சி எஸ் கே (சார்லஸ் ஷபீக்க் கார்த்திக்) – விமர்சனம்

112

 

ஐடி கம்பெனியில் வேலைபார்க்கும் கார்த்திகாவை விடாமல் துரத்தி துரத்தி காதலிக்கிறார் சார்லஸ். கார்த்திகாவுக்கும் அவர் மேல் இஷ்டம் தான். இந்த நிலையில் தூத்துக்குடியில் உள்ள தனது வீட்டிற்கு போய்விட்டு மீண்டும் சென்னைக்கு பஸ் ஏறுகிறார் கார்த்திகா.. தனது தங்கையின் திருமணத்திற்கு பணம் வேண்டி வைரம் கடத்தும் கும்பலில் இணையும் கார்த்திகாவின் சொந்த ஊர் நண்பன் ஷபீக், போலீசிடமிருந்து தப்பிக்க, தன்னிடம் உள்ள வைரங்கள் அடங்கிய டப்பாவை பஸ்ஸில் உள்ள கார்த்திகாவிடம் கொடுத்துவிட்டு தப்பிக்கும்போது போலீஸில் மாட்டுகிறார்.

ஒரு வழியாக மறுநாள் போலீசிடம் இருந்து மீண்டுவரும் ஷபீக்கிடம், அவரது தந்தையை பணயமாக பிடித்து வைத்து, வைரத்தை கொண்டுவரும்படி சொல்கிறான் கடத்தல் தலைவன். அதை வாங்குவதற்காக அடியாட்களின் பிரும்பு பிடியுடன் சென்னைக்கு கிளம்புகிறார் ஷபீக். சென்னைக்கு சென்ற கார்த்திகாவோ வேலைக்குப்போன இடத்தில் பாத்ரூமில் விழுந்து மயக்கமாகிவிட, இதை அறியாமல் அவரை வைத்து பூட்டிவிட்டு அனைவரும் சென்றுவிடுகின்றனர்.

இரவில் நினைவு திரும்பியாதும், தனது அலுவலகம் இருக்கும் ஷாப்பிங் மாலை விட்டு வெளியேற முயற்சிக்கும் கார்த்திகா, அங்கே தனது அலுவலக ஆட்களான சஞ்சய்யும் சந்துருவும் தங்களது மேனேஜரை கொலை செய்வதை பார்த்து விடுகிறார். இவர் பார்த்துவிட்டார் என்பதை அறிந்த அவர்கள் துரத்த, அவர்களிடம் இருந்து தப்பிக்க, அந்த ஷாப்பிங் மாலுக்குள்ளேயே கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுகிறார் கார்த்திகா.

திருமண விஷயமாக தன்னுடன் கோபித்துக்கொண்டு வந்த கார்த்திகாவை சமாதானப்படுத்த, அவரது அலுவலக வாசலிலேயே தவம் கிடக்கும் சார்லஸ், இரவு வெகு நேரம் ஆகியும் அவர் வெளிவராதது கண்டு அவர் உள்ளே இருக்கிறாரா என கண்டறிய முயற்சிக்கிறார். வெளியே காதலன்.. உள்ளே காதலி.. துரத்தும் கொடூர வில்லன்கள்.. இறுதியில் இந்த ஆடுபுலி ஆட்டம் எப்படி முடிவுக்கு வருகிறது என்பது தான் க்ளைமாக்ஸ்..

ஒரு ஐடி கம்பெனி.. கொஞ்சம் வைர கடத்தல்.. இடையில் ஒரு காதல்.. இவற்றை வைத்து ஒன்டே மேட்ச் ஆடியிருக்கிறார்கள் சி எஸ் கே டீம். பரபரப்பாக, அடுத்து என்ன நடக்கும் என்கிற டென்சனுடன் கதையை நகர்த்தவேண்டும் என திட்டமிட்டுத்தான் களத்தில் இயங்கியிருக்கிறார்கள்.. அதற்கேற மாதிரி வைரக்கடத்தலை உள்ளே நுழைத்து, அதில் ஹீரோயினை சிக்கவைத்து பரமபதம் ஆடியிருக்கிறார்கள்.

