‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’, ‘திருப்பதி’ன்னு விஜய், அஜித்தை வச்சு சூப்பர்ஹிட் படங்களை தந்தவர் டைரக்டர் பேரரசு. தமிழில் சமீபகாலமாக அவர் டைரக்ஷனில் வெளியான படங்கள் சரியாக போகவில்லை. அதனால் மீண்டும் ஒரு சூப்பர்ஹிட் படம் தந்தே தீருவது என்ற வைரக்கியத்துடன் தற்போது ‘திகார்’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார் பேரரசு. இது மலையாளத்தில் மம்முட்டி நடித்து 22 வருடங்களுக்கு முன் வெளியாகி சூப்பர்ஹிட்டான ‘சாம்ராஜ்யம்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வருகிறது.
இந்தப்படத்தில் நகரத்தையே நடுநடுங்க வைத்து போலீஸ், சட்டம் என எதையும் மதிக்காமல் வாழும் மிகப் பெரிய டான் அலெக்ஸ்சாண்டர் என்ற வேடத்தில் பார்த்திபன் நடிக்கிறார். பார்த்திபன் ஜோடியாக நடிக்கும் கதாநாயகி தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இன்னொரு நாயகனாக மலையாள இளம் முன்னணி நடிகர் உன்னி முகுந்தன் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அகன்ஷா பூரி, கிருதிபாபட் இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், மனோஜ் கே.ஜெயன், ரியாஸ்கான், தேவன், ஆகியோரும் நடிக்கிறார்கள். படத்தின் பாடல்களை பேரரசுவே எழுதியிருக்கிறார். படத்தின் பெரும்பகுதி காட்சிகளை துபாய், ஸ்பெயின், மும்பை போன்ற இடங்களில் பலகோடி செலவு செய்து படமாக்கி இருக்கிறார்கள். இதன் அடுத்தகட்டப் படப்பிடிப்பு சென்னையில் இன்று துவங்குகிறது.