நடிகர்கள் : தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், இளங்கோ குமரவேல், நிவேதா சதீஷ், அப்துல் லீ, காளி வெங்கட், ஜெயப்பிரகாஷ், ஜான் கொக்கேன்
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : சித்தார்த்தா நுனி
இயக்கம் : அருண் மாதேஸ்வரன்
தயாரிப்பு : சத்யஜோதி பிலிம்ஸ் – டி.ஜி.தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜுன் தியாகராஜன்
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், சத்யஜோதி பிலிம்ஸ் நிருவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘கேப்டன் மில்லர்’ படம் எப்படி இருக்கிறது? விமர்சனத்தை பார்ப்போம்.
பிரிட்டிஷ் ஆதிக்க இந்தியாவில் தமிழ்நாட்டின் சிறு கிராமத்தில் வாழும் தனுஷ், ஆதிக்க சாதியினரிடம் அடிமைத்தனமாக வாழ்வதை விட, பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து மரியாதையாக வாழலாம் என்று நினைத்து ராணுவத்தில் சேருகிறார். ஆனால், அங்கேயும் ஒடுக்குமுறை வேறு ரூபத்தில் இருப்பதை உணர்ந்துக்கொள்ளும் தனுஷ், ஒட்டுமொத்த அடக்குமுறைகளுக்கு எதிராக நடத்தும் ஆயுத போராட்டம் மற்றும் எழுச்சியை அனல் பறக்கும் அரசியல் வசனங்களோடும், அதிர வைக்கும் ஆக்ஷன் காட்சிகளோடும் சொல்வது தான் ‘கேப்டன் மில்லர்’.
அனலீசன் என்ற சாதாரண இளைஞராக இருந்து கேப்டன் மில்லர் என்ற போராளியாக உருவெடுக்கும் தனுஷின் உணர்ச்சிகரமான நடிப்பு மற்றும் அவருடைய தோற்றம் ஒரு போராளியின் வாழ்க்கையை கண்முன் நிறுத்துகிறது. தனுஷின் முதிர்ச்சியான நடிப்பும், ஆக்ஷன் காட்சிகளில் காட்டிய ஈடுபாடும் கேப்டன் மில்லரை கொண்டாட வைக்கிறது. அவருக்கு கொடுக்கப்பட்ட மாஸ் காட்சிகளில் அவர் வெளிப்படுத்தும் நடிப்பு, உடல் மொழி மற்றும் அவருடைய கெட்டப் ஆகியற்றை காட்சிக்கு காட்சி கொண்டாட வைக்கிறது.
வழக்கமான கதாநாயகியாக அல்லாமல் அழுத்தமான போராளி வேடத்தில் நடித்திருக்கும் பிரியங்கா மோகன், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் ஆகியோர் வரும் காட்சிகள் குறைவு என்றாலும், அவர்கள் வரும் காட்சிகள் அனைத்தும் திரையரங்கில் கைதட்டல் மற்றும் விசில் சத்தம் காதை பிளக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
காளி வெங்கட், இளங்கோ குமரவேல் இருவரும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். வில்லன்களாக நடித்திருக்கும் ஜெய பிரகாஷ் மற்றும் ஜான் கொக்கன் இருவரும் வில்லத்தனத்தோடு, வஞ்சகத்தை வெளிக்காட்டிய விதம் சிறப்பு.
அப்துல் லீ, விஜி சந்திரசேகர், அருணோதயன், நிவேதிதா சதீஷ், வினோத் கிஷன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனி ஆக்ஷன் காட்சிகளிலும், சேஸிங் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார். கேமராவை வழக்கமான முறையில் கையாளாமல் கதாபாத்திரங்களின் அசைவுகளுக்கு ஏற்றபடி கையாண்டிருப்பவர் கதைக்களத்தை மிக நேர்த்தியாக கையாண்டு கவனம் ஈர்க்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் “கில்லர் கில்லர்…” உள்ளிட்ட அனைத்து பாடல்களும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை மூலம் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை ரசிகர்களிடத்தில் கடத்தியிருப்பவர், ஆக்ஷன் காட்சிகளின் வீரியத்தை தனது பீஜியம் மூலம் அதிகரிக்கச் செய்து அமர்க்களப்படுத்துகிறார்.
பிரிட்டிஷ் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள், பழங்காலத்து கோவில், பழங்குடியின மக்கள் வசிக்கும் இருப்பிடம், போராளிகளின் ஆயுதம் மற்றும் பிரிட்டிஷ்காரர்களின் நவீன ஆயுதங்கள் என கலை இயக்குநர் டி.ராமலிங்கத்தின் கைவண்ணம் படம் முழுவதும் தெரிகிறது.
ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் போர்க்கள காட்சிகளிலும், சேஸிங் காட்சிகளிலும் தனது முத்திரையை பதித்திருக்கிறார். படம் முழுவதும் துப்பாக்கி சண்டை இருந்தாலும் அதை மிக அழகியலோடும், பிரமிக்க வைக்கும் விதத்தில் காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.
கோரனார் அய்யனார் என்ற தெய்வத்தை மையமாக கொண்டு சொல்லப்படும் சிறுகதை மற்றும் அந்த தெய்வத்தை பார்க்க விடாமலும், கோவிலை கட்டிய மக்களையே கோவிலுக்குள் நுழைவிடாமல் தடுக்கும் ஆதிக்க சாதியினரின் அடக்குமுறையை முதல்பாதி கதையாக கொண்டு திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், தனது பாணியில் அதை கையாண்ட விதமும், அதற்கு ஏற்றபடி அனல் பறக்கும் மதன் கார்கியின் அரசியல் வசனங்களும் படத்தோடு ஒன்றிவிட செய்கிறது.
தனுஷ் ரசிகர்கள் கொண்டாடும் விதமான மாஸ் காட்சிகள் இருந்தாலும், அவை திரைக்கதை ஓட்டத்தை பாதிக்காத வகையில் கையாண்டிருக்கும் இயக்குநர் அருண் மாதேஸ்வரன், படத்தில் பேசிய அரசியலை பிரச்சாரமாக அல்லாமல் காட்சி மொழியில் சிறப்பான மேக்கிங் மூலம் சொல்லி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
தொழில்நுட்ப கலைஞர்களின் மெனக்கெடல், முதன்மை நடிகர்களுடன், துணை நடிகர்களும் இணைந்து கொடுத்திருக்கும் உழைப்பு, படம் முழுவதும் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் ஆயுத போராட்டங்கள் இருந்தாலும் கதை சொல்லும் உணர்வுகள் சிதையாமல் அவற்றை கையாண்ட விதம் என அனைத்தும் பாராட்டும்படி இருக்கிறது.
ரேட்டிங் 4.3/5
Comments are closed.