நடிகர்கள் : பிரபாஸ், சஞ்சய் தத், பொம்மன் இராணி, மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார், சரினா வாகப்
இசை : தமன்.எஸ்
ஒளிப்பதிவு : கார்த்திக் பழனி
இயக்கம் : மாருதி
தயாரிப்பு : டிஜி விஸ்வ பிரசாத், கிருத்தி பிரசாத்
பெற்றோர் இல்லாத பிரபாஸ் தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்கிறார். பல வருடங்களுக்கு முன்பு காணாமல் போன தனது தாத்தாவை நினைத்து பாட்டி தினமும் அழுது கொண்டிருப்பதை பார்த்து கவலை கொள்ளும் பிரபாஸ், தனது பாட்டிக்காக தாத்தாவை தேடி செல்கிறார். அப்போது, பல்வேறு மாய வித்தைகளை கற்று தேர்ந்த பயங்கரமான மந்திரவாதி சஞ்சய் தத், தான் தனது தாத்தா என்பதை தெரிந்துக் கொள்கிறார். அதே சமயம், பிரபாஸுக்கு அவரது தாத்தாவே வில்லனாக உருவெடுக்க, அவரை எதிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு அவர் தள்ளப்படுகிறார்.
இருவருக்குமான மோதல் ஏன் ?, இந்த மோதலால் இருவரது வாழ்விலும் எத்தகைய பிரச்சனைகள் ஏற்படுகிறது, அதனால் யார் யார், எப்படி பாதிக்கப்படுகிறார்கள், அவர்களை பிரபாஸ் எப்படி காப்பாற்றுகிறார், என்பதே படத்தின் மீதிக்கதை.
காமெடி, மாஸ் என இரண்டையும் கலந்துக்கட்டி நடித்தாலும், முதிர்ச்சியற்ற நடிப்பால் பிரபாஸ் அதிர்ச்சியளித்திருக்கிறார். தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்தவர், தற்போது மீண்டும் காமெடி, காதல் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் போது சற்று தடுமாறியிருக்கிறார். படம் முழுவதும் பிரபாஸுக்கு பில்டப் இருந்தாலும், அவை ஓரளவு மட்டுமே எடுபடுகிறது.
மாளவிகா மோகனன், நித்தி அகர்வால், ரித்தி குமார் என படத்தில் மூன்று கதாநாயகிகள் இருந்தாலும், ஒருவருக்கு கூட அழுத்தமான கதாபாத்திரம் இல்லை. மூன்று பேரையும் பேய் வீட்டில் அடைத்து வைத்து, பாடல் காட்சிகளுக்காகவும், செட் பிராப்பர்ட்டியாகவும் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
பிரபாஸின் தாத்தாவாக நடித்திருக்கும் சஞ்சய் தத் மற்றும் பாட்டியாக நடித்திருக்கும் சரினா வாகப் இருவரும் கொடுத்த வேலையை சரியாக செய்திருந்தாலும், அவர்களது திரை இருப்பு படத்திற்கு எந்தவிதத்திலும் பலம் சேர்க்கவில்லை. பொம்மன் இரானியும் வந்து போகிறார்.
கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு பார்வையாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. வி.எப்.எக்ஸ் காட்சிகள் தரமற்றதாக இருந்தாலும், அவற்றை காட்சிகளுடன் இணைத்து, படத்தை கலர்புல்லாக கொடுத்திருக்கும் ஒளிப்பதிவாளரின் பணி பாராட்டும்படி உள்ளது.
தமன்.எஸ் இசையில் பாடல்கள் கமர்சியல் அம்சங்களோடு கேட்கும் ரகமாக இருந்தாலும், பின்னணி இசையின் சத்தம் காதை கிழிக்கும் வகையில் உள்ளது.
பழைய பாணியிலான கதை, மெதுவாக நகரும் திரைக்கதை, தேவையில்லாத காட்சிகள் என படத்தில் நீக்கப்பட வேண்டிய விசயங்கள் பல இருந்தாலும், மூன்று மணி நேரத்திற்கும் அதிகமான நீளம் வரும்படி காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவுக்கு பாவ மன்னிப்பே கிடையாது.
இயக்குநர் மாருதி, நடிகர் பிரபாஸை மீண்டும் கமர்ஷியல் மசாலா படத்தில் நடிக்க வைத்திருந்தாலும், படத்தை மிக பிரமாண்டமாக இயக்கி அசத்தியிருக்கிறார். கதை அதர பழசாக இருந்தாலும், கிராபிக்ஸ் மற்றும் கமர்ஷியல் காட்சிகள் மூலம் ரசிகர்களுக்கான படமாக கொடுத்திருக்கிறார்.
படத்தின் நீளம் மிகப்பெரிய பலவீனமாக இருப்பதோடு, படம் முழுவதும் சில தேவையற்ற காட்சிகளும் இடம் பெற்றிருக்கிறது. இந்த குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால் இந்த ’ராஜா சாப்’ நிச்சயம் ரசிக்க வைக்கும் படமாக இருக்கும்.
ரேட்டிங் 3/5