அதிக வருமானத்திற்கு ஆசைப்படும் விவேக் எந்த வேளையிலும் நிரந்தரமாக தங்குவதில்லை.. ஆனால் அவரது மனைவி சோனியா அகர்வால், தானும் வேலைக்கு போய், குடும்பத்தையும் பாரத்து, இரண்டு குழந்தைகளையும் ஒரு வழியாக படிக்க வைக்கிறார்.. ஒரு கட்டத்தில் மல்டி லெவல் மார்க்கெட்டிங்கில் சிக்கி தேவையில்லாமல் பல லட்சம் கடனாளியாகும் விவேக், அதை எப்படி சமாளிப்பது என தெரியாமல் திண்டாடுகிறார்.
அந்த சமயத்தில், மகன்களால் கைவிடப்பட்டு முதியோர் இல்லத்தில் வசிக்கும் மாமி ஷீலா பற்றியும் அவருக்கு 30 லட்ச ரூபாய் வங்கியில் இருப்பதும் அதன் மூலம் மாதம் 25 ஆயிரம் ரூபாய் வட்டியாக வருவதும் தெரிகிறது. அவரை தனது தாயாக தத்தெடுத்துக்கொண்டால் அந்த வருமானம் தனக்கு வருமே என கணக்கு போட்டு, அவரை தத்தெடுத்து வீட்டிற்கு அழைத்து வருகிறார்..
ஆனால் அவர் நினைத்ததற்கு நேர்மாறாக ஷீலா சரியான சாப்பாட்டு ராமியாக இருக்கிறார். அவருக்கு கிடைக்கும் வட்டிப்பணத்தை விட செலவு அதிகமாகிறது.. அதில்லாமல் சோனியாவுக்கும் ஷீலாவுக்குமான மருமகள் – மாமியார் உரசல் வேறு. பேசாமல் ஷீலாவை மீண்டும் முதியோர் இல்லத்துக்கு அனுப்பி விடலாம் என்கிற அளவுக்கு பிரச்சனை பெரிதாக, இதற்கு எப்படி தீர்வு கிடைக்கிறது என்பது தான் க்ளைமாக்ஸ்.
நான் தான் பாலா’ படம் போல சீரியசாக இல்லாமல் இதில் முழுக்க காமெடியில் இறங்கியுள்ளார். சந்தடி சாக்கில் டி.வி.சீரியல்களை அவர் வாருமிடம் சூப்பர்.. ஆனாலும் ஹீரோவாகி விட்டதாலோ என்னவோ கமெடியைக் குறைத்துக் கொண்டிருக்கிறார் விவேக். ஆனால், கடைசியில் சென்டிமென்ட் காட்டி நெகிழ வைத்துவிடுகிறார்..
காமெடியன் என்று நினைக்காமல் விவேக்கின் ஜோடியாக நடிக்க ஒத்துக்கொண்ட சோனியா அகர்வாலைப் பாராட்ட வேண்டும். சீரியஸாக இதுவரை பார்த்துவந்த செம்மீன் ஷீலாவை காமெடி கேரக்டரில் பார்க்கும்போது புதிதாக தெரிகிறது. இரண்டு காட்சிகளில் நடித்திருந்தாலும், ‘எஸ்.பி.பி சந்தோஷ் குமார்’ என்ற வேடத்தில், நான் கடவுள் ராஜேந்திரன், திரையரங்கையே அதிர வைக்கிறார்.
கே.எஸ்.செல்வாராஜின் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும் கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது. குறிப்பாக மலேசிய பாடல் காட்சி கொஞ்சம் ரிலீப் தருகிறது. ஒரு குடும்பக்கதையில் சிக்கனம், பாசம், தேவையற்ற ஆடம்பரம் என அனைத்து அம்சங்களையும் புகுத்தி, நம்மை ஓரளவு ரசித்து சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் சந்திர மோகன்.