பூலோகம் – விமர்சனம்

208

boologam 2
வடசென்னை பகுதியில் பரம்பரை பரம்பரையாய் குத்துச்சண்டையினால் இரண்டுபட்டு கிடக்கும் இரண்டு பிரிவினர். பாக்ஸிங்கில் தோல்வியுற்ற ஜெயம் ரவியின் தந்தை தற்கொலையால் உயிரை மாய்த்துக்கொள்ள, எதிரியின் மகன் ராஜேஷை களம் கண்டு பழி தீர்க்க காலம் பார்த்து காத்திருக்கிறார் ஜெயம் ரவி..

சபதத்தை நிறைவேற்றி பாக்ஸிங்கில் ராஜேஷை நடமாட முடியாமல் செய்யும்போதுதான் ஜெயம் ரவிக்கு பாக்ஸிங்கின் கோரமுகம் தெரிகிறது. அதன்பிறகு பாக்ஸிங்கை விட்டு அவர் ஒதுங்க நினைத்தாலும், இந்த பாக்ஸிங் மூலம் கோடிக்கணக்கில் வியாபரம் டீல் செய்யும் சேனல் முதலாளி பிரகாஷ்ராஜ் அவரை விடுவதாக இல்லை..

தேசிய லெவலில் அர்பித் ரங்கா, உலக லெவலில் நேதன் ஜோன்ஸ் ஆகியோருடன் ஜெயம் ரவியை மோதவிட சில அண்டர் கிரவுண்ட் வேலைகளை செய்கிறார் பிரகாஷ்ராஜ். இதில் ஜெயம் ரவியின் குரு பொன்வண்ணன் பலியாக, வெகுண்டு எழும் ஜெயம் ரவி பிரகாஷ்ராஜின் சதிவலையை பாக்ஸிங் மூலமே எப்படி முறியடிக்கிறார் என்பதுதான் க்ளைமாக்ஸ்.

ஏற்கனவே எம்.குமரன் படத்திலேயே ஜெயம் ரவியை பாக்ஸராக பார்த்து பழகிவிட்டதால், இதிலும் இயல்பாகவே நம் மனதில் பாக்ஸர் பூலோகமாக அவர் பதிந்து விடுகிறார்.. அதனால் பாக்ஸிங் காட்சிகளில் அவரது உக்கிரம் நமக்கும் தொற்றிக்கொள்கிறது.. நாதன் ஜோன்ஸ், அர்பித் ரங்கா, ராஜேஷ் என ஒவ்வொருவருடனும் பாக்ஸிங்கில் மோதும்போது உண்மையிலேயே அவரது கடும் உழைப்பு நன்றாகவே தெரிகிறது..

ஜெயம் ரவியின் காதலியாக இருந்தாலும், அவரது ஹெல்த் கோச்சாக மாறி டூயட் பாட வேலையில்லாமல், த்ரிஷாவின் கேரக்டர் கதையோட்டத்துடன் பயணிப்பது உண்மையிலேயே ஆறுதல். பாக்ஸர்களை உருவாக்கி அதனை தனது மார்க்கெட்டிங் மூளையால் காசாக்கும் பிரகாஷ்ராஜின் வில்லத்தனம் மீண்டும் அவரை பார்முக்கு கொண்டுவந்துள்ளது.. வசனங்கள் அவருக்கு கூடுதல் பிளஸ்.

மிரட்டல் என்ட்ரி கொடுக்கும் ஹாலிவுட் நடிகர் நேதன் ஜோன்ஸ் கொஞ்சம் காமெடியையும் கலந்துகட்டி அடிக்கிறார்.. பாக்ஸிங் கோச்களாகவே மாறியிருக்கிறார்கள் பொன்வண்ணனும் சண்முகராஜனும்.. இவர்கள் தவிர மற்ற துணை கதாபாத்திரங்கள் அனைவரும் கச்சிதமாக அவர்களிடத்தில் பொறுந்துவதான் திரைக்கதையின் சிறப்பு..

காட்சிக்கு காட்சி வசனங்களை கத்தி வீச்சாக இறக்கியுள்ளார்கள்.. வசனம் யாரென்று பார்த்தால் அட.. நம் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தான். கைதட்டலை அள்ளிக்கொண்டே இருக்கிறார். சதீஷ்குமாரின் ஒளிப்பதிவு பாக்ஸிங் நடக்கும் இடத்துக்கே நம்மை அழைத்து செல்கிறது. இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இறங்கி அடித்திருக்கிறார். அதிலும் மயானக்கொள்ளை பாடல் காட்சிகள் சூப்பர்.

எந்த இடத்திலும் அலுப்பு தட்டாமல் கச்சிதமாக படத்தொகுப்பு செய்துள்ள வி.டி.விஜயன்-கணேசகுமார் இருவரின் படத்தொகுப்பிற்கு ஒரு ‘ஜே’ போடலாம். தயாராகி, கிட்டத்தட்ட இரண்டு வருட காலம் கழித்து வெளியாகியுள்ள இந்தபடம் ஒவ்வொரு பிரேமிலும் ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறது.. இன்டர்வலில் கூட வெளியே போகவேண்டுமா என யோசிக்கும் அளவுக்கு தொய்வில்லாத விறுவிறுப்பான காட்சிகளால் பிரமாதப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன்.

எப்போது வந்தாலும் ஜெயிக்க கூடியவன் தான் இந்த பூலோகம்.

Comments are closed.