ஆட்டிசம் குறைபாடு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஏப்ரல் 2ம் நாள் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு ‘பேரன்புடன்’ என்கிற குறும்படத்தின் சிறப்புத் திரையிடல் சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரபல திரைப்பட இயக்குநர் வசந்த், பின்னணிப் பாடகி சைந்தவி ஆகியோர் கலந்துகொண்டனர். குழந்தைகள் இசைத்து, நடனம் ஆடி, பாடி தங்களை வெளிப்படுத்திய ஒரு நெகிழ்வான விழாவாக அதைப் பார்க்க முடிந்தது.
இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் வசந்த், “ஆட்டிசம் விழிப்புணர்வு குறித்த ‘பேரன்புடன்’ என்கிற மிக அற்புதமான இந்தக் குறும்படம் மிகப்பெரிய அளவில் கொண்டு செல்லப்பட வேண்டும்..
இணையதளத்தில் பதிவேற்றுவதற்கு முன்பாக இந்தக் குறும்படத்தை உலகத் திரைப்பட விழாக்களிலும் கலந்துகொள்ளச் செய்யுங்கள்.. அதற்கு எந்தவகையிலும் உதவி செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்.
இந்த தெய்வக் குழந்தைகளின் ஒவ்வொரு நிமிடங்களையும் மதித்து அவர்களுடன் மகிழ்ச்சியாக கழித்துவரும் பெற்றோர்களை பார்க்கும்போது அவர்களின் கால்களில் விழுந்து வணங்க தோன்றுகிறது” என்றார் நெகிழ்ச்சியுடன்.
பின்னணி பாடகி சைந்தவி பேசும்போது, “எல்லோருமே தங்களுக்கு பிறக்கும் குழந்தை எந்தவிதமான குறைபாடுகளும் இல்லாமல் பிறக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறோம்.. ஆனால் சில நேரங்களில் இப்படிப்பட்ட தெய்வக் குழந்தைகள் பிறந்துவிடுகின்றனர்..
இவர்களைக் குறைபாடுள்ள நோயின் பெயரால் அழைப்பதை விட, தெய்வக் குழந்தைகள் எனச் சொல்வதுதான் சரியாக இருக்கும். அவர்களது குறைபாடுகளைக் கண்டு ஒதுக்காமல் நம்மைப்போல சக மனிதர்களாகப் பார்க்கவேண்டும். அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடவேண்டும்..
இந்தக் குறும்படம் ஆட்டிசம் விழிப்புணர்வு குறித்து அழகாக பேசியுள்ளது” எனக் கூறினார்.

Comments are closed.