
தமிழ் சினிமாவை பொறுத்தவரை தொழில்நுட்ப ரீதியாக நாளுக்கு நாள் பல புதுமைகளை புகுத்தி வருகிறது.. தரம் ஒன்றையே குறிக்கோளாக மனதில் கொள்வதால், தொழில்நுட்பத்தால் அதிகரிக்கும் பட்ஜெட் இரண்டாம் பட்சமாகத்தான் படைப்பாளிகளுக்கு தோன்றுகிறது…
நல்ல விஷயம் தான்.. ஆனால் இன்றைய தேதியில் இப்படி கோடிகளை கொட்டி படம் எடுப்பதும எளிதுதான். ஆனால் அந்தப்படத்தை விற்பனை செய்வது, அதனை தியேட்டர்களில் நல்லபடியாக ஒடவைப்பது, படத்திற்கு சரியான பப்ளிசிட்டி செய்வது இதற்கெல்லாம் சரியான திட்டமிடலும் மார்கெட்டிங் திறமையும் வேண்டும். குறிப்பாக முதல் போட்ட அனைவருக்கும் பழுதில்லாமல் அது கைக்கு திரும்பி வரவேண்டும்..
அந்த வகையில் ஏற்கனவே படங்களை தயாரித்தும் நல்ல படங்களை வாங்கி வெளியிட்டும் முன்னனியில் இருந்துவரும் தயாரிப்பு நிறுவனமான ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோகிரீன் நிறுவனமும் தொடர்ந்து வெற்றிப்படங்களை தந்துகொண்டிருக்கும் சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டெர்டெயின்மென்ட்ஸ், சஷிகாந்த்தின் ஓய் நாட் ஸ்டுடியோ, எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட், அபினேஷின் அபி&அபி மற்றும் லக்ஷ்மண் குமாரின் பிரின்ஸ் பிக்சர்ஸ் ஆகிய ஆறு நிறுவனங்களும் இணைந்து தற்போது இந்த மார்க்கெட்டிங் முறையில் ஒரு புதிய முயற்சியாக ‘ட்ரீம் பேக்டரி’ என்கிற புதிய நிறுவனத்தை கடந்த ஜூலை மாதம் துவங்கின.
இப்படி பல தயாரிப்பு நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து ஒரே நிறுவனத்தின் கீழ் இயங்க தொடங்கியிருப்பது தமிழ்சினிமாவில் இதுதான் முதல்முறை.. மேலும் இது ஆரோக்கியமான விஷயமும் கூட. ஆனால் இவ்வளவு பெரிய டீம் அமைந்து மார்க்கெட்டிங்கில் பல புதிய உத்திகளை கடைபிடித்தாலும் தற்போது பட வினியோக முறையில் இருக்கும் பழைய சிஸ்டம் மிகப்பெரிய சவாலாகவே உள்ளது.
இந்த சவாலை எதிர்கொள்ளும் விதமாக என்.ஆர்.ஏ (NRA –Non Refundable Advance) அதாவது திருப்பித்தரப்படாத முன்தொகை என்கிற புதிய சிஸ்டத்தை தற்போது பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்த ட்ரீம் பேக்டரி தயாராகியுள்ளது.. இது ஏற்கனவே ஆந்திராவில் தற்போது நடைமுறையில் வெற்றிகரமாக உள்ள சிஸ்டம் தான்.. இதன் அடிப்படை நோக்கமே விநியோகஸ்தர்களின் ரிஸ்க்கை வெகுவாக குறைப்பதும் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கவைப்பதும் தான்.
இதுவரை உள்ள எம்.ஜி எனப்படுகின்ற மினிமம் கியாரண்டி முறையில் படங்களை வாங்குவதில் விநியோகஸ்தர்களுக்கு கிடைப்பது என்ன? உதாரணத்திற்கு ஒரு படத்தை ஒரு விநியோகஸ்தர் 1 கோடி ரூபாய்க்கு வாங்குகிறார்.. படம் சுமாராக ஒன்றரை கோடி சம்பாதிக்கிறது என்று வைத்துக்கொண்டால் லாபம் மட்டும் 50 லட்சம்.. இதில் விநியோகஸ்தர்களுக்கு 15% ரிஸ்க் கமிஷன் என்கிற வகையில் 15 லட்சமும் லாபத்தில் பாதியாக 25 லட்சமும் சேர்த்து, ஆக மொத்தம் 40 லட்சம் லாபம் கிடைக்கிறது.
