சூறையாடல் – விமர்சனம்

சூறையாடல் என்றதுமே இது கொள்ளையடிப்பவர்களை பற்றிய படமோ, அல்லது அரசியல் படமோ என நினைத்து விடவேண்டாம். அழகான கிராமத்து பாசமலர்கள் இரண்டு பாசப்போராட்டத்தால் ஒவ்வொரு மனதையும் சூறையாடுவதுதான் இந்த சூறையாடல்.

தேனிக்கு தெற்கே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கிராமத்தில் நடக்கும் கதைக்களம். தந்தையின் கொடூரச்செயலால் அம்மாவை இழந்த சாமி, அவர் உதை இல்லாமலேயே தனது தங்கை பூமியை தனி ஒருவனாக கண்ணும் கருத்துமாக வளர்க்கிறான்.

ஆனால் அவள் வளர்ந்து பூப்பெய்தியதும் தான், அவளை நோக்கி இந்த சமூகத்தின் பல கண்கள் விகாரமாக திரும்புவதை காண்கிறான்.. பள்ளியில் தன் தங்கையிடம் லவ் லெட்டர் கொடுத்தவனின் கையை அடித்து ஒடிக்கிறான். நண்பர்கள் வட்டாரத்தை ஒதுக்கி வைக்கிறான்.

தன் தங்கையுடன் யதார்த்தமாக பழகியதற்காக தன் சிறுவயது தோழனையும் பகைத்துக்கொள்கிறான். ஏற்கனவே ஒரு பெண்ணைக் கெடுத்துக்கொன்ற கொலைகாரன் மருதுவையும் போலீஸில் காட்டிக்கொடுக்க, அவனோ இவள் தங்கையை சீரழிப்பதற்கு குறி வைக்கிறான்.

அவனிடமிருந்து தங்கையை காப்பற்றும் ஒரு கட்டத்தில் தங்கை மயக்கமடைந்து விழ அவளை மருத்துவமனையில் சேர்க்கிறான் சாமி. அங்கே அவள் தங்கை கர்ப்பமாக் இருக்கிறாள் என இடி ஒன்றை இறக்குகிறார் டாக்டர். இதற்கு காரணம் தனது நண்பன் தான் என அவனை தேடிச்செல்ல அவனோ வெளிநாட்டுக்கு சென்றுவிடுகிறான்.

இதைப்பற்றி தங்கையிடம் கேட்கவும் முடியாமல் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவும் முடியாமல் பித்துப்பிடித்தவன் போல அலைகிறான் சாமி. சில நாட்களிலேயே வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த நண்பன், சாமியை தேடிவந்து உண்மையை விளக்கச் செல்லும்போது அவனை எதுவும் பேசவிடாமல் வெட்டி பள்ளத்தாக்கில் தள்ளுகிறான் சாமி.

இறுதியாக அவமானத்திற்கு பயந்து தனது தங்கையைக் கொன்று தானும் உயிரை விடுவதென முடிவு செய்து தங்கையை மலைக்கோயிலுக்கு அழைத்துச் செல்கிறான். விபரம் அறியாத தங்கையும் அவனுடன் செல்ல, அதேநேரம் சமயம் பார்த்து சாமியை பழிவாங்க, பூமியை சீரழிக்க காத்திருக்கும் மருதுவும் இவர்களுக்கு தெரியாமல் பின் தொடர்கிறான்.

சாமி தனது தங்கையை கொன்று தானும் மரித்தானா? இல்லை வில்லன் மருதுவின் முயற்சி பலித்ததா.? என்று நீங்கள் நினைக்கும் வேளையில் எதிர்பாராத விதமாக அமைகிறது படத்தின் க்ளைமாக்ஸ்.

சாமியின் அம்மாவாக நடித்த அம்முவைத்தவிர படத்தில் நடித்த அனைவருமே புதுமுக நடிகர்கள் தான்.. சாமியாக நடித்த ஸ்ரீபாலாஜி தாயின் துணையின்றி தங்கையை வளர்க்கும் அண்ணனை யதார்த்தமாக நம் கண் முன் பிரதிபலிக்கிறார். அதிலும் தங்கை பெரியவளானதும் அவளை பாதுகாக்க அவர் எடுக்கும் முயற்சிகளில் ஒரு அண்ணனின் மனக்குழப்பத்தை நன்கு வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக தனது தங்கை கர்ப்பம் என தெரிந்தபின் அவரது மனப்போராட்டத்தில் நம்மையும் ஒன்றச்செய்து விடுகிறார்..

