விமர்சனம்

310

நடிகர்கள் : ராம்சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, பிரம்மானந்தம், அச்யுத் குமார், சுனில், வெண்ணிலா கிஷோர்
இசை : தமன்.எஸ்
ஒளிப்பதிவு : திரு
இயக்கம் : ஷங்கர்
தயாரிப்பு : ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் – தில் ராஜு

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், ராம்சரண் நடிப்பில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாகியிருக்கும் ‘கேம் சேஞ்சர்’ ரசிகர்களை என்ஜாய் பண்ணுகிறதா? அல்லது சோதிக்கிறதா?, விமர்சனத்தைப் பார்ப்போம்.

மக்களுக்கு நல்லதே செய்யாத ஆந்திர மாநில முதல்வர், இறக்கும் தருவாயில் நல்லாட்சி வழங்க நினைக்கிறார். ஆனால், அப்பாவுக்குப் பிறகு முதல்வர் பதவியை கைப்பற்ற நினைக்கும் அவரது இரண்டு மகன்களும் வழக்கம் போல் லட்சம், ஊழல் அடங்கிய ஆட்சியே தொடர் வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இதற்கிடையே, மாவட்ட கலெக்டராக பதவி ஏற்கும் ராம்சரண், தனது அதிரடியால் உழால் மற்றும் மோசடி ஆசாமிகளை ஆட்டம் காண செய்கிறார். அவரது இத்தகைய நடவடிக்கையால் முதல்வரின் இளைய மகனான அமைச்சர் எஸ்.ஜே.சூர்யா அவர் மீது பகையை வளர்க்க, திடீரென்று முதல்வர் இறந்து விடுகிறார். இதையடுத்து முதல்வராக பதவி ஏற்க தயாராகும் எஸ்.ஜே.சூர்யா, தன்னை அவமானப்படுத்திய கலெக்டர் ராம்சரணுக்கு பதிலடி கொடுக்க முடிவு செய்கிறார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், இறப்பதற்கு முன்பு தனது அரசியல் வாரிசாகவும், மாநிலத்தின் அடுத்த முதல்வராகவும் ராம்சரணை முதல்வர் அறிவித்த வீடியோ வெளியாகிறது. முதல்வரின் ஆசைப்படி ராம்சரண் முதல்வர் ஆனாரா?, அவரை அரசியல் வாரிசாகவும், முதல்வராகவும் அறிவிக்க காரணம் என்ன? என்பது தான் படத்தின் மீதைக்கதை.

மக்கள் பிரச்சனைக்காக போராடும் தலைவர் மற்றும் அரசு அதிகாரிகளின் பலம் என்ன? என்பதை வெளிக்காட்டும் மாவட்ட கலெக்டர் என இரண்டு வேடங்களில் அமர்க்களமாக நடித்திருக்கிறார் ராம்சரண். அப்பா மற்றும் மகன் என இரண்டு கதாபாத்திரங்களிலும் மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர், சில காட்சிகளில் கல்லூரி மாணவராக வந்து நடனம் மற்றும் காதல் காட்சிகள் மூலம் இளசுகளை ஈர்க்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் கியாரா அத்வானி, வழக்கமான ஷங்கர் படங்களில் வரும் கதாநாயகிகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் கூட இல்லாமல் சில காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அப்பா ராம்சரணுக்கு ஜோடியாக நடித்திருக்கும் அஞ்சலியின் கதாபாத்திரம் திரைக்கதையின் திருப்பங்களாக பயணித்திருப்பதோடு, அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறது.

எப்படியாவது முதல்வர் இருக்கையில் அமர வேண்டும் என்ற ஆசையில் வலம் வரும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தனது வழக்கமான பாணியில் நடித்திருந்தாலும், அவரது நடிப்பு காட்சிகளை தொய்வில்லாமல் கடத்த பெரிதும் உதவியிருக்கிறது.

முதல்வரின் மூத்த மகனாக அமைச்சர் மாவீரன் மாணிக்கம் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயராம், தான் வரும் அனைத்துக் காட்சிகளிலும் ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்.

ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, சுனில், நவீன் சந்திரா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களின் திரை இருப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் திரு காட்சிகளை கலர் புல்லாகவும்ம், பிரமாண்டமாகவும் படமாக்கியிருக்கிறார்.

இசையமைப்பாளர் தமன்.எஸ்-ன் பாடல்களில் பழைய பாடல்களின் சாயல் தெரிகிறது. பின்னணி இசையிலும் இயக்குநர் ஷங்கரின் முந்தைய படங்களின் சாயல் தெரிகிறது. ஆக மொத்தம் குறிப்பிட்டு சொல்வதற்கு இசையில் புதிதாக ஒன்றும் இல்லை.

படத்தொகுப்பாளர்கள் சமீர் மொஹமத் மற்றும் ரூபன் இருவரும் தயாரிப்பாளர் செலவு செய்தது திரையில் தெரிய வேண்டும் என்ற நோக்கத்தோடு பணியாற்றியிருக்கிறார்கள்.

சமூக பிரச்சனைகளை கமர்ஷியலாக சொல்வதோடு, கலகலப்பாகவும் சொல்வதில் கிள்ளாடியான இயக்குநர் ஷங்கர், தனது வழக்கமான பாணியில் அரசியல்வாதிகளின் ஊழல்களை உலகிற்கு எடுத்துறைக்கும் ஒரு படைப்பாக மட்டும் இன்றி, மக்கள் ஆட்சி என்றால் எப்படி இருக்க வேண்டும்? என்ற சாமானிய மக்களின் கனவை திரை மொழியில் சொல்லியிருக்கிறார்.

தமிழக அரசியல் குடும்பத்தை சீண்டும் வகையில் காட்சிகளை வைத்திருக்கும் இயக்குநர் ஷங்கரின் தைரியத்தை பாராட்டியாக வேண்டும். அதே சமயம், ஒரு தர்ப்பினரை மட்டுமே குறை சொல்லும் இயக்குநர் ஷங்கர் பொதுப்படையாக அரசியல்வாதிகளின் மக்கள் எதிர்ப்பு போக்கை விமர்சித்திருந்தால் நிச்சயம் இந்த ‘கேம் சேஞ்சர்’ அரசியல் உலகிலும், திரையுலகிலும் பெரு மாற்றத்தை நிகழ்த்தியிருக்கும்.

ரேட்டிங் 3/5

Comments are closed.