சசிகுமாருக்கென இருக்கும் கமர்ஷியல் பார்முலாவில் இருந்து துளியும் விலகாமல் வெளிவந்திருக்கும் படம் தான் வெற்றிவேல்.
கிராமத்து வாத்தியார் இளவரசுக்கு, ஊரை சுற்றும் சசிக்குமார், கல்லூரியில் படிக்கும் அனந்த் நாக் என இரண்டு பையன்கள்.. விவசாயத்தின் மீது ஈடுபாடுள்ள சசிகுமாருக்கு, வேளாண்துறையில் வேலைபார்க்கும் மியா ஜார்ஜ் மீது காதல்.. சில பல கலாட்டாக்களுக்குப்பின் மியாவுக்கும் காதல் வந்தாலும் சொல்லாமல் சொந்த ஊருக்கு கிளம்புகிறார்.
சசியின் தம்பி அனந்த் இன்னொரு கிராமத்து தலைவரான பிரபுவின் மகள் வர்ஷாவை கல்லூரியில் படிக்கும்போதே விரும்புகிறார்.. வர்ஷாவுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்க, மகனுக்காக பெண் கேட்டு போகும் இளவரசுவிடம் ஜாதி சிக்கலை காரணம் காட்டி நாகரிகமாக மறுக்கிறார் பிரபு.. ஆனால் தம்பியின் காதலை சேர்த்துவைக்க, வர்ஷாவை கடத்த நண்பர்களுடன் சசிகுமார் போடும் திட்டம் சொதப்பலாகி அதே கிராமத்தை சேர்ந்த நிகிலாவை ஆள்மாறி கடத்திவிடுகின்றனர்.
நிகிலாவுக்கோ மூன்று நாளில் திருமணம் நடைபெற இருக்கிறது.. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து அவரை அவர் வீட்டில் சேர்ப்பதற்குள் கண், காது மூக்கு வைத்து நிகிலா ஓடிவிட்டார் என வதந்தி பரவ, அவமானம் தாங்காமல் நிகிலாவின் தந்தை தற்கொலை செய்துகொள்கிறார்.. ஊரே நிகிலா குடும்பத்தை ஒதுக்கி வைக்க, தனது தவறுக்கு பிராயச்சித்தமாக அவரை மணந்துகொள்கிறார் சசிகுமார். காதலி மியா கனத்த மனதுடன் விடைபெற்று செல்கிறார்.
தனது கணவனின் மரணத்துக்கு காரணம் பிரபு தான் என அவருடன் இருபது வருட பகையில் இருக்கிறார் அவரது தங்கை விஜி.. நிகிலாவை மணக்க இருந்த விஜி சந்திரசேகரின் மகன், தனது தாய்மாமன் பிரபுவின் பெண்ணை கேட்கிறான்.. பழைய குடும்பப்பகையை மறந்து பிரபுவின் மகளை தனது மகனுக்கு திருமணம் செய்ய சம்மதிக்கிறார் விஜி. ஆனால் தனது தம்பி விரும்பிய பெண்ணை அவனுக்கு மணம் முடித்துவிட்டுத்தான் தனது குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவேன் என சபதம் செய்கிறார் சசிக்குமார். வெற்றி பிரபுவுக்கா, சசிக்குமாருக்கா என்பது க்ளைமாக்ஸ்.
முதல் அரைமணி நேரம் மியாவுடன் காதல், தம்பி ராமையாவுடன் மொக்கை காமெடி என சாதாரணமாக நகரும் கதை, வர்ஷாவை கடத்த திட்டம் போட்டதில் இருந்து சூடு பிடித்து, ஆள் மாற்றி நிகிலாவை கடத்தியதும் ஜெட் வேகம் எடுக்கிறது. தம்பிக்காக என்ன வேண்டுமானாலும் பண்ண தயாராகும் சசிக்குமார் இதில் சுந்தரபாண்டியன் வெர்ஷன் 2ஆக மாறியிருக்கிறார்.. தாரை தப்பட்டையில் மாறிய தடத்தை இதில் சரிப்படுத்தி இருக்கிறார் சசிகுமார்..
மூன்று கதாநாயகிகளில் மியா ஜார்ஜ் கொஞ்சல்.. நிகிலா விமல் கெஞ்சல்.. வர்ஷா மிஞ்சல் என மூன்று பேருமே சோடைபோகாத நடிப்பு.. சிரிப்பாலேயே சசிக்குமாரை மட்டுமல்ல நம்மையும் வீழ்த்துகிறார் மியா. இருந்தாலும் நிகிலாவுக்கு வாய்ப்பு அதிகம்.. சரியாக பயன்படுத்தி இருக்கிறார்.
ஊர்த்தலைவராக கனகச்சிதமான வேடம் பிரபுவுக்கு.. கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத தருணங்களில் அவர் தலைகுனியும்போது அவரது கேரக்டர் நிமிர்ந்து நிற்கிறது.. அவரது தங்கையாக வரும் விஜி சந்திரசேகர், தனக்குள் இவ்வளவு வன்மைத்தையா ஒளித்து வைத்துள்ளார் என மிரள வைக்கிறார். விஜியின் மகனாக வருபவரும் சசியின் தம்பியாக வரும் அனந்துக்கும் நிறைய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது ஆச்சர்யம்..
பல படங்களில் ஏற்கனவே பார்த்திருந்தாலும் இளவரசு மற்றும் அவரது மனைவியாக வரும் ரேணுகாவுக்கு இதில் மனதை நெகிழ வைக்கும் வேடம்.. குறிப்பாக தனது மருமகள், கட்டிய கணவன் பேரைக்கூட தெரியாது என சொல்லும் இடத்தில் இருவருமே தங்களது நடிப்பால் கண்கலங்க வைக்கிறார்கள்.
தம்பி ராமையாவின் காமெடி ஒருசில இடங்களில் மட்டுமே எடுபடுகிறது. படம் முழுதும் முகம் காட்டாத அவரது மனைவியை வைத்து ஆபாச காமெடி பண்ணியதை சற்று மாற்றி யோசித்திருக்கலாம். சர்ப்ரைஸாக என்ட்ரி கொடுக்கும் நாடோடிகள் கூட்டணியான சமுத்திரக்கனி, விஜய் வசந்த், பரணி மற்றும் அந்த பைக்வாலா என நால்வரையும் நாடோடிகள் படத்தின் இணைப்பாக உள்ளே கொண்டுவந்த விதம் சரியான கலாட்டா.
இமானின் பின்னணி இசையும் ஓப்பனிங் பாடலும் அதிரவைக்கிறது.. தஞ்சை மண்ணை நம் கண்களில் கொண்டுவந்து அறைகிறது கதிரின் ஒளிப்பதிவு. ஏற்கனவே பார்த்த சில படங்களின் சாயல்கள் படம் நெடுகிலும் தென்படுவது குறைதான் என்றாலும் கதையோட்டத்துடன் பார்க்கும்போது ஒரு முழு பொழுதுபோக்கு படமாக இந்த வெற்றிவேல் இருக்கிறது என்பது உண்மை. இயக்குனர் வசந்தமணி பி அன்ட் சி மட்டுமல்ல ஏ கிளாஸ் ஆடியன்ஸையும் உள்ளே இழுப்பதில் வெற்றி பெற்றுள்ளார் என்றே சொல்லலாம்.