கமலின் கனவுப்படம் என்றால் அது நிச்சயமாக ‘மருதநாயகம்’ தான்.. பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த முகமது யூசுப்கான் என்கிற மருதநாயகம் என்ற வீரனைப் பற்றிய இந்த கதையை மிக பிரமாண்டமான வரலாற்றுப் படமாக எடுக்க நினைத்தார் கமல்.
தனது லட்சியக்கனவை நனவாக்கும் விதமாக 1997ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணியை சென்னைக்கு அழைத்துவந்து மிகப்பெரிய ஆரம்ப விழா ஒன்றையும் நடத்தி அனைவரையும் பிரமிக்க வைத்தார். ஆனால் அதன்பின் நிதி வசதி உட்பட பல்வேறு காரணங்களால் இந்தப்படத்தை எடுக்கும் திட்டத்தை கைவிட்டிருந்தார் கமல்.
இரு தின்ங்களுக்கு முன் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரித்துள்ள ‘குக்கூ’ என்ற படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார் கமல். அப்போது விழாவில் பேசிய தயாரிப்பாளர் சங்க தலைவர் கே.ஆர், கமல் வெளிநாட்டில் பிறந்திருந்தால் ஹாலிவுட்டையே ஆட்சி செய்திருப்பார் என கமலை புகழ்ந்தார்.
மேலும் கமலின் கனவுப்படமான ‘மருதநாயகம்’ நிதிப்பற்றாக்குறை காரணமாக முடங்கிக் கிடப்பது குறித்து வருத்தப்பட்ட கே.ஆர், ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் அந்தப்படத்தை தயாரிக்க முன்வந்தால் நன்றாக இருக்கும்” என ஒரு கோரிக்கையையும் வைத்தார். கமல் ரசிகர்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பும் கூட அதுதான்.. ஃபாக்ஸ் ஸ்டார் நிறைவேற்றுமா..?