டிமாண்டி காலனி – விமர்சனம்

227

பிரிட்டிஷ் ஆட்சி நடந்த காலத்தில் இறந்துபோன டிமாண்டி என்கிற மனிதர் ஆவியாக சுற்றும் பங்களா.. விபரம் அறியாத விடலை பையன்கள் நான்கு பேர், அதில் உள்ளே நுழைவதுடன் அங்கிருந்து டிமாண்டிக்கு சொந்தமான ஒரு பொருளையும் எடுத்துக்கொண்டு வந்துவிடுகிறார்கள். பேய்க்கதைக்கு இந்த ஒன் லைன் போதாதா..? இதை வைத்து மிரட்டி எடுத்திருக்கிறார் இயக்குனர் அஜய் ஞானமுத்து.

ஆக்‌ஷன், காமெடி, த்ரில்லர் என எந்தப்படமாக இருந்தாலும் ஹீரோயிசம் காட்டாமல், படத்தில் தன்னை ஒரு கதாபாத்திரமாகவே மாற்றிக்கொள்ளும் அருள்நிதியை மீண்டும் ஒருமுறை பாராட்டியே ஆகவேண்டும். இதிலும் தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சரியாக பிரதிபலித்திருக்கிறார்.

அருள்நிதியின் நண்பர்களாக நடித்துள்ள ‘சூதுகவ்வும்’ ரமேஷ் திலக், சனத், அபிஷேக் ஜோசப் ஆகியோர் தாங்களும் பயந்து நம்மையும் பயப்படுத்தும் வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக ரமேஷ் திலக் காட்டும் விதவிதமான முகபாவங்கள் அசத்தல்.

அடுத்து என்ன நடக்கப் போகிறது, என்பது தான் திகில் படங்களில் முக்கிய அம்சம். ஆனால், இங்கே த்ரில்லான அந்த விஷயத்தை முன்கூட்டியே சொல்லிவிட்டு, அதன்பின்னும் சுவராஸ்யம் குரையாமல் கொண்டுசென்றுள்ளார் இயக்குனர் அஜய்யின் தைரியத்தை மெச்சித்தான் ஆகவேண்டும்.

சொல்லப்போனால் ஒரே ரூமை வைத்துக்கொண்டு, அதிலேயே ஒளிப்பதிவாளர் அரவிந்த் சிங்குடன் இணைந்து கலக்கியுள்ளார் அஜய். கேபா ஜெரமியாவின் பின்னணி இசையும் மிரட்டலுக்கு துணை நிற்கிறது. வழக்கமாக ஒரேமாதிரி பயமுறுத்தும் நம்ம ஊர் பேய்களை பார்த்து பழகியவர்களுக்கு, இந்த டிமாண்டி பேய் புது அனுபவத்தை தரும் என்பது உறுதி.

Comments are closed.