நடிகர்கள் : ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்விகா சிங், கிஷோர்
இசை : அனிருத் ரவிச்சந்திரன்
ஒளிப்பதிவு : எஸ்.ஆர்.கதிர்
இயக்கம் : டி.ஜே.ஞானவேல்
தயாரிப்பு : லைகா புரொடக்ஷன்ஸ் – சுபாஸ்கரன்
ரஜினிகாந்த் நடிப்பில், டிஜே ஞானவேல் இயக்கத்தில், என்கவுண்டர் தப்பா? சரியா? என்று பேசியிருக்கும் ‘வேட்டையன்’ ரசிகர்களை கவர்கிறதா? அல்ல கொள்கிறதா?, விமர்சனத்தை பார்ப்போம்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் உயர் போலீஸ் அதிகாரியான ரஜினிகாந்த், குற்றங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை அழிப்பதற்கும் சட்டத்தை விட என்கவுண்டரே சரியான வழி, என்ற ரீதியில் பயணிக்கிறார். மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி அமிதாப் பச்சன், சட்டத்தின் மூலம் குற்றவாளிகளை தண்டித்தால் மட்டுமே சட்டம் அனைவருக்கும் சமம் என்ற நிலை உருவாகும், என்ற மனநிலையோடு என்கவுண்டர்களுக்கு எதிராக இருக்கிறார்.
இந்த சமயத்தில், பெண் ஒருவர் கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என்று கைது செய்யப்படும் இளைஞர் போலீஸ் காவலில் இருந்து தப்பித்து விடுகிறார். அவரை என்கவுண்டர் செய்வதற்காக கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு வரவைக்கப்படும் ரஜினிகாந்த், உண்மை அறியாமல் அந்த இளைஞரை என்கவுண்டர் செய்து விடுகிறார். அந்த என்கவுண்டரில் மனித உரிமை மீறப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டும் அமிதாப் பச்சன் தலைமையிலான விசாரணைக் குழு, அதன் பின்னணியை விசாரிக்கும் போது, என்கவுண்டரில் பலியான இளைஞர் நிரபராதி என்ற உண்மை தெரிய வருகிறது.
இதுவரை குற்றவாளிகளை மட்டுமே என்கவுண்டர் செய்த ரஜினிகாந்த், முழுமையாக விசாரிக்காமல் அப்பாவி இளைஞரை என்கவுண்டர் செய்தது குறித்து மனம் வருந்துவதோடு, அவர் நிரபராதி என்பதை உலகிற்கு சொல்வதற்காக உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். அதை அவர் எப்படி கண்டுபிடிக்கிறார்?, உண்மையான குற்றவாளி யார்?, அவரது பின்னணி என்ன? ஆகிய கேள்விகளுக்கான பதில் தான் ‘வேட்டையன்’-னின் மீதிக்கதை.
அதியன் என்ற கதாபாத்திரத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரஜினிகாந்த், முதல் பாதியில் குற்றவாளிகளை என்கவுண்டர் செய்து வேட்டையனாக அதிரடி காட்டுகிறார். இரண்டாம் பாதியில் போலீஸ் வேட்டையனாக இருப்பதை விட மக்களின் பாதுகாவலனாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து அவர் மேற்கொள்ளும் புலன் விசாரணையும், அதில் அவர் வெளிப்படுத்தும் வேகமும் படத்தின் வேகத்தையும், விறுவிறுப்பையும் பல மடங்கு அதிகரிக்கிறது. வயதுக்கு ஏற்ற கதாபாத்திரமாக இருந்தாலும் தனக்கே உரித்தான ஸ்டைலில் அந்த கதாபாத்திரத்தை கையாண்டதோடு, “குறி வச்சா எற விழனும்” என்ற பஞ்ச் வசனம் மூலம் திரையரங்கையே அதிர வைக்கும் ரஜினிகாந்த், தனது ரசிகர்களுடன் திரை ரசிகர்களையும் திருப்திப்படுத்தியிருக்கிறார்.
மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நடித்திருக்கும் அமிதாப் பச்சன், தனது கதாபாத்திரத்திற்கு மட்டும் இன்றி தான் பேசும் வசனங்களுக்கும் உயிர் கொடுக்கும் விதத்தில் உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார்.