கதாநாயகி காயத்ரி என்றாலும் அவருக்கு அளவான ஆனால் அழுத்தமில்லாத காட்சிகள் தான். ஆனால் சாமியின் தங்கை பூமியாக நடித்த லீமாவுக்குத்தான் படம் முழுவதும் நடிக்க நல்ல வாய்ப்பு. அந்த வெள்ளந்தியான அழகு முகத்தில் நம்மை ஆரம்ப காட்சிகளிலேயே ஈர்த்துவிடுகிறார். இறுதிக்காட்சியில் தன் அண்ணனின் கொந்தளிப்பான உணர்வுகளைக் கண்டு பதறும்போதும் எதிர்பாராத முடிவுக்கு ஆளாகும்போதும் நம் பரிதாபத்தை அப்படியே அள்ளிக்கொள்கிறார்.

அம்மாவாக வரும் அம்மு சில காட்சிகளே வந்தாலும் துரோகம் செய்யும் கணவனை எதிர்த்து மடியும் அவரது கதாபாத்திரம் கம்பீரம். அம்முவின் கணவராக வரும் மலையாள நடிகர் ஜெயன் தோற்றத்தில் மட்டுமல்ல நடிப்பிலும் நல்ல முரட்டுத்தனம்.. இனி இவரைத்தேடி வில்லன் வாய்ப்புகள் கதவைத்தட்டும்.
ஒரு கொலை, அதற்குப்பின் ஒரு பெண் என கொள்கையோடு காடுக்குள்ளேயே வலம் வரும் வில்லன் மருதுவாக நடித்திருப்பவர் நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறார். அவரது மேனரிசங்களும் அவரது சேட்டைகளும் சில இடங்களில் ரசிக்க வைக்கின்றன. அவர் வரும் காட்சிகள் எல்லாமே பூமிக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்கிற பதைபதைப்பை ஏற்படுத்த தவறவில்லை.

பல நாட்கள் கழித்து கிராமத்து மனிதர்களின் எளிய வாழ்க்கையை நம் மனதில் பதிய வைத்திருக்கும் இந்தப்படத்தின் கதையுடன் அதை தனது கடின உழைப்பால் சாத்தியமாக்கிய அகிலேஷின் ஒளிப்பதிவிற்கும் முக்கிய பங்கு உண்டு. ஒரு பக்கம் நீர்நிலைகள் சூழ்ந்த கிராமத்தின் அழகையும் மறுபக்கம் கரடும் மேடுமாக இருக்கும் மலைப்பகுதிகளையும் அப்படியே அள்ளி வந்திருக்கிறார். மிதுன் ஈஸ்வரின் பின்னணி இசை திகில் காட்சிகளுக்கு பலம் சேர்த்திருக்கிறது.

எளிமையான மனிதர்களின் கதைக்களத்தை எடுத்துக்கொண்டதற்காக இயக்குனர் தாமரை கண்ணனை முதலில் பாராட்டி விடுவோம். அதிலும் விரசம் துளியும் இல்லாமல் ஒரு இயல்பான அண்ணன்–தங்கை கதாபாத்திரங்களுடன் நம்மை கிராமத்திற்கே அழைத்துச் சென்றதில் அவருக்கு வாழ்த்துக்களும் கூட.
ஆனால் ஒருசில கேள்விகளும் நம்முள் எழுகின்றன. அவ்வளவு பாசமான அண்ணன், தன் தங்கையிடம் ஒருமுறை கூடவா விசாரிக்க மாட்டான். விசாரிக்காமலே அவளை கொல்லத் துணிவது அதுவரையில் இருந்த அந்த பாத்திரத்தின் மீதான கனத்தை குறைத்து விடுகிறதே..

ஆனால் இந்த இடத்தில் அம்மா இல்லாமல் வளரும் இளம்பெண்ணுக்கு ஏற்படும் உணர்வுகளை ஒரு அண்ணனாக அவரால் உணர முடியாமல் போனதாக சித்தரித்திருப்பது தான் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. இருந்தாலும் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி ஏற்படுவதென்னவோ உண்மை.

சூறையாடல் – பார்த்து ரசிக்க வேண்டிய எளிய மனிதர்களின் வாழ்க்கை

AmmuGayathryLeema babuSooraiyadalSri BalajiThamarai Kannanஅம்முகாயத்ரிசூறையாடல்லீமாஸ்ரீபாலாஜி