நடிகர்கள் : விதார்த், வாணி போஜன், ரஹ்மான், கிருத்திக் மோகன், விஜய் டிவி ராமர், தன்யா
இசை : ராகவ் பிரசாத்
ஒளிப்பதிவு : கார்த்திக்
இயக்கம் : எஸ்.பி.சுப்புராமன்
தயாரிப்பு : திருசித்ரம் – டாக்டர்.எம்.திருநாவுக்கரசு MD
தாய்மொழியில் கல்வி பயின்றால் மட்டுமே சுயமாக சிந்திக்க முடியும், என்ற கோட்பாடு கொண்ட நாயகன் விதார்த், தனது மகனை அரசுப் பள்ளியில் படிக்க வைக்கிறார். அவரது மகனும் நன்றாக படித்து பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடத்தை பிடிப்பதோடு மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறார். ஆனால், நீட் தேர்வினால் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு கேள்விக்குறியாகிறது. இருந்தாலும், தனது மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக கடுமையாக போராடும் விதார்த், அதன் மூலம் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வினால் திடீரென்று இறந்து விடுகிறார். தனது அப்பாவின் இறப்புக்கு நீதி கேட்கும் மாணவனுக்கு, வழக்கறிஞர் ரஹ்மான் துணையாக நின்று, சட்ட ரீதியாக போராட அதில் வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பது தான் ‘அஞ்சாமை’.
நீட் தேர்வை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து, தேர்வை அமல்படுத்த உத்தரவிட்டுள்ள நிலையில், படத்தில் காட்டப்படும் சட்ட ரீதியான போராட்டத்தின் முடிவு என்னவாக இருக்கும், என்பது தெரிந்தது தான். ஆனால், நீட் தேர்வின் மூலம் ஏழை மாணவர்களும், அவர்களுடைய குடும்பத்தாரும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், என்பதை படம் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது.
ஏழை விவசாயியாக நடித்திருக்கும் விதார்த், அவரது மகனாக நடித்திருக்கும் கிருத்திக் மோகன், வழக்கறிஞராக நடித்திருக்கும் ரஹ்மான், விதார்த்தின் மனைவியாக நடித்திருக்கும் வாணி போஜன் ஆகியோரது நடிப்பு, கதையில் இருக்கும் வலியை மக்களிடத்தில் எளிதியில் கடத்தி விடுகிறது.
ஒளிப்பதிவாளர் கார்த்திக், நட்சத்திரங்களை கதாபாத்திரங்களாக பயணிக்க வைத்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார். ராகவ் பிரசாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்து கவனம் ஈர்க்கிறது.
நீட் தேர்வின் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு எட்டாக்கனியாகி இருப்பதை, புள்ளி விபரத்தோடு விவரித்திருக்கும் இயக்குநர் எஸ்.பி.சுப்புராமன், வசனங்கள் மூலம் நீட் தேர்வை அமல்படுத்திய அரசாங்கத்தை சம்மட்டியால் அடிக்கவும் செய்திருக்கிறார்.
வியாபாரமான கல்வியின் மூலம் மாணவர்கள் மட்டும் இன்றி பெற்றோர்களும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், என்பதை காட்சி மொழியின் மூலம் சொல்லி ரசிகர்களை கலங்கடிக்கும் இயக்குநர் வசனங்கள் மூலம் கைதட்டல் பெறுகிறார்.
ரேட்டிங் 4.5/5
Comments are closed.