இயக்குனர் ராதாமோகனின் படங்கள் எப்போதுமே உணர்வுப்பூர்வமானவை.. இந்த ‘பிருந்தாவனம்’ மூலம் நடிகன்-ரசிகன் என்கிற கதைக்களத்தில் இயல்பான, மனதை தொடும்படியான படத்தை கொடுத்திருக்கிறார்.
ஊட்டியில் சலூன் கடையில் வேலை பார்க்கும் அருள்நிதி, அநாதை காப்பகத்தில் வளர்ந்தவர். வாய் பேசமுடியாத, காதுகேளாத அருள்நிதிக்கு நண்பன் டவுட் செந்தில்.. இன்னொரு பக்கம் அருள்நிதியிடம் நட்பாக பழகி அதை காதலாக முயற்சிக்கும் பணக்கார வீட்டுப்பெண் தான்யா..
அருள்நிதிக்கு சின்னவயதில் இருந்தே விவேக்கின் காமெடி ரொம்ப பிடிக்கும். ஒருமுறை விடுமுறையில் ஊட்டிக்கு வரும் நடிகர் விவேக்கிற்கு ஏதேச்சையாக உதவும் வாய்ப்பு அருள்நிதிக்கு கிடைக்கிறது. அருள்நிதியின் குணங்களால் ஈர்க்கப்பட்டு அவருடன் நட்பாகிறார் விவேக். கூடவே டவுட் செந்திலுக்கும் தான்யாவுக்கும் இவர்களின் நட்பு தெரிய வந்து அவர்களுக்கும் விவேக்குடன் நட்பாகிறார்கள்..
தான்யா தனது காதலை அருள்நிதியிடம் வெளிப்படுத்த விவேக்கிடம் உதவி கேட்கிறார்.. ஆனால் விவேக் அதை சொன்னதும், அருள்நிதி அதை மறுத்து விடுகிறார்.. காதலை ஏற்காததற்கான காரணத்தை விவேக் வற்புறுத்தி கேட்க, வேறுவழியின்றி தனது மனதில் உள்ள பாரம் திறக்கிறார் அருள்நிதி.. ஆம்..வாய்திறந்து பேச ஆரம்பிக்கிறார்.
விவேக் மட்டுமல்ல, தான்யா, நண்பன் செந்தில் உட்பட அனைவருமே ஷாக் ஆகிறார்கள்.. அருள்நிதி என்ன காரணத்திற்காக பயந்தாரோ அதேபோல தான்யா, செந்தில் அவரை வெறுத்து விலகுகின்றனர். அருள்நிதி ஏன் பேச முடியாதவராக நடித்தார், வாய்பேசமுடியாத ஒருவரை விரட்டி விரட்டி காதலித்த தான்யா அவர் பேசுகிறார் என்பதை அறிந்து ஏன் விலகிப்போகவேண்டும், இந்த பிரச்சனையின் ஆணிவேரை கண்டுபிடித்த விவேக்கினால் அதை சரிசெய்து அவர்களின் காதலுக்கு மரியாதை செய்ய முடிந்ததா என்பது மீதிக்கதை.
தான் தேர்வு செய்யும் கதையாகட்டும், அதில் ஏற்றுக்கொண்ட கேரக்டரில் தனது உயிரை கொடுத்து நடிப்பதாகட்டும் அருள்நிதியை எப்போதுமே குறைசொல்ல முடியாது. இந்தப்படத்திலும் வாய் பேசாத, காதுகேளாதவராக நடிப்பில் மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்திருக்கிறார் அருள்நிதி.. விவேக்குடன் காட்டும் நட்பாகட்டும், தான்யாவின் காதலை ஏற்க மறுப்பதாகட்டும், தன்னைப்பற்றிய உண்மை தெரிந்து மற்றவர்கள் முன் கூனிக்குறுகி நிற்பதாகட்டும் அருள்நிதி அந்த ‘கண்ணன்’ கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.
ஒப்பனிங் சீனில் அறிமுகமாவதில் இருந்து என்ட் கார்டு போடும் வரை படம் முழுக்க கிட்டத்தட்ட இரண்டாவது ஹீரோவாகவே வலம் வந்திருக்கிறார் விவேக்.. நடிகர் விவேக்காகவே அவர் வந்தாலும் கூட, படத்தின் காமெடி காட்சிகளில் அதுவே பிளஸ் பாயிண்ட்டாக அமைந்துவிடுகிறது.. நீண்ட நாட்கள் கழித்து விவேக் புல் பார்முக்கு திரும்பியுள்ளதோடு, கூடவே குணச்சித்திர நடிப்பிலும் நெகிழ வைத்திருக்கிறார். தனது நண்பனுக்காக அவர் மெனக்கெடும் காட்சி அதற்கு ஒரு உதாரணம்.
கதாநாயகி தான்யாவுக்கு இது இரண்டாவது படம்.. முந்திய படத்தில் அவரது நடிப்பில் தென்பட்ட குறைகள் எதுவும் இல்லாமல் வெகு இயல்பாக தனது கேரக்டரை பிரதிபலித்திருக்கிறார் தான்யா.. இல்லையில்லை அப்படி அழகாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் ராதாமோகன். தான்யா படத்திற்கு இன்னொரு பிளஸ் பாயின்ட் தான்.
இன்னொரு காமெடியனாக படம் முழுக்க வரும் ‘டவுட்’ செந்தில் தனது எதிர்கால வாய்ப்புகள் இந்தப்படத்தில் தான் இருக்கிறது என்பதை உணர்ந்து பல காட்சிகளில் அதை தனது நகைச்சுவை நடிப்பால் வெளிப்படுத்தவும் செய்கிறார்.. எம்.எஸ்.பாஸ்கரிடம் இருக்கும் ஆத்மார்த்தமான கலைஞனை எப்போதும் அழகியலோடு காட்டுவது ராதாமோகனுக்கு மட்டுமே கைவந்த கலை.. இந்தப்படத்திலும் நம்மை நெகிழ வைக்கிறார் எம்.எஸ்.பாஸ்கர்.. அதிலும் விவேக்கை யாரென கேட்பதும், தான்யாவிடம் அருள்நிதி பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதும் ‘நச்’.
பஞ்சு சுப்பு, செல் முருகன் என மற்ற கதாபாத்திரங்கள் சிரிக்கவும் நெகிழவும் வைக்கிறார்கள்.. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை நெகிழ்ச்சியான காட்சிகளில் நம் மனதை பிசைகிறது. ஊட்டியே அழகு. அதை எம்.எஸ்.விவேக் ஆனந்தின் கேமரா இன்னும் கவித்துமாக படமாக்கி இருக்கிறது.
ஒரு சாதாரண இளைஞனின் வாழக்கை, ஒரு சினிமா நடிகரால் எப்படி மாறுகிறது என்பதை எந்தவித செயற்கை பூச்சும் இல்லாமல் இயல்பாகவே படமாக்கியுள்ளார் ராதாமோகன். அருள்நிதியின் தொழிலுக்கு விவேக் தானே பணம் கொடுத்து உதவி செய்திருக்க முடியும் என்றாலும், அப்படி செய்யாமல் வங்கிக்கடனுக்காக அருள்நிதிக்கு ஜாமீன் போடும் ஒரு காட்சி அதற்கு ஒரு சாம்பிள்..
காதலை ஏற்க மறுக்கும் அருள்நிதியின் பயம் அவர் பக்கத்தில் இருந்து பார்க்கும்போது நியாயமானதுதான் என்கிற விதமாகவும் பின் மற்றவர்கள் பார்வையில் அதை உடைப்பதையும் ராதாமோகன் தெளிவாக கையாண்டு இருக்கிறார். எந்த கேரக்டரையும் நெகடிவாக காட்ட முயற்சிக்காத ராதாமோகன் ஒரு பாசிடிவ் எனர்ஜியுடன் தந்திருக்கும் இந்த பிருந்தாவனம் ரசிகர்களின் மனதில் பூ பூக்க வைக்கும் என்பது உறுதி.

Comments are closed.