‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் வெளிவந்து பெரும் வரவேற்புபெற்ற ‘வட்டியும் முதலும்’ தொடரின் எழுத்தாளரும், லிங்குசாமியிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவருமான ராஜு முருகன் இயக்கியிருக்கும் அறிமுகப் படம் ‘குக்கூ’. ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், புதுமுகம் மாளவிகா, ‘ஆடுகளம்’ முருகதாஸ் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தனது வித்தியாசமான இசையின் மூலம் தொடர்ந்து ஹிட் பாடல்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
‘இருண்ட உலகம்’ என நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பார்வையிழந்தவர்களின் வாழ்க்கையில் உள்ள வெளிச்சமான பக்கத்தை காட்டியிருக்கிறது இந்த ‘குக்கூ’.
ரயிலில் சின்னச் சின்னப் பொருட்களை விற்றுப்பிழைக்கும் பார்வையிழந்தவன் தமிழ் (தினேஷ்). மற்றவர்களிடமிருந்து எந்த ஒரு சிறு உதவியையும் எதிர்பார்க்காத டீச்சர் டிரெயினிங் படிக்கும் பார்வையிழந்த பெண் சுதந்திரக்கொடி (மாளவிகா). இவர்கள் இருவரைச் சுற்றியும் இன்னும் பல பார்வையிழந்தவர்கள். தமிழுக்கும், சுதந்திரக்கொடிக்கும் காதல் மலர்கிறது. வழக்கம்போல் காதலுக்கு எதிரியாக பணத்தாசை பிடித்த சுதந்திரக்கொடியின் அண்ணன் குறுக்கே வருகிறான். முடிவில் இவர்கள் காதல் என்னவானது என்பதை நெகிழ நெகிழச் சொல்லியிருப்பதே இந்த குயிலின் ஓசை!
நாம் தினந்தோறும் பார்க்கும் விழியிழந்த மனிதர்களைப் பற்றிய கதைதான். ஆனால், அவர்களுக்குள்ளும் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என படம் பார்க்கும் ரசிகர்களின் விழிகளை விரிய வைத்திருக்கிறார் இயக்குனர் ராஜு முருகன். அறிமுக இயக்குனராக கவனம் பெற்றவர்கள் லிஸ்டில் ராஜு முருகன் ரொம்பவும் எளிதாக வந்தமர்கிறார். வெல்கம் இயக்குனரே!
ஓசையை வைத்தே பாதையை அமைக்கும் இந்த எளிய மனிதர்களின் உலகத்தில்தான் எத்தனை நல்லவர்கள். ஒருவருக்கொருவர் உதவியாகவும், அன்பாகவும், சந்தோஷமாகவும் அவர்கள் வாழும் வாழ்க்கையைப் பார்த்தால், அவர்கள் மேல் நமக்கு இனி பரிதாபம் பிறக்காது. அவர்களும் நம்மைப் போன்ற சராசரி மனிதர்கள்தான் என எண்ணத் தோன்றும் அளவுக்கு காட்சிகளை பிரமாதமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர். சீண்டல்களும், கிண்டல்களும், கோபமும், காதலும் அவர்களுக்குள்ளும் இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு நமக்கு இரண்டு கண்கள் போதாது!
பார்த்த காதல், பார்க்காமல் காதலித்து பார்வையில் முடிந்த காதல், நாக்கை அறுத்து ஊமையாகிப்போன காதல் என ஏற்கெனவே தமிழ்சினிமா நிறைய காதல் கதைகளைப் பார்த்திருக்கிறது. ஆனால், இந்த ‘குக்கூ’ காதல் உண்மையிலேயே தெய்வீகக் காதல்தான்! நல்ல மனங்களுக்கிடையே உருவாகும் உணர்வுபூர்வமான காதல்! திரையில் பாருங்கள்… பார்க்கும் ஒவ்வொருக்கும் விழியோரம் துளி நீராவது எட்டிப் பார்க்கும்.
தினேஷும், மாளவிகாவும் பார்வையிழந்தவர்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள். தினேஷின் நண்பராக நடித்திருப்பவர் உண்மையிலேயே பார்வையிழந்தவர் என்பதால் அவர் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார்!. இப்படத்தில் வரும் சின்னச் சின்ன கேரக்டர்கள் கூட அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். படத்தின் வெற்றிக்கு இவர்கள் அனைவரின் பங்களிப்பும் மிக முக்கியமானது.
ஒளிப்பதிவும், இசையும் இப்படத்தின் இரு கண்கள்! ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.கே.வர்மா. அதேபோல் ஒவ்வொரு பாடலும் திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டும் ரகம். 80களில் வெளிவந்த இளையராஜாவின் பாடல்களைத் திரும்பவும் கேட்டதுபோல் இருக்கிறது சந்தோஷ் நாராயணன். குட் ஒர்க்! எடிட்டிங் மட்டுமே கொஞ்சம் ஏமாற்றம். கொஞ்சம் இழுவையாக இருக்கும் காட்சிகளை யோசிக்காமல் வெட்டியிருக்கலாமே? அதேபோல் க்ளைமேக்ஸும் கொஞ்சம் நீளமாக்கப்பட்டது போன்ற உணர்வைக் கொடுக்கிறது. மற்றபடி படம் முடிந்து வெளியே வருகையில் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியைக் கொடுத்திருக்கிறது ‘குக்கூ’.
தியேட்டருக்குச் சென்று கண்டுகளித்து நெகிழ வேண்டிய படம் ‘குக்கூ’!