மாசு என்கிற மாசிலாமணி – விமர்சனம்

சிறுவயது முதலே நண்பர்களான சூர்யாவும் பிரேம்ஜியும் பணத்திற்காக பல தகிடு தத்தங்களை செய்கின்றனர். ஒருகட்டத்தில் தான் காதலிக்கும் நயன்தாராவின் பணத்தேவைக்காக கஸ்டம்ஸ் அதிகாரிகளாக தாதா ஒருவரை ஏமாற்றி பணத்தை அடிக்க, அவர்களது கும்பல் இருவரையும் துரத்துகிறது. அதில் இருவரும் விபத்தில் சிக்குகின்றனர்.

விபத்தில் அடிபட்டு சிகிச்சை பெற்ற சூர்யாவுக்கு ஆவிகளின் உருவங்கள் கண்முன்னே தெரிகின்றன. கூடவே அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டிய பொறுப்பும் ஏற்படுகிறது. அந்த ஆவிகளில் தனது தந்தையும் ஒருவர் என சூர்யாவுக்கு தெரிய வருகிறது. தந்தையின் கோரிக்கை, காதலியின் பணத்தேவை, எதிரிகளின் துரத்தல் என எல்லாவற்றையும் சூர்யா எப்படி சமாளிக்கிறார் என்பதுதான் மீதிக்கதை.

தந்தை-மகன் என்று சொல்வதை விட மனிதன்-ஆவி என இரண்டுவிதமான வேடங்களில் நடித்துள்ள சூர்யாவுக்கு இந்த களம் ரொம்பவே புதுசு.. தந்தை சக்தி(ஆவி)யாகவும், மகன் மாசு ஆகவும் மாஸ் காட்டியுள்ளார் சூர்யா. ஆவிகளை ஏவிவிட்டு பணம் சம்பாதிக்கும் சூர்யாவின் டெக்னிக் சூப்பரோ சூப்பர். குறிப்பாக நண்பன் பிரேம்ஜியையும் ஆவி என உணரும் தருணம் ‘நச்’.

நர்ஸாக வரும் நயன்தாரா வரும் காட்சிகள் குறைவு தான் என்றாலும் கிடைத்த இடத்தை அழகாக நிரப்பியுள்ளார். பிரணிதாவுக்கும் சொல்லிக்கொள்ளும்படியான காட்சிகள் இருப்பதால் நம் மனதில் நிற்கிறார். நல்லவராகவே பார்த்து பழகிய சமுத்திரக்கனியை வில்லனாக பார்ப்பது சிரமாமகத்தான் இருக்கிறது. போலீஸ் அதிகாரியாக வரும் பார்த்திபன் நடிப்பில் நையாண்டி துளியும் குறையவில்லை.

மொபைல் வாங்கும்போது சார்ஜரையும் கூடவே தருவதுபோல, வெங்கட் பிரபு படங்களின் நிரந்தர காமெடி நடிகர் பிரேம்ஜி, சூர்யாவுடன் காமெடி காட்சிகளில் நன்றாகவே ஈடுகொடுத்திருகிறார். சூர்யாவுக்கு அவர் கொடுக்கும் ஐடியாக்கள் குழந்தைகளை குதூகலப்படுத்தும்.

யுவன் இசையில் வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ள ‘பிறவி’ பாடல் மனதை வருடுகிறது. பின்னணி இசையிலும் த்ரில்லர் காட்டாமல் புதுமையாக பண்ணியிருக்கிறார் யுவன். த்ரில்லர் காட்சிகளில் ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவுக்கான மெனக்கெடல் நன்றாகவே தெரிகிறது.

ஆவி படங்கள் என்றாலே திடுக்கிட வைக்கும் எபக்ட், ஆடியன்ஸை சீட் நுனிக்கு கொண்டு வருவது, வேண்டாதவர்களை வரிசையாக பழிவாங்குவது என பார்த்து பழகிய நமக்கு, ஆவிகளுக்கு உதவும் மனிதன் என்கிற கோணத்தில் புதுரூட்டில் சம்மர் ட்ரீட் கொடுத்திருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

சூர்யாநயன்தாராபிரேம்ஜிமாசு என்கிற மாசிலாமணிவெங்கட் பிரபு