நடிகர்கள் : சந்தோஷ் சோபன், மானசா வாரணாசி, யோகி பாபு, சுனில் ரெட்டி
இசை : ஆதித்யா ரவீந்திரன்
ஒளிப்பதிவு : தினேஷ் புருஷோத்தமன்
இயக்கம் : அஸ்வின் சந்திரசேகர்
தயாரிப்பு : யுவி கிரியேஷன்ஸ் – அஜய் குமார் ராஜு.பி
காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான பல காதல் திரைப்படங்களில் ஒன்று என்று இல்லாமல், மனதை வருடும் அற்புதமான காதல் உணர்வை கொடுக்கும் இந்த படம் நிச்சயம் காதலர்களை கொண்டாட வைக்கும் என்பது உறுதி.
வீடு மற்றும் அலுவலகங்களுக்கு உட்புற வடிமைப்பு & அலங்காரம் மேற்கொள்ளும் துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு சென்னைக்கு வரும் நாயகன் சந்தோஷ் சோபன், அத்துறையில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறுகிறார். வறுமையை சமாளிக்க பகுதி நேரமாக இருசக்கர டாக்ஸி ஓட்டுகிறார். நாயகி மானசா வாரணாசி ஐடி துறையில் பணியாற்றி முன்னேறும் கனவோடு, சென்னையில் வேலை தேடி அலைகிறார். இந்த இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலையால் சந்தித்துக் கொள்வதோடு, ஒரு இக்கட்டான சூழ்நிலையால் ஒரே வீட்டில் தங்கி ஒன்றாக பயணிக்கிறார்கள்.
நாயகியின் வரவால் நாயகனின் கனவு நினைவாகிறது. அவர் நினைத்தபடி அவரது துறையில் வெற்றியை நோக்கி பயணிக்க, நாயகியும் தான் நினைத்தது போல் ஐடி துறையில் பணியாற்றும் வாய்ப்பை பெறுகிறார். இப்படி இருவரும் தங்களது கனவு வாழ்க்கை நிஜமான மகிழ்ச்சியோடும், காதலோடும் பயணிக்கும் போது, இவர்களது பாதையில் திடீர் தடை ஏற்படுகிறது. அந்த தடை என்ன ?, அதனால் பாதிக்கப்பட்ட இவர்களது மகிழ்ச்சி பயணம் மீண்டும் தொடர்ந்ததா ? என்பதை அற்புதமான காதல் உணர்வோடு சொல்வதே ‘கஃபுல் பிரண்ட்லி’. (Couple Friendly)
துவக்கம் முதல் முடிவு வரை மிக இயல்பாக பயணித்து பார்வையாளர்களை திரையோடு கட்டிப்போட்டு மிக சிறப்பான காதல் உணர்வையும், நம்பிக்கையையும் கொடுக்கும் இந்த படம் பார்வையாளர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த காதல் படங்களின் வரிசையில் நிச்சயம் இடம் பிடிக்கும்.
நாயகனாக நடித்திருக்கும் சந்தோஷ் சோபன், தமிழுக்கு புதிய முகம் என்றாலும், தன் நடிப்பு மூலம் அந்த அடையாளத்தை மறைத்து பார்வையாளர்கள் மனதில் எளிதில் இடம் பிடித்து விடுகிறார். வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கும் போதும் சரி, தன் துணையின் உதவியின் மூலம் தனது துறையில் சாதிக்கும் போதும் சரி, அவரது இயல்பான நடிப்பு அவரது கதாபாத்திரத்திற்கு 200 சதவீதம் நியாயம் சேர்த்திருக்கிறது.
நாயகியாக நடித்திருக்கும் மானசா வாரணாசி, தன் நடிப்பின் மூலம் வியக்க வைக்கிறார், என்று சொன்னால் அது மிகையாகாது. முதல் பாதி முழுவதும் தன் அழகாலும், நடிப்பாலும் ரசிக்க வைப்பவர், இரண்டாம் பாதியில் இதயம் கனத்து, கண் கலங்க வைத்து விடுகிறார்.
யோகி பாபு வரும் காட்சிகள் குறைவாக இருந்தாலும், அவரது வழக்கமான டைமிங் வசனங்கள் குலுங்கி குலுங்கி சிரிக்க வைக்கிறது. சுனில் ரெட்டி உள்ளிட்ட பிற நடிகர், நடிகையர்கள் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக பயணித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவாளர் தினேஷ் புருசோத்தமன் எதார்த்தம் மீறாத காட்சிகளின் மூலம் கவனம் ஈர்ப்பதோடு, நாயகன், நாயகி இருவரது காதல் மற்றும் கூடல் காட்சிகளை ரசனையோடு படமாகி அசத்தியிருக்கிறார். இசையமைப்பாளர் ஆதித்யா ரவீந்திரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் படத்தின் ஆன்மாவாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையும் சிறப்பு. கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு படத்திற்கு பெரும் பலம்.
காதல் உணர்வுகளை மனதுக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, உடன் இருக்கும் துணைக்கு தோள் கொடுத்து ஊக்கப்படுத்துவது, காதலர்களாக இருந்தாலும் சரி, தம்பதியாக இருந்தாலும் சரி, அவர்களது மிகப்பெரிய கடமை என்பதை நினைவூட்டியிருக்கும் இயக்குநர் அஸ்வின் சந்திரசேகர், காதல் கதை என்றாலும், அதனுடன் முன்னேற துடிக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் பற்றி பேசுவதோடு, அவற்றை எல்லாம் கடந்து தொடர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம், என்ற நம்பிக்கையை கொடுத்திருக்கிறார்.
காலம் எப்படி மாறினாலும், உண்மை காதல் என்றுமே மாறாது, என்பதை மீண்டும் அழுத்தமாக பதிவு செய்து காலத்தினால் அழியாத உணர்வுப்பூர்வமான காதல் திரைப்படங்களின் வரிசையில் இடம் பிடித்திருக்கிறது இந்த ’கஃபுல் பிரண்ட்லி’ (Couple Friendly)
ரேட்டிங் 4.2/5
Comments are closed.