காட்டுவாசி மனிதர்களை பற்றி வெகு குறைவான படங்களே தமிழில் வெளியாகியுள்ளன.. அந்த குறையை போக்கும் விதமாக தற்போது வெளியாகியுள்ள படம் தான் இந்த வனமகன்..
ஜெயம் ரவி அந்தமான் காடுகளில் வசிக்கும் காட்டுவாசி இனத்தை சேர்ந்தவர்.. அவர்கள் வசிக்கும் பகுதியை காற்றாலை அமைக்கும் நிறுவனம் ஒன்று விலைக்கு வாங்கியதால், அவர்கள் காவல்துறை அதிகாரத்தால் அடித்து துரத்தப்படுகின்றனர்.. இந்த கொலைவெறி தாக்குதலில் தப்பி ஓடி சாலைக்கு வரும் ஜெயம் ரவி மீது, நண்பர்களுடன் அந்தமானை சுற்றிப்பார்க்க வந்த கோடீஸ்வர வீட்டு பெண் சாயிஷாவின் கார் மோதி விடுகிறது.
அவரை அப்படியே போட்டுவிட்டு போக மனம் இல்லாமல் சென்னைக்கு அழைத்து வந்து சிகிச்சை தருகிறார் சாயிஷா. அவரும் தனது உதவியாளரான தம்பிராமையாவும் சேர்ந்து ஜெயம் ரவியை தங்களது வீட்டில் தங்க வைத்து பராமரிக்கின்றனர்.. ஜெயம் ரவி மீது சாயிஷா அன்பு காட்டுவது அவரது கார்டியன் பிரகாஷ்ராஜின் மகனும் சாயிஷாவை திருமணம் செய்துகொள்ள விரும்புவருமான வருணுக்கு எரிச்சலூட்டுகிறது.
சாயிஷாவோ வருணை திருமணம் செய்வதில் தனக்கு இஷ்டம் இல்லை என்கிறார்.. வருண் அவரை பலவந்தமாக வற்புறுத்துவதை பார்க்கும் ஜெயம் ரவி, வருணை அடித்து உதைத்து கோமாவுக்கு அனுப்புகிறார். இந்தநிலையில் ஜெயம் ரவியை தேடிவரும் அந்தமான் போலீஸார் அவரை கைது செய்து அந்தமானுக்கு இழுத்து செல்கின்றனர்.
ஜெயம் ரவி போனபின் எதையோ பறிகொடுத்ததாக உணரும் சாயிஷா தம்பிராமையாவையும் அழைத்துக்கொண்டு ஜெயம் ரவியை மீட்டுவர அந்தமான் செல்கிறார். ஆனால் அங்கே நிலவும் சூழல் அது அவ்வளவு எளிதான காரியமல்ல என்பதை அவருக்கு உணர்த்துகிறது. சாயிஷாவல் அங்குள்ள எதிர்ப்பு சூழலையும் மீறி ஜெயம் ரவியை காப்பாற்ற முடிந்ததா என்பதுதான் மீதிக்கதை.
ஜெயம் ரவிக்கு லைப் டைம் கேரக்டர் என்று சொல்லும் விதமாக வசனங்களே இல்லாமல் முக பாவங்களினாலும் உடல்மொழியினாலும் அந்த வனமகன் கேரக்டரை அற்புதமாக பிரதிபலித்துள்ளார்.. தனது கூட்டத்தை பிரிந்துவந்த ஏக்கம், சாயிஷவின் தோள் தட்டி பாராட்டும் அன்புக்காக ஏங்குவது, சாயிஷாவுக்கு ஒரு சின்ன பிரச்சனை என்றாலும் அதற்கு காரணமானவர்களை அடித்து துவைப்பது என நடிப்பு காட்சிகளில் மட்டுமல்லாமல் ஆக்சன் காட்சிகளிலும் பின்னி பெடலெடுத்துள்ளார் ஜெயம் ரவி.
இந்தப்படத்தின் நாயகி சாயிஷா சைகல் அறிமுகம் தான் என்றாலும் எதோ நீண்டநாள் பார்த்து பழகியவர் போல நம் மனதில் இடம்பிடித்து சம்மணம் இட்டு அமர்ந்துகொள்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் தனது அழகாலும் நடிப்பாலும் நம்மை பரவசப்படுத்துகிறார். வெல்கம் சாயிஷா..
சாயிஷாவின் கார்டியனாக, தனது மகனை சாயிஷாவுக்கு திருமணம் செய்து சொத்து கைவிட்டு போய்விட கூடாது என நினைக்கும் கேரக்டரில் பிரகாஷ்ராஜ்.. இதெல்லாம் அவருக்கு புதிதா என்ன..? அசால்ட்டாக செய்துவிட்டு போகிறார் மனிதர்.
படம் முழுதும் வரும் கேரக்டர் தம்பிராமையாவுக்கு.. குறிப்பாக ஜெயம் ரவியை சமாளிக்க அவர் படும் பாடு ரசிகர்களை விலா நோக சிரிக்கவைக்கும். சாயிஷாவை ‘மேடம் பாப்பா.. மேடம் பாப்பா’ என அவர் அழைப்பதே தனி அழகு. நல்ல போலீஸ் ஆபீசராக சண்முகராஜனும் கெட்ட போலீஸ் அதிகாரியாக சாம் பாலும் தாங்கள் பொருத்தமான தேர்வென நிரூபித்திருக்கிறார்கள்.. வருணும் தனக்கு கொடுத்த வேலையை திறம்பட செய்திருக்கிறார். காட்டுவாசி தலைவராக கொஞ்ச நேரமே வந்தாலும் வேல ராமமூர்த்தி கம்பீரம்.
அந்தமான் காடுகளின் அழகை கண் முன்னே அள்ளி இறைத்திருக்கிறது திருவின் ஒளிப்பதிவு.. ஹாரிஸின் பின்னணி இசை அதற்கு கட்டியம் கூறுகிறது.. ஆனால் பாடல்களில் தான் சுவை கொஞ்சம் குறைகிறது.. அதிலும் தேவையில்லாமல் சில இடங்களில் அவற்றை திணித்திருப்பது படத்தின் விறுவிறுப்பை குறைக்கிறது..
ஜெயம் ரவி, புலி சம்பந்தப்பட்ட காட்சிகள் தத்ரூபம்.. ஆனால் சிறுவர் மலர் கதையை படித்தது போல நம்பத்தான் முடியவில்லை. ஆதிவாசி மக்கள் தங்கள் இயல்பான வாழ்க்கையை கூட நிம்மதியாக வாழமுடியாமல் போவதற்கு முக்கிய காரணம் முதலாளிகள் வர்க்கமும் அவர்களுக்கு கைக்கூலிகளாக துணைபோகும் அதிகார வர்க்கமும் தான் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் இயக்குனர் விஜய்.
ஜெயம் ரவி-போலீஸ் இடையேயான துப்பாக்கி சண்டையும் அதில் ஜெயம் ரவி தப்பிப்பதும் நம்பும்படியாக இல்லை.. அதேபோல அத்தனை போலீசார் துப்பாக்கியுடன் இருந்தாலும் அனைவருமே புலியை பார்த்து பயப்படும் காட்சியும் இதே வகையில் சேர்த்தி தான்.. ஆனால் இப்படி நடந்தால் என்கிற ஒரு கற்பனையான கதையை படமாக்கும்போது இந்த லாஜிக் மீறல்களும் தவர்க்க முடியாதது தான்.
இதையெல்லாம் மறந்துவிட்டு பார்த்தால் வனமகனை குறை சொல்ல என்று எதுவும் இல்லை.. ஜாலியான பொழுதுபோக்கு படங்களின் பட்டியலில் வனமகனுக்கும் ஒரு இடம் உண்டு..