“படங்களின் மீது வழக்கு தொடர 1௦ சதவீதம் பணம் கட்டவேண்டும்” கே.ஆர் வலியுறுத்தல்

212

கொம்பன் படத்திற்கு ரிலீஸ் நேரத்தில் எழுந்த தேவையில்லாத பிரச்சனை திரையுலகினரை ரொம்பவே பாதித்துவிட்டது. இப்படி தடி எடுத்தவரெல்லாம் தண்டல்காரன் ஆகும் போக்கை கட்டுப்படுத்தும் விதமாக இனி திரைப்படங்கள் மீது வழக்கு தொடர்பவர்கள் படத்தின் பட்ஜெட்டில் பத்து சதவீதம் தொகையை கோர்ட்டில் கட்டிவிட்டு வழக்கு தொடர நீதிமன்றம் வழிவகை செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளார் முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவரான கேயார்..

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வழக்கு தொடர யாருக்கும் உரிமை உண்டுதான். ஆனால் கோடிகளில் பணத்தை கொட்டி, கந்துவட்டிக்கு கடன் வாங்கி படத்தை எடுத்து, அதை ரிலீஸ் பண்ண தியேட்டர்களை ஒப்பந்தம் செய்து தேதியையும் அறிவித்த பின்னர், சம்பந்தமில்லாத யாரோ ஒருவர் படத்திற்கு தடை கேட்டு நீதிமன்றம் செல்லும் போக்கு தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

பணம் போட்ட ஒரு தயாரிப்பாளரின் வலி என்னவென்று வழக்கு போடுபவர்கள் உணர்வதில்லை. வழக்கு தயாரிப்பாளர்களுக்கு சாதகமாக முடிந்தாலும் வழக்கு தொடுத்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. அதனால் இனி இதுபோன்று பலரும் கிளம்பி வருவதை தடுக்கவேண்டுமானால், படத்தின் பட்ஜெட்டில் பத்து சதவீதம் தொகையை கோர்ட்டில் கட்டிவிட்டு வழக்கு தொடர நீதிமன்றம் வழிவகை செய்யவேண்டும். அப்போதுதான் சுய விளம்பரங்களுக்காக இதுபோன்ற பொய் வழக்குகள் போடப்படுவது குறையும்” என அதில் குறிப்பிட்டுள்ளார் கேயார்.

Comments are closed.