உயிருக்கு உயிராக – விமர்சனம்

பாசமிக்க பிரபு-ஸ்ரீலட்சுமி தம்பதிகளின் மகன் சரண் சென்னையில் கல்லூரியில் படிக்கிறார். திடீரென பிரபு தனது மகனுக்கு ஒரு காதலி தேவை என பேப்பரில் விளம்பரம் கொடுக்க, குவியுது இளம்பெண்கள் கூட்டம்.. இதுபோக காதல் என்றாலே வெறுக்கும் சரணை வலிய வந்து காதலிக்கிறார் பிரீத்திதாஸ்.. பிரபு எதற்காக அப்படி ஒரு விளம்பரம் கொடுக்கிறார் என்பது ஃப்ளாஸ்பேக்.
ஊட்டியில் இருக்கும்போது பிரபுவின் மூத்தமகன் சஞ்சீவை உடன் படிக்கும் பெண்ணான நந்தனா விரட்டி விரட்டி காதலிக்கிறாள்.

முதலில் கண்டுகொள்ளாமல் அவமதித்தாலும் பின்னர் அவர்மேல் காதலாகிறார் சஞ்சீவ். இந்நிலையில் நந்தனாவுக்கு அமெரிக்காவில் இருக்கும் மாப்பிள்ளை தேடிவர சஞ்சீவை ஏமாற்றி, சிக்கலில் மாட்டிவிட்டு பழிவாங்குகிறார். இதனால் மனம் உடைந்த சஞ்சீவ் தற்கொலை செய்துகொள்கிறார்.

இதை உடன் இருந்தே பார்த்த அவரது தம்பி சரண் காதலை வெறுக்க, அவரது கல்விக்கும் சாதனைக்கும் குறுக்கே காதல் தடையாக வந்துவிடக்கூடாது என்பதினால் தான் முன்கூட்டியே மகனுக்கு காதலி தேடும் வேலையை பிரபு தொடங்குகிறார். சரண் சாதனை செய்தாரா, அவரது காதலியை ஏற்றுக்கொண்டாரா என்பது க்ளைமாக்ஸ்.

கதாநயகர்களான சரண், சஞ்சீவ் இருவருமே பாஸ்மார்க் வாங்கிவிடுகிறார்கள். சரண் ஆக்ரோஷம் காட்டும் பல இடங்களில் மாதவனை ஞாபகப்படுத்துகிறார். சஞ்சீவ் காதலியால் ஏமாற்றப்பட்டு மலேசியாவில் தவிக்கும்போதும் பின் காதல் தோல்வியால் உயிரைவிடும்போதும் நம் பரிதாபத்தை அள்ளுகிறார்.

கதாநாயகி ப்ரீத்தி தாஸ், நந்தனா இருவரில் தனது துறுதுறுப்பான, வில்லித்தனமான நடிப்பில் அதிரடிக்கிறார் நந்தனா. ப்ரீத்தி தாஸுக்கு அவ்வளவு அழுத்தமான கதாபாத்திரம் இல்லையென்பதால் மனதில் பதிய மறுக்கிறார். அதிலும் போலீஸ் ஸ்டேஷனில் ‘பாட்ஷா’ பாணியில் சரணை விடுதலை செய்வது சரியான காமெடி.

படத்தின் மிகப்பெரிய பூஸ்ட், டானிக் எல்லாமே ஆதர்ஷ தம்பதிகளாக வரும் பிரபு-ஸ்ரீலட்சுமி கதாபாத்திரங்கள் தான். தனது கேரக்டருக்கு தனது நடிப்பால் மிகப்பெரிய கௌரவம் சேர்த்திருக்கிறார் பிரபு. சரணின் நண்பராக வரும் சதீஷ் தன் பங்கிற்கு காமெடி சரவெடிகளை கொளுத்திப்போடுகிறார். அதில் ஒன்றிரண்டும் வெடிக்கவே செய்கின்றன.

படத்தில் எஸ்.ஆர்.எம் கல்லூரியும் அதன் நிறுவனரான பாரிவேந்தர் அவர்களும் பிரதான கதாபாத்திரங்களாக இடம்பெற்றிருக்கிறார்கள். சாந்தகுமாரின் இசையில் ஹோலி பாடல் துள்ளல் போட வைக்கிறது. முதல்பாதியில் மிக மெதுவாக நகரும் காட்சிகள் இடைவேளைக்கு பின் வேகம் பிடிப்பது படத்திற்கு பலம். குறிப்பாக நந்தனா சம்பந்தட்ட காட்சிகள், சஞ்சீவின் புராஜெக்ட் ஆகியவை.

குறிப்பாக கேம்பஸ் இண்டர்வியூவில் திறமையான நம் மாணவனை போட்டிபோட்டு கோடிகளில் சம்பளம் தருவதாக ஒப்பந்தம் செய்ய வெளிநாட்டு நிறுவனங்கள் முன்வரும்போது, நம் நாட்டு நிறுவனங்கள் ‘தேமே’ என அமர்ந்திருப்பது, நம் நாட்டில் புத்திசாலிகளுக்கு வேலையில்லை என்கிற இன்றைய அவலத்தை உறைக்க சொல்கிறது.

மொத்தத்தில் மாணவனின் கல்விக்கும் எதிர்கால சாதனைக்கும் காதல் ஒரு தடையாக இருந்துவிடக்கூடாது என்பதையும், மாணவனின் திறமைக்கு தகுந்த அங்கீகாரத்தை உள்நாட்டிலேயே வழங்கவேண்டும் என்பதையும் ஒரு புதிய கோணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜய மனோஜ்குமார்.

NandhanaPrabhuPreethi DassSanjeevSaranSri LaxmiUyirrukku UyiragaVaendar MoviesVaendar Productionsஉயிருக்கு உயிராக – விமர்சனம்சஞ்சீவ்சரண்நந்தனாபிரபுப்ரீத்தி தாஸ்ஸ்ரீலட்சுமி