நடிகர்கள் : அர்ஜூன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், டி.ஜெ.பானு, சஞ்சனா நடராஜன்
இசை : சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கவுரவ் காட்கிண்டி, மாடர்ன் டேப் ஸ்கோர்ஸ்
ஒளிப்பதிவு : ஜிஷ்மி காளித், பிரஸ்லி ஆஸ்கார் டிசோசா
இயக்கம் : பிஜாய் நம்பியார்
தயாரிப்பு : டி சீரிஸ், கேட்வே பிக்சர்ஸ், ரூக்ஸ் மீடியா
மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடக்கும் மோதல், காதல், நட்பு, பகை ஆகிய அனைத்தையும் வாக்கு அரசியல் மற்றும் சாதி பிரிவினை அரசியலோடு சேர்த்து சொல்வது தான் ‘போர்’ படத்தின் கதை.
அர்ஜூன் தாஸ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் பள்ளி பருவ நண்பர்கள். பள்ளியில் காளிதாஸை சிலர் அடிக்கும் போது அதை தடுக்காமல் அங்கிருந்து அர்ஜூன் தாஸ் ஓடிவிடுகிறார். இதனால், அவர் மீது காளிதாஸ் கடும் கோபம் கொள்ள, அந்த கோபம் அவர் மீது வன்மாக மாறுகிறது. அர்ஜூன் தாஸ் படிக்கும் மருத்துவக் கல்லூரியில் சேரும் காளிதாஸ் ஜெயராம், தனது பள்ளி காலத்தில் அர்ஜூன் தாஸ் செய்த துரோகத்தை மறக்காமல் அதற்கு பழி தீர்க்க நினைக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட, அந்த மோதல் கல்லூரி மாணவர்களுக்கு இடையிலான போராக வெடிப்பது தான் ‘போர்’ படத்தின் கதை.
நாயகனாக நடித்திருக்கும் அர்ஜூன் தாஸ், வழக்கும் போல் தனது குரல் மூலம் மிரட்டினாலும், இந்த படத்தில் நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார். பிரபு என்ற கதாபாத்திரத்தில் மூத்த மாணவராக, கோபக்கார இளைஞராக அவர் திரையில் தோன்றும் போதெல்லாம் அனல் பறக்கிறது. அர்ஜூன் தாஸ் கதை தேர்வில் சற்று கவனம் செலுத்தினால் நிச்சயம் மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோ ஆகலாம்.
முரட்டுத்தனமான தோற்றத்துடன், முரட்டுத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் காளிதாஸ் ஜெயராம், பள்ளியில் நடந்த துரோகத்தை மனதில் வைத்துக்கொண்டு, அர்ஜூன் தாஸ் மீது காட்டும் வன்மம் கொஞ்சம் ஓவராகத்தான் இருக்கிறது.
நாயகிகளாக நடித்திருக்கும் டி.ஜெ.பானு மற்றும் சஞ்சனா நடராஜன் இருவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். வில்லியாக நடித்திருக்கும் அம்ருதா ஸ்ரீனிவாசன், காமெடி வேடத்தில் நாயகனின் நண்பராக நடித்திருக்கும் மெர்வின் ரோசரியோ, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் ஜான் விஜய் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர்கள் ஜிஷ்மி காளித் மற்றும் பிரஸ்லி ஆஸ்கார் டிசோசா ஆகியோரது பணி படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. மாணவர்களுக்கு இடையே நடக்கும் மோதல் மற்றும் மாணவர்களின் வாகன பேரணி போன்ற காட்சிகளை ஒரே ஷாட்டில் படமாக்கி அசத்தியிருப்பவர்கள், படத்தை பிரமாண்டமாகவும் காட்டியிருக்கிறார்கள்.
இசையமைப்பாளர்கள் சஞ்சித் ஹெக்டே, துருவ் விஸ்வநாத், கவுரவ் காட்கிண்டி ஆகியோரது இசையில் பாடல்கள் புரியவில்லை என்றாலும் கேட்கும்படி இருக்கிறது. மாடர்ன் டேப் ஸ்கோர்ஸ்-ன் (ஹரிஷ் வெங்கட் & சச்சிதானந்த் சங்கரநாராயணன்) பின்னணி இசை சில இடங்களில் காட்சிகளுக்கு சுறுசுறுப்பளித்தாலும், பல இடங்களில் மந்தமாக்கும் விதத்தில் பயணித்திருக்கிறது.
மணிரத்னத்தின் சிஷ்யர் என்பதை தனது ஒவ்வொரு படத்திலும் நிரூபிக்கும் இயக்குநர் பிஜாய் நம்பியார், இந்த படத்தை மணிரத்னத்தின் முந்தைய படங்களின் பாதிப்பாக எடுத்திருப்பவர், கதை சொல்லலை சற்று வித்தியாசமாக கையாண்டிருக்கிறார்.
படம் தொடங்கிய சுமார் ஒரு மணி நேரம் மாணவர்களின் வாழ்வியலை அப்பட்டமாக காட்டுபவர், அதன் பிறகு மாணவர்களின் நட்பு, காதல், கோபம், மோதல் ஆகியவற்றுடன் சாதி அரசியலையும் சேர்த்து பேசியிருக்கிறார்.
சில காட்சிகள் ரசிகர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தினாலும் மேக்கிங்கில் மிரட்டியிருக்கும் இயக்குநர் பிஜாய் நம்பியார், திரைக்கதையில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் ‘போர்’ நிச்சயம் ரசிகர்களின் நெஞ்சங்களை வென்றிருக்கும்.
ரேட்டிங் 2.5/5