ஆனால் மினிமம் கியாரண்டி முறையில் படத்தை விற்கும் தயாரிப்பாளர்களுக்கு இதன் மூலம் வரும் லாபம் வெகு குறைவாகவே இருக்கிறது. படம் லாபகரமாக ஓடினாலும் மேற்கொண்டு வருமானம் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்க வழியில்லாமல் இருக்கிறது. அதனால்தான் தயாரிப்பாளர்கள் தங்களது படத்தை எவ்வளவு அதிகமாக விற்கமுடியுமோ அவ்வளவு அதிகமாக விற்க முயற்சி செய்கிறார்கள்.. இப்படி அதிக விலைகொடுத்து வாங்கிய படம் நன்றாக ஓடாதபோது விநியோகஸ்தர்களும் பெரும் நஸ்டத்தை சந்திக்கிறார்கள். இதனாலேயே பல விநியோகஸ்தர்கள் இன்று திரையுலகை விட்டே காணாமல் போய்விட்டார்கள்.
ஆனால் மேற்கூறிய என்.ஆர்.ஏ முறையில் திருப்பித்தரப்படாத முன்தொகை பெற்றுக்கொள்ளப்படும்.. ஆனால் கிடைக்கும் லாபம் தயாரிப்பாளர்களுக்கும் வினியோகஸ்தர்களுக்கும் சம அளவில் பிரித்து தரப்படும். அதுமட்டுமல்ல, தற்போது ஒரு நடிகரின் படம் ஹிட்டாகி கிட்டத்தட்ட 20 கோடி வசூலிக்கிறது என்றால் அவரது அடுத்த படத்திற்கான விலையாக அந்த 20 கோடியே விநியோகஸ்தர்களின் முன்னால் வைக்கப்படுகிறது. ஆனால் இந்த என்.ஆர்.ஏ சிஸ்டத்தில் 10 கோடி என்கிற அளவில் மிகவும் நியாயமான விலையே அவரது படத்திற்கு நிர்ணயம் செய்யப்படும். கிடைக்கும் லாபம் வழக்கம்போல சரிசமமாக பங்கிடப்படும்.
உதாரணத்திற்கு ஆந்திராவில் இதற்குமுன் வெளியாகிய மகேஷ்பாபுவின் படம் ஒரு ஏரியாவில் மட்டும் 23 கோடி வசூலித்தது. ஆனால் அவரது அடுத்த படத்திற்கு அதே தொகையை நிர்ணயித்து விடாமல் மீண்டும் 10 கோடி என்கிற அளவிலேயே நிர்ணயம் செய்தார்கள்.. இதனால் இரு தரப்பினருக்குமே நல்ல லாபம் கிடைத்தது.
தற்போது இந்த என்.ஆர்.ஏ முறையத்தான் நவ-28 ஆம் தேதி வெளியாகவுள்ள ‘காவியத்தலைவன்’ பட வினியோகத்தில் பின்பற்றியுள்ளதாகவும் இது நல்ல பலனை தரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் ட்ரீம் பேக்டரி நிறுவனத்தின் தலைமை வினியோக அதிகாரி சக்திவேலன்…
சமீபகாலமாக சித்தார்த்தின் படங்கள் வெற்றியடைந்து நல்ல வசூலையும் ஈட்டி வருகின்றது. வசந்தபாலன் இயக்கமும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் கூடவே சேர்ந்திருப்பதால் அந்த வகையில் இந்த காவியத்தலைவனும் உலகளாவிய ரசிகர்களை கவர்ந்திழுக்கும் என்பதில் சந்தேகமில்லை. தெலுங்கில் வெற்றிகரமாக உள்ள இந்த என்.ஆர்.ஏ சிஸ்டத்தை தமிழில் ‘காவியத்தலைவன்’ படம் வெற்றிகரமாக ஆரம்பித்துவைத்து, தமிழ்சினிமா வியாபாரத்தில் ஒரு புரட்சியை உண்டுபண்ணும் என நம்புவோம்
– சின்னமனூர் விஜயகுமார்
Comments are closed.