காதலிக்காக உருகும் சார்லஸ் ஆக நடித்திருக்கும் சரண்குமார் ஆரம்பத்தில் என்னப்பா இது என உச் கொட்ட வைத்தாலும், தனது காதலியை காப்பற்ற அந்த இரவு முழுவதும் அவர் படும் பாட்டை பார்க்கும்போது ஆட்டோமேட்டிக்காக அவரது கதாபாத்திரத்தின் மேல் மரியாதை கூடவே செய்கிறது. வைரக்கடத்தலில் பலியாடு மாதிரி சிக்கிக்கொண்டதை தவிர்த்து ஷபீக் கதாபாத்திரமான மிஷால் நசீருக்கு பெரிதாக வேலையில்லை.

கதாநாயகி கார்த்திகாவாக நடித்திருக்கும் ஜெய் குஹேய்னி (என்னப்பா பெயர் இது) கதாபாத்திரத்திற்கு பொருந்துகின்ற, ஆனால் சினிமாவில் தேறுவாரா என்கிற மாதிரியான முகம். ஆனால் நடிப்பில் ஆண்ட்ரியாவின் டூப்ளிகேட்டாக மாற முயற்சித்திருக்கிறார். வேற்று மதத்தை சேர்ந்த தனது காதலனின் தாயார் முன் தன்னை அவமானப்பட வைக்கும் விதமாக நடந்துகொள்ளும் காதலனின் மீது அவர் காட்டும் கோபமும் உண்மையை அப்போதே உடைக்கும் காட்சியிலும் நன்றாக நடித்திருக்கிறார்.

கொலைகாரர்கள் விரட்டும் காட்சியில் கொஞ்சநேரம் மிரட்சியை காட்டினாலும், துரத்தல் காட்சிகளே ஒரு மணி நேரத்திற்கு  நீளுவதால் பக்கத்து வீட்டு பிள்ளைகள் ஐஸ்பால் விளையாடுவது போல் கதாநாயகியிடம் சீரியஸ்நெஸ் குறைந்து விடுகிறது. இரவு நேர வில்லன்களாக வரும் சஞ்சய் (நாராயண்), சந்துரு (விமல் ஆதித்யா) இருவரும் துரத்தல் காட்சிகளில் அந்த பில்டிங்கின் உள்ளேயே கிட்டத்தட்ட ஐந்து கி.மீக்கு குறையாமல் ஓடியிருப்பார்கள் என்கிற அளவுக்கு இடைவேளைக்குப்பின் முழுவதும் இந்த துரத்தல் காட்சிகளாகவே இருப்பது போகப்போக சுவராஸ்யத்தை குறைக்கிறது.

மேனேஜரை அவ்வளவு எளிதாக, கொடூரமாக, உடனடியாக கொன்று விடும் இந்த வில்லன்கள், கதாநாயகியை மட்டும் கதையின் வசதிகேற்றபடி மூன்று நான்குமுறை தப்பிக்க விடும்போது, அடபோங்கய்யா என்கிற அலுப்பு தான் தோன்றுகிறது. ஆனாலும் விறுவிறுப்பாக ஒரு படத்தை தர முயற்சித்திருக்கும் இயக்குனர் சத்தியமூர்த்தி, சில லாஜிக்குகளை சரி செய்திருந்தால் நம்பகத்தன்மையுடன் சுவராஸ்யமும் கூடியிருக்கும்..

மொத்தத்தில் இந்த சி எஸ் கே டீம் ஆடியிருப்பது 2௦ ஓவர் அல்ல, 5௦ ஓவர்கள் கொண்ட ஒன்டே மேட்ச் தான்.

Comments are closed.