
தேனி மாவட்டம் குக்கிராமத்தில் இருந்து மதுரைக்கு சென்று டாக்டருக்கு படிக்கிறார் விஜய்சேதுபதி.. தமன்னா, சிருஷ்டி டாங்கே என இரண்டு பெண்கள் அவரது கல்லூரி வாழ்க்கையில் குறுக்கிட்டும் கூட, டாக்டரான பின் அவர் மனம் நாடுவது என்னவோ கிராமத்து பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷையும், கிராமத்தில் மேற்கொள்ளும் மருத்துவப்பணியையும் தான்..
ஆனால் எதிர்பாராதவிதமாக அவரது சகோதரர்களாலேயே அவரது திருமணமும் நின்றுபோய், அத்துடன் காதலியையும் பறிகொடுத்து குடிகாரனாக மனநலம் பாதிகப்பட்டவனாக மாறுகிறார் விஜய்சேதுபதி.. இதனால் குடுமப்த்தில் பிரச்சனைகள் தலைதூக்க, உடன்பிறந்த சகோதரர்களே அவரை கொல்ல முயற்சிக்கிறார்கள். அம்மா ராதிகாவின் உதவியுடன் தப்பியோடும் விஜய்சேதுபதி, கல்லூரியில் தன்னுடன் படித்த இரண்டு பெண்களையும் தேடி கிளம்புகிறார். இதில் தமன்னாவை கண்டுபிடிக்கும் விஜய்சேதுபதியை தடம் மாற்றி, அவரை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வருகிறார் தமன்னா.
ஊரைவிட்டு போகும்போது அவசரத்தில் தவறுதலாக சகோதரர்கள் நடத்தும் ஏலச்சீட்டு பணம் உள்ள பையை எடுத்து செல்கிறார் விஜய்சேதுபதி… அதனால் ஊரில் அவரது சகோதரர்கள் பணம் கட்டியவர்கள் முன் அவமானப்பட்டு, சொத்துக்கள் அனைத்தையும் இழந்து நடுத்தெருவுக்கு வருவதுடன் விஜய்சேதுபதிக்கு திருட்டுப்பட்டமும் கட்டுகிறார்கள்.
விஜய்சேதுபதிக்கு தான் செய்த தவறு தாமதமாக தெரிய வர, சகோதரர்களிடம் மன்னிப்பு கேட்டு, பணத்தை கொடுத்துவிட்டு தனது தாயை தன்னுடன் அழைத்துச்செல்ல ஊருக்கு வருகிறார். ஆனால் அவர் வரவை எதிர்பார்த்து கொலைவெறியுடன் காத்திருக்கிறார்கள் சகோதரர்கள்.. தர்மதுரையின் கதி என்ன ஆனது என்பது க்ளைமாக்ஸ்.
நாயகன் தர்மதுரை கேரக்டரில் விஜய்சேதுபதி, காட்சிக்கு காட்சி காதல், நட்பு, பாசம், கோபம் என நவரச நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். அம்மாவை மம்மி என அவர் ஸ்டைலில் செல்லமாக கொஞ்சுவது, வில்லங்கம் பண்ணும் அண்ணன் தம்பிகளிடம் முறைப்பது, கல்லூரி புரபசர் ராஜேஷிடம் மட்டையாய் மடங்குவது, தன்னை காதலிக்கும் இரு பெண்களையும் அழகாக சமாளிப்பது என மொத்தப்படத்திலும் இவரது சுமை அதிகம் என்றாலும் அழகாக சுமந்திருக்கிறார்.
சேலை கட்டிய கிராமத்து தமன்னாவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது நமக்கு பாக்கியமே. விஜய்சேதுபதியின் வாழ்க்கையில் உள்ளே நுழையும் தருணங்களில் மிகப்பிரமாதமான உணர்வுகளை கண்களிலேயே வெளிப்படுத்துகிறார் தமன்னா.. கல்லூரியில் விஜய்சேதுபதியை ஒருதலையாய் காதலித்து, படபடவென பேசும் சிருஷ்டி டான்கேவுக்கு இந்த கேரக்டர் நிச்சயம் புதுசு.
கிராமத்து மயிலாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய்சேதுபதியை அண்ணா என அழைப்பதும், பிறகு அவருக்கே மனைவியாகப்போகும் சூழலில் சங்கோஜம் காட்டி பின்னர் மாமா என்று அழைப்பதுமாக வெள்ளந்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவரது தந்தையாக வரும் எம்.எஸ்.பாஸ்கர் யதரத்தமான கிராமத்து தந்தையை கண்முன் நிறுத்துகிறார்.
நான்கு பையன்கள் இருந்தாலும் விஜய்சேதுபதியின் மீது மட்டற்ற அன்பு கொண்ட அம்மாவாக நடித்துள்ள ராதிகாவின் நடிப்பில் என்ன குறை சொல்ல முடியும்..? சான்ஸே இல்லை.. அதிலும் விஜய்செதுபதியை போலீசில் இருந்து தப்புவிக்க, தனது மற்ற இரு மகன்களை மாட்டிவிடுவது செம பஞ்ச். மாணவர்களை கிராமத்து மருத்துவப்பணியை நோக்கி திசைதிருப்பிவிடும் கல்லூரி புரபஷராக நீண்ட நாட்கள் கழித்து நிறைவான கேரக்டரில் நடித்திருக்கிறார் ராஜேஷ். அளவெடுத்து தைத்த சட்டை போல கஞ்சா கருப்புவின் காமெடி சரியான எல்லைக்குள் நின்று சிரிக்க வைக்கிறது. விஜய்சேதுபதியின் அக்கா, மாமா இருவரும் சரியான தெற்கத்தி மனிதர்களின் அச்சு அசலாக இருக்கிறார்கள்.
கதையோட்டத்துடன் இருந்து காட்சிக்கு காட்சி பார்வையாளர்களுக்கு விதவிதமான உணர்வுகளை கடத்துகிறது யவன் சங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும்.. அதனுடன் ரயில் தண்டவாளம் போல இணைந்து பயணித்திருக்கும் சுகுமாரின் ஒளிப்பதிவு தென் மாவட்டங்களின் இயற்கை அழகை அள்ளி வந்திருகிறது.
மண்மணம் மாறாத கிராமத்து பின்னணியில் அழகாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் சீனுராமசாமி. மருத்துவம் படிக்கும் மாணவர்கள் கிராமத்து எளிய மக்களுக்காக தங்களை அர்ப்பணிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். காட்சிக்களை அழகாக கோர்வையாகவும், தேவைப்படும் திருப்பங்களுடன், நெகிழ்ச்சியுடனும் வடிவமைத்து குடும்பத்துடன் பார்க்கவேண்டிய படமாக கொடுத்துள்ளார் சீனுராமசாமி..
இந்த தர்மதுரை ரசிகனை இரண்டரை மணி நேரம் கட்டிப்போட்டு தன்வசப்படுத்திவிடுகிறான் என்பதுதான் உண்மை.
Comments are closed.