“மூளை இல்லனா போலீஸ் ஆகலாம், திருடனாக முடியாது” என்று போலீஸை கலாய்க்கும் கதாபாத்திரத்தில் நல்ல திருடனாக வலம் வரும் பகத் பாசில், “கல்வி தான் எதிர்காலம் என்று நினைக்கும் இந்தியா போல் உலகில் உள்ள பல நாடுகளில் என் சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்துவேன்” என்று கூறிக்கொண்டு அப்பாவி மக்களிடம் கொள்ளையடிக்க நினைக்கும் கல்வி வியாபாரியாக நடித்திருக்கும் ராணா டக்குபதி இருவரும் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருப்பதோடு, போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள்.
ரஜினிகாந்தின் மனைவியாக நடித்திருக்கும் மஞ்சு வாரியர், போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரித்திகா சிங், அரசு பள்ளி ஆசிரியையாக நடித்திருக்கும் துஷாரா விஜயன் ஆகியோர் கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
கிஷோர், ஜி.எம்.சுந்தர், ராவ் ரமேஷ், ரமேஷ் திலக், அபிராமி, ரோகிணி, ரக்ஷன் என்று படத்தில் பலர் இருந்தாலும் அனைவரும் திரைக்கதையோட்டத்திற்கு ஏற்ப அளவாக பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.
அனிருத் இசையில் “மனசுலாயோ…” பாடல் மனதில் ஒட்டிக்கொள்ள, ”வேட்டையன் தீம்” பாடல் மற்றும் ”ஹண்டர் வந்தார்” பாடல் காட்சிகளுக்கு வீரியம் கொடுக்கும் விதமாக பயணிக்கிறது. பின்னணி இசை அனிருத்தின் வழக்கமான பாணியில் இருந்து வித்தியாசப்பட்டு பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் தனது கேமரா ஜாலங்கள் மூலம் ரஜினிகாந்தை அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் அமர்க்களமாக காண்பித்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் திரைக்கதையை வேகமாக பயணிக்க வைத்தாலும், படத்தில் பேசப்படும் கருப்பொருள் சிதைந்துவிடாமல் கவனமுடன் காட்சிகளை தொகுத்து இயக்குநர் சொல்ல வந்த கருத்தை மக்கள் மனதில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.
படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இருந்தாலும் அவர்களை சரியாக கையாண்டதோடு, அவர்களின் கதாபாத்திரங்களை திரைக்கதையோடு ஒட்டி பயணிக்க வைத்திருக்கும் இயக்குநர் டி.ஜே.ஞானவேல், படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை ரசிகர்களின் கவனம் சிதறாமல் திரைக்கதையை மிக சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி செல்கிறார்.
மிக சுவாரஸ்யமாக பயணிக்கும் படத்தின் முதல் பாதி சுவாரஸ்யமான கிரைம் திரில்லர் அனுபவத்தை கொடுத்தாலும், இரண்டாம் பாதியில் உண்மையான குற்றவாளி யார்? என்று தெரிந்த பிறகு திரைக்கதை சற்று தடுமாற்றத்துடன் பயணிப்பதை மறுக்க முடியாது. ஆனால், கல்வியை வியாபாரமாக்கும் திட்டம் மற்றும் அதன் பின்னணியில் இருப்பவர்கள், பொருளாதார ரீதியிலான குற்றங்கள் மற்றும் அதற்கான தண்டனைகள் போன்றவற்றை விளக்கும் காட்சிகள் திரைக்கதையில் இருக்கும் குறைகளை மறக்கடித்து, இறுதியில் ஒரு நல்ல படத்தை பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது.
எளியவர்களை காவல்துறை எப்படி குற்றவாளிகளாக எளிதில் சித்தரிக்கிறது, என்பதை ‘ஜெய்பீம்’ படத்தில் ஆணித்தரமாக சொன்ன இயக்குநர் டி.ஜே.ஞானவேல், அதே காவல்துறையால் மேற்கொள்ளப்படும் என்கவுண்டர் மூலமாகவும் எளியவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள், என்பதை மீண்டும் ஒரு முறை ஆணித்தரமாக பேசியிருப்பதோடு, மாஸ் ஹீரோவான ரஜினிகாந்த் மூலம் அதை உரக்கச் சொல்லியிருப்பதோடு அவரது ரசிகர்களை கொண்டாடும் ஒரு மாஸ் படமாகவும் கொடுத்திருக்கிறார்.
ரேட்டிங் 4/5