நடிகர்கள் : சத்யராஜ், ஏ.டி.அலெக்ஸ், கூல் சுரேஷ், மொட்டை ராஜேந்திரன், நாஞ்சில் சம்பத்
இசை : பி.எஸ்.அஸ்வின்
ஒளிப்பதிவு : சாம் அலன்
இயக்கம் : ஏ.டி.அலெக்ஸ்
தயாரிப்பு : அனிஸ் எட்மாண்ட் பிரபு
நாட்டின் எதாவது ஒரு பகுதியில், தினம் தினம் பல்வேறு கோணங்களில் நடைபெற்று வரும் சாதிய வன்கொடுமைகள் பற்றிய செய்திகளை மிக சாதாரணமாக கடந்து செல்லும் மக்களுக்கு, அத்தகைய வலிகலை அனுபவிப்பவர்களின் வாழ்க்கையையும், அவர்களை அடக்கி ஆள நினைக்கும் சாதி வெறியர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து எழுச்சி பெறும் மாணவனின் மாபெரும் புரட்சி பயணம் தான் ‘தோழர் சேகுவேரா’ படத்தின் கதை.
பல வடிவங்களில் சாதிய வன்கொடுமைகள் நிகழ்ந்து வரும் நிலையில், மாணவர்கள் இத்தகைய சாதிய வன்கொடுமைகள் மூலம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி அழுத்தமாக பேசியிருக்கும் அறிமுக இயக்குநர் ஏ.டி.அலெக்ஸ், தனது கருத்தை வன்முறையை பின்னணியாக கொண்டு மக்களிடம் சேர்க்க முயற்சித்திருந்தாலும், அந்த வன்முறை காட்சிகள் ஒவ்வொன்றிலும், சாதிய வன்முறைகளில் சிக்குண்டு சிதைந்த மாணவர்களின் அழுகுரல் கேட்கத்தான் செய்கிறது.
எழுதி இயக்கியிருப்பதோடு நெப்போலியன் என்ற கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஏ.டி.அலெக்ஸ், முதல் படம் என்றாலும் பலம் மற்றும் வீரியம் மிக்க கதாபாத்திரத்தை கச்சிதமாக கையாண்டு பார்வையாளர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்.
சேகுவேரா என்ற கல்லூரி பேராசிரியர் வேடத்தில் நடித்திருக்கும் சத்யராஜ், தனது அனுபவம் மிக்க நடிப்பு மற்றும் புரட்ச்சிகரமான வசனங்கள் மூலம் படத்திற்கு மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்திருக்கிறார்.
கலியபெருமாள் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் மற்றும் அவரது மகன் கதாபாத்திரத்தில் கல்லூரி மாணவராக நடித்திருக்கும் நடிகர் இருவரும் வில்லத்தனத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தி பார்வையாளர்களின் கோபத்தை சம்பாதித்து விடுகிறார்கள்.
நலிந்தவர்களை நிமிர்ந்தெழுவதற்காக முயற்சிக்கும் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்கும் நாஞ்சில் சம்பத்தின் குரலில் அழுத்தம் மட்டும் இன்றி உயிரோட்டமும் இருக்கிறது.
கூல் சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் கதையோடு பயணித்தாலும், களத்தில் ஒட்ட மறுக்கும் நடிகர்களாகவே வலம் வருகிறார்கள்.
ஒளிப்பதிவாளர் சாம் அலன், இசையமைப்பாளர் பி.எஸ்.அஸ்வின், படத்தொகுப்பாளர் கெளதம் ஆகியோரின் பணி எளிமையாக இருந்தாலும் திரைக்கதையின் வலிமையை எந்தவிதத்திலும் குறைத்துவிடாமல் பயணித்திருக்கிறது.
முதல் படத்திலேயே புரட்சிகரமான கருத்துகளை மக்கள் மனதில் விதைக்க முயன்றிருக்கும் இயக்குநர் ஏ.டி.அலெக்ஸ், தனது கூர்மையான வசனங்கள் மூலமாக குற்றவாளிகளை குத்தி கிழிக்கவும் செய்திருக்கிறார்.
நெப்போலியனின் எழுச்சி மூலம் எதிராளிகள் மீதும், நாயகன் மீதும் விழும் வெட்டுக்களை விடவும், திரையில் தெறிக்கும் இரத்தக்கறையை விடவும், சென்சார் அதிகாரிகள் கொடுத்த வெட்டு அதிகம் என்பதால், படத்தில் இடம் பெறும் வன்முறை காட்சிகள் பாதிக்கப்பட்டவரின் வலியை வெளிப்படுத்தும் விதமாகவே அமைந்திருக்கிறது.
சாதிய ரீதியிலான வன்முறைகள் மூலம் பாதிக்கப்படும் மாணவர்களின் கனவு மற்றும் எதிர்பார்ப்பு எப்படி சிதைக்கப்படுகிறது, என்பதை மிக நேர்த்தியாக சொல்லியிருக்கும் இயக்குநர் ஏ.டி.அலெக்ஸ், இந்த ‘தோழர் சேகுவேரா’ மூலம் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக ஆக்ரோஷமான பதிலடியும் கொடுத்திருக்கிறார்.
ரேட்டிங் 3.5/5