’சிக்மா’ விமர்சனம்

நடிகர்கள் : சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, அன்பு தாசன், சம்பத் ராஜ், மகாலட்சுமி சுதர்சனன், யோக் ஜேபி, ஷீலா
இசை : தமன்.எஸ்
ஒளிப்பதிவு : கிருஷ்ணன் வசந்த்
இயக்கம் : ஜேசன் சஞ்சய்
தயாரிப்பு : லைகா புரொடக்‌ஷன்ஸ் – ஏ.சுபாஸ்கரன்

அப்பா வாங்கிய ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான கடன் தொல்லையால் தவிக்கும் சந்தீப் கிஷன், தனது அம்மா நினைவாக நூலகம் ஒன்றை நடத்தி வருகிறார். ஒலி வடிவில் தன்னிடம் உள்ள புத்தகங்களை யுடியுப் சேனல் மூலம் வீடியோவாக வழங்கும் பணியை செய்து வர, அதன் மூலம் நாயகி ஃபரியா அப்துல்லாவின் நட்பு கிடைக்கிறது. அவர் மூலம் யூடியுபில் பணம் சம்பாதிப்பவர், அந்த பணத்தை வைத்து சூதாட்டம் ஆடி அதன் மூலன் கடன் தொல்லையில் இருந்து விடுபட நினைக்கிறார். ஆனால், சூதாட்ட விடுதி நடத்துபவர்களால் ஏமாற்றப்படும் சந்தீப் கிஷன், கையில் இருந்த பணத்தையும் இழந்து விட்டு தவிக்கிறார்.

இந்த நிலையில், சந்தீப் கிஷனுக்கு பல ஆயிரம் கோடி டாலர்கள் உள்ள ஒரு பெட்டகத்தின் சாவி கிடைக்கிறது. ஆனால், அதுபற்றி தெரியாததால், அந்த சாவிக்குள் இருக்கும் மற்றொரு விசயத்தை வைத்து தன் பணப் பிரச்சனையை தீர்க்க முயற்சிக்கிறார். ஆனால், அவரது முயற்சி தொடர்ந்து தோல்வியடைய, இறுதியில் சந்தீப் கிஷனின் அனைத்து பிரச்சனைகளும் தீர்ந்ததா ?, அந்த பெட்டகத்தின் சாவி பற்றி அவருக்கு தெரிந்ததா ?, அந்த பெட்டகம் யாருடையது ? என்பதை ஆக்‌ஷன் காமெடி ஜானரில் சொல்வது தான் ‘சிக்மா’.

சந்தீப் கிஷன் நடிக்கும் படங்கள் அனைத்தும் அழுத்தமான கதைக்களம் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படங்களாக இருக்கும். அந்த வரிசையில் இந்த படமும் சந்தீப் கிஷனுக்கு பெயர் வாங்கி கொடுக்கும் படமாகவே உள்ளது. ஆக்‌ஷன் மற்றும் காமெடி இரண்டிலும் கலக்கியிருக்கும் சந்தீப் கிஷன் தனது நடிப்பின் மூலம் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ஃபரியா அப்துல்லாவை சரியாக பயன்படுத்தவில்லை. நாயகி என்ற இமேஜ் இருந்தாலும், திரைக்கதையில் பெரிய பங்கு வகிக்கவில்லை.

வில்லனாக நடித்திருக்கும் ஷிவ் பண்டிட், ஸ்டைலிஷாகவும் இளமையாகவும் இருக்கிறார். நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தால், தமிழ் சினிமாவில் இருக்கும் வில்லன்கள் பற்றாக்குறையை தீர்த்து வைப்பதற்கான வாய்ப்புள்ளது.

சம்பத்ராஜ், அன்பு தாசன், யோக் ஜேபி, ஷீலா ராஜ்குமார், மகாலட்சுமி சுதர்சனன், கமலேஷ் ஜெகன், கிரன் கொண்டா, நாகசாய் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் கிருஷ்ணன் வசந்த் காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகள் அனைத்தும் மிரட்டல். தமன்.எஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் கமர்ஷியல் அம்சங்களோடும், துள்ளல் ரகத்தோடும் உள்ளது. பின்னணி இசை காட்சிகளில் இருக்கும் வேகம் மற்றும் விறுவிறுப்பை அதிகரிக்கும் வகையில் பயணித்திருக்கிறது. படத்தொகுப்பாளர் பிரவீன்.கே.எல், பணியிலும் குறையில்லை.

நாம் பார்த்து பழக்கப்பட்ட கதை என்றாலும் தனது திரைக்கதை மூலம் அதை வேறுபடுத்தி காட்டியிருக்கும் இயக்குநர் ஜேசன் சஞ்சய், கமர்ஷியல் பட விரும்பிகளை கவரும் அனைத்து அம்சங்களையும் அளவாக கையாண்டு படத்தை சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருக்கிறார்.

ஆக்‌ஷன் மற்றும் சேசிங் காட்சிகள் மூலம் படத்தை வேகமாக நகர்த்தி சென்றிருக்கும் இயக்குநர் ஜேசன் சஞய், நகைச்சுவைக் காட்சிகள் மூலம் கலகலப்பாக நகர்த்தி சென்று, ஒரு முழுமையான பொழுதுபோக்கு படத்தை கொடுத்து பார்வையாளர்களை திருப்திப்படுத்தியிருக்கிறார்.

ரேட்டிங் 4/5

sigma movie reviewsigma reviewtamil movie sigma reviewசிக்மா திரைப்பட விமர்சனம்சிக்மா விமர்சனம்தமிழ்ப் படம் சிக்மா விமர்சனம்