’சபரி’ விமர்சனம்

நடிகர்கள் : வரலட்சுமி சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், மைம் கோபி, சஷாங், பேபி நிவேக்‌ஷா
இசை : கோபி சுந்தர்
ஒளிப்பதிவு : ராகுல் ஸ்ரீவட்சவ் & நானி சமிடிஷெட்டி
இயக்கம் : அனில் கட்ஸ்

அனில் கட்ஸ் இயக்கத்தில், வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘சபரி’ திரைப்படம் எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.

கணவரை பிரிந்து வாழும் நாயகி வரலட்சுமி சரத்குமார், தனது மளுடன் வேலை தேடி மும்பையில் இருந்து ஆந்திரா வருகிறார். தனது தோழியின் வீட்டில் தங்கிக்கொண்டு வேலை தேடும் அவர் பல சிக்கல்களை எதிர்கொள்ள இறுதியில் ஒரு நிறுவனத்தில் ஜும்பா நடன பயிற்சியாளராக வேலை கிடைக்கிறது.

இதற்கிடையே, வரலட்சுமியின் முன்னாள் கணவர் கணேஷ் வெங்கட்ராமன், குழந்தையை வரலட்சுமியிடம் இருந்து பிரிக்க முயற்சிக்கிறார். மறுபக்கம், மனநல காப்பகத்தில் இருந்து தப்பித்து இருவரை கொலை செய்த மைம் கோபி வரலட்சுமியின் குழந்தையை தனது மகள் என்று சொந்தம் கொண்டாடுவதோடு, வரலட்சுமியை பின் தொடரவும் செய்கிறார். இப்படி தனது மகளை சுற்றி எழும் பிரச்சனைகளை வரலட்சுமி எப்படி சமாளித்தார், மைம் கோபி யார்?, அவருக்கு வரலட்சுமியின் மகளுக்கு என்ன தொடர்பு, என்பது தான் ‘சபரி’ படத்தின் மீதிக்கதை.

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், மகளுக்காக எதையும் செய்யும் தாயாக வாழ்ந்திருக்கிறார். உணர்ச்சிகரமான நடிப்பு, அதிரடியான ஆக்‌ஷன் என இரண்டிலும் அசத்தியிருக்கிறார்.

ஆரம்பத்திலேயே கவனம் ஈர்க்கும் வகையில் அறிமுகமாகும் மைக் கோபியின் கதாபாத்திரம் எதிர்பார்ப்பு மிக்கதாக பயணிக்கிறது. மனநல மருத்துவமனையில் இருந்து தப்பி வந்த அவரது நடவடிக்கைகள் மிரட்டலாக இருந்தாலும், படம் முடியும் போது அவரது வேடம் செல்லா காசகிவிடுகிறது.

வரலட்சுமியின் கணவராக நடித்திருக்கும் கணேஷ் வெங்கட்ராமன், வழக்கறிஞர் வேடத்தில் நடித்திருக்கும் ஷசாங் இருவரும் கொடுத்த வேலையை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள். வரலட்சுமியின் மகளாக நடித்திருக்கும் பேபி நிவேக்‌ஷாவின் நடிப்பில் குறையில்லை.

தன் மகள் தான் உலகம் என்று வாழும் நாயகியின் பாசப் போராட்டத்தை, சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் சொல்லியிருக்கும் இயக்குநர் அனில் கட்ஸ், ஆரம்பக் காட்சியிலேயே பார்வையாளர்களை கதைக்குள் அழைத்துச் சென்றுவிட்டாலும், அதன் பிறகு நகரும் திரைக்கதையில் தேவையில்லாத சில விசயங்களை திணித்து படத்தை தொய்வடைய செய்கிறார்.

சூர்யா கதாபாத்திரம் மூலம், ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இயக்குநர் படத்தின் முடிவில் அந்த கதாபாத்திரத்தை பலவீனமாக்கிவிட்டு, மற்றொரு கதாபாத்திரத்தை முன்னிலைப்படுத்தியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலவீனம். இருந்தாலும், ஆபத்தில் இருந்து தன் குழந்தையை காப்பாற்ற போராடும் ஒரு தாயின் போராட்டத்தை மென்மையாகவும், அதிரடியாகவும் சொல்லியிருப்பது ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கிறது.

ஒளிப்பதிவாளர்கள் ராகுல் ஸ்ரீவட்சவ் மற்றும் நானி சமிடிஷெட்டியின் கேமரா கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. கோபி சுந்தரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அளவு.

ரேட்டிங் 2.5/5

sabari movie reviewsabari reviewtamil movie sabari reviewசபரி திரைப்பட விமர்சனம்சபரி பட விமர்சனம்சபரி விமர்சனம்வரலட்சுமி சரத்குமாரின் சபரி