உப்புக்கருவாடு – விமர்சனம்

நெஞ்சை நெகிழவைக்கும் உணர்வுப்பூர்வமான கதைகளுக்கு சொந்தக்காரரான ராதாமோகன். இந்தமுறை அதிலிருந்து சற்று விலகி வடசென்னை கடற்கரை பின்னணியில் சினிமாவை கதைக்களமாக கொண்டு நகைச்சுவை மணம் கமழ இந்த ‘உப்புக்கருவாடு’ படத்தை கொடுத்துள்ளார்.

சினிமாவில் முதல் படம் பிளாப் ஆகி, இரண்டாவது படம் பாதியில் நின்றுபோன நிலையில் அடுத்த படத்திற்காக வாய்ப்பு தேடும் இயக்குனர் தான் கருணாகரன்.. அவருக்கு மேனேஜர் மயில்சாமி மூலமாக காசிமேட்டில் மீன்பிடி தொழில் நடத்திவரும் பிசினஸ்மேன் எம்.எஸ்.பாஸ்கர் அறிமுகம் கிடைக்கிறது. அப்படியே அவர் தயாரிக்கும் படத்தை இயக்க வாய்ப்பும் கிடைக்கிறது, அவரது மகள் நந்திததாவை கதாநாயகி ஆக்கவேண்டும் என்கிற நிபந்தனையுடன்.

தனது நண்பர்கள் சாம்ஸ், நாராயணன் மற்றும் உதவி இயக்குனராக சேரும் டவுட் செந்தில் ஆகியோருடன் காசிமேட்டிலேயே தங்கி கதையை மெருகேற்றுகிறார் கருணாகரன்.. அழகாக இருந்தாலும் சுத்தமாக நடிப்பே வராத, மெச்சூரிட்டி குறைவான நந்திதாவையும் தான் ஏற்கனவே ஹீரோவாக செலெக்ட் செய்த நபரையும் வைத்து ரிகர்சல் பார்க்கிறார்..

ரிகர்சலில் சில பல கோமாளித்தனங்கள் நடந்தாலும் அதையெல்லாம் சகித்துக்கொண்டு, ஷூட்டிங்கிற்கு நாள் குறிக்கிறார் கருணாகரன்.. ஷூட்டிங்கிற்கு முதல்நாள் இரவு சாமி கும்பிட்டு வருவதாக சொல்லிச்சென்ற ஹீரோ, மறுநாள் காலை ஷூட்டிங் ஆரம்பிக்கும் நேரம் வரை வரவில்லை. இந்த நேரத்தில் திடீரென அங்கே வரும் எம்.எஸ்.பாஸ்கர் கருணாகரன் உட்பட அவரது குழுவினரை அடித்து உதைத்து அறையில் அடைத்து வைக்கிறார்.

ஷூட்டிங் தொடங்கிய முதல் நாளே படம் நின்றுவிடுகிறது.. கதாநாயகன் ஏன் வரவில்லை.. எம்.எஸ்.பாஸ்கரின் திடீர் கோபத்துக்கு காரணம் என்ன, கருணாகரனின் நிலை என்ன ஆனது என்பது ட்விஸ்ட்டான க்ளைமாக்ஸ்.

ராதாமோகனை பொறுத்தவரை படத்தில் வரும் அனைத்து கேரக்டர்களுக்கும் சம வாய்ப்பு கொடுப்பவர்.. இதிலும் அந்த பாணியில் இருந்து மாறவில்லை.. கதையின் நாயகனாக வரும் கருணாகரன் காமெடியுடன் சேர்த்து, ஒரு ஹீரோவுக்கு உரிய சீரியஸ் மூடுக்கும் கச்சிதமாக மாறியுள்ளார்.. டிஸ்கஷன் நடத்தும்போது நண்பர்கள் பண்ணும் கோமாளித்தனங்களை சமாளிப்பதும், நந்திதாவுக்கு நடிப்பு சொல்லித்தரும்போது அவர் அடிக்கும் கூத்துக்களை பட வாய்ப்புக்காக சகித்துக்கொள்வதும் என தனது கேரக்டரை நடிப்பால் வலுவாக்கியுள்ளார்.

இதுவரை நாம் பார்த்த நந்திதா இதில் நிச்சயமாக இன்னொரு தளத்துக்கு மாறியுள்ளார் என்றே சொல்லவேண்டும். நடிக்கும் ஆசையுள்ள வெகுளிப்பெண்ணாக, நடிப்பு வராமல் கருணாகரனை படுத்தி எடுக்கும் காட்சிகளில் பல இடங்களில் கைதட்டலை அள்ளுகிறார்.. அதேசமயம் கதாநாயகியாக அவரது காட்சிகள் விரியும்போது அப்படியே இன்னொருவித நடிப்பிற்கு சட்டென மாறுகிறார். இரண்டையும் அவர் பேலன்ஸ் செய்துள்ள விதம் அருமை. படத்தின் காமெடி காட்சிகளில் அவருக்கும் முக்கிய பங்கு உண்டு. க்ளைமாக்ஸ் காட்சிக்கு அவர் ஒப்புக்கொண்ட பெருந்தன்மையை பாராட்டியே ஆகவேண்டும்.

இன்னொரு நாயகன் என்று சொல்லும் அளவுக்கு கருணாகரன் எடுக்கும் படத்திற்கு அவர் ஹீரோவாக செலக்ட் செய்துள்ள நபர் கௌதம் கார்த்திக்கின் ஜெராக்ஸ் காப்பியாக வந்து நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். கருணாகரனின் காதலியாக வரும் ‘சரவணன் மீனாட்சி’ ரஷிதாவும் ஒகே தான்.

காசிமேடு பிசினஸ்மேனாக வரும் எம்.எஸ்.பாஸ்கருக்கு எப்போதாவது இப்படி அரிதாக அருமையான வேடங்கள் கிடைத்துவிடத்தான் செய்கிறது.. ஒருபக்கம் துரோகம் பண்ணுபவர்களை அடித்து துவைப்பதும், இன்னொரு பக்கம் மகளுக்காக படம் எடுக்கும் இயக்குனர் டீமிடம் அன்பாக நடந்து கொள்வதும், அவ்வப்போது கவிதை சொல்லி நம்மை விலாநோக சிரிக்க வைப்பதும், கடைசியில் தன்னை ஏமாற்றிவிட்டர்களே என்கிற ஆத்திரத்தில் அனைவரையும் அடித்து வெளுப்பதும் என படத்திற்கு முக்கிய தூணாகவே மாறியுள்ளாற் எம்.எஸ்.பாஸ்கர்.

எந்த ஒரு நிகழ்வையும் நல்ல சகுனமாக்கி எப்போதும் துருதுருவென பாசிட்டிவ் எனர்ஜியுடன் மேனேஜராக வலம் மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கரின் வலது கையாகவும், இயக்குனர் டீமுக்கு வேண்டிய உதவிகளை செய்துகொண்டு, கூடவே அவ்வப்போது கருணாகரனின் டிஸ்கஷனில் கதைக்கு சீன் தானம் செய்யும் குமரவேல், நல்லநேரம் கணித்து தருவதாக எம்..எஸ்.பாஸ்கருடன் கூடவே சுற்றும் டுபாக்கூர் சாமியார் டாடி சரவணன், உதவி இயக்குனராக சேர்ந்து கருணாகரனை படுத்தி எடுப்பதோடு, க்ளைமாக்சில் எதிர்பாராத ஜாக்பாட்டுக்கு ஆளாகும் ‘டவுட்’ செந்தில், அண்ணன் எது செய்தாலும் அதற்கு ஏட்டிக்கு போட்டியாக செய்யும் மாரிமுத்து என அனைவருமே கச்சிதமாக தங்களது பங்களிப்பை தந்து கதையை நகர்த்துகிறார்கள்.

புதியவரான ஸ்டீவ் வாட்ஸ், இசையில் பெரிய அளவில் நம்மை கவனம் ஈர்க்க தவறிவிடுகிறார். மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு காசிமேட்டின் இதுவரை நாம் பார்க்காத பக்கத்தை அழகாக காட்டியுள்ளது.

புதுமுகங்கள் நடிப்பில் வெளியாகும் பல படங்கள் தோற்றுப்போவதன் காரணத்தை, படம் தயாரிக்க வருபவர்கள் தங்களது வாரிசுகளை நடிக்க வைப்பதாக சொல்லி தங்களது பணத்தையும் விரயமாக்கி, ஒரு இயக்குனரின் எதிர்காலத்தையும் எப்படி கேள்விக்குறி ஆக்குகிறார்கள் என்பதை ஒரு படமாகவே, இல்லையில்லை பாடமாகவே நமக்கு நடத்தியுள்ளார் இயக்குனர் ராதாமோகன்,

உதவி இயக்குனராக வரும் டவுட்’ செந்திலின் ஆங்கில வார்த்தை பிழை காமெடி ரொம்பவே செயற்கையாக இருப்பது, என்னதான் நடிப்பு தெரியாத பெண்ணாக இருந்தாலும் கூட, அவர் கொஞ்சம் கொஞ்சம் கூட மெச்சூரிட்டி இல்லாதவராக நடந்துகொள்வது என சில கேரக்டர்களை மோல்டு பண்ணும்போது லாஜிக்கில் சற்று சறுக்கியிருக்கிறார் ராதாமோகன். ஆனாலும் படம் நிற்பதற்கான காரணம், நந்திதாவின் காதல் எபிசோட் என கடைசி இருபது நிமிட பரபரப்பு காட்சிகளில் இந்த குறைகளை மறக்கடித்து நம்மை சிரிக்கவைத்துக்கொண்டே வெளியே அனுப்புகிறார் ராதாமோகன்.

KarunaharanM.S. BaskarMayil SamyNandhithaRashithaUppu Karuvadu