நடிகர்கள் : ஆதவ் கிருஷ்ணா, சிம்ரன், படவா கோபி, வினோதினி, ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனசெயன், முத்து புவன்
இசை : அஸ்வமித்ரா
ஒளிப்பதிவு : என்.எஸ்.சதீஷ்குமார்
இயக்கம் : ஆர்.மகாலக்ஷ்மி முருகன்
தயாரிப்பு : ஜெ.பி பிலிம்ஸ், ஜோன்ஸ் வழங்கும் – ஆர்.ரகு
தாய் இல்லாமல் தந்தை அரவணைப்பில் வளரும் நாயகி சிம்ரன், தன்னுடன் கல்லூரியில் படிக்கும் நாயகன் ஆதவ் கிருஷ்ணாவை காதலிக்கிறார். படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தும் ஆதவ் கிருஷ்ணா, சிம்ரனின் காதலை முதலில் நிராகரித்தாலும், அவரது உண்மையான அன்பை புரிந்துக் கொண்டு அவரும் காதலிக்க தொடங்குகிறார். இதற்கிடையே, ஆதவ் கிருஷ்ணாவின் பெற்றோரை சந்தித்து, தங்களது காதலுக்கு சம்மதம் பெறும் சிம்ரன், தன்னையும், தனது தந்தையையும் விட்டு பிரிந்து சென்ற தனது தாயை சந்தித்து, தனது காதல் பற்றி தெரிவிக்க விரும்புகிறார்.
அதன்படி, ஆதவ் கிருஷ்ணாவும், சிம்ரனும் காசிக்கு செல்கிறார்கள். அங்கு தன் அம்மாவை சந்தித்து காதல் பற்றி தெரிவிக்கும் சிம்ரனுக்கு காதலனை பிரிய வேண்டிய நிலை ஏற்படுகிறது. மறுபக்கம் மாயமான காதலியை தேடும் ஆதவ் கிருஷ்ணாவும் பல சிக்கல்களை எதிர்கொள்கிறார். இவர்களது பிரிவின் பின்னணி என்ன?, பிரிந்த காதலர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா?, என்பது தான் படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஆதவ் கிருஷ்ணா அறிமுக நாயகனாக இருந்தாலும், மிகவும் இயல்பும் நம்பிக்கையும் நிறைந்த நடிப்பை வழங்குகிறார். குறிப்பாக காதல் மலரும் தருணங்களிலும், கிளைமாக்ஸ் காட்சிகளிலும் அவரது உணர்ச்சி வெளிப்பாடு கதையின் தாக்கத்தை உயர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
நாயகியாக நடித்திருக்கும் சிம்ரன், புத்துணர்ச்சியோடும், துடிதுடிப்போடும் நடித்து கவனம் ஈர்க்கிறார். காதலனிடம் மட்டும் இன்றி, அவரது பெற்றோரிடத்திலும் தன் காதலை விவரித்து சம்மதம் பெறுபவர், தனது ஒவ்வொரு அசைவுகளிலும் தன் காதல் மீதும், காதலர் மீதும் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையை அழுத்தமாக வெளிக்காட்டியிருக்கிறார்.
லிஃப்ட் கேட்ட ஒருவருக்கு உதவும் சாம்ஸ், அதனால் எதிர்பாராத விதமாக பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறார். அந்த சிக்கலை சமாளிக்க அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்ச்சியான கலகலப்பை உருவாக்குகின்றன.
நாயகனின் பெற்றோராக நடித்திருக்கும் படவா கோபி, வினோதினி ஆகியோர் தங்களது பணியை சரியாக செய்திருந்தாலும், அவர்களது கதாபாத்திரம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் நடிகர், ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனஞ்செயன், முத்து புவன் உள்ளிட்ட அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ்குமார், சென்னை மற்றும் காசியை இயல்பாக படமாக்கி திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்.
அஸ்வமித்ரா இசையில் பாடல்கள் காதல் உணர்வுகளுக்கு உயிரூட்டியிருக்கிறது. பின்னணி இசை காட்சிகளுக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.
காதல் கதை என்றாலும், அதனுள் இருக்கும் திருப்பங்களை மிக சரியாக கையாண்டு படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீகாந்த்.என்.பி.
அசோக் அமிர்தராஜின் கதை மற்றும் வசனம் தற்போதைய காலக்கட்ட இளைஞர்களின் காதலை கமர்ஷியலாக சொன்னாலும், உண்மையான காதல் மற்றும் அதன் வலியை உணர்த்தியிருக்கிறது.
திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் ஆர்.மகாலக்ஷ்மி முருகன், காதல் கதை என்றாலும், தாய் – மகள் உறவு, குடும்ப உறவு ஆகியவற்றை பின்னணியாக கொண்டு நேர்மையான படத்தை கொடுத்திருக்கிறார்.
இயக்குநர் மகாலட்சுமி முருகன், இன்றைய இளைஞர்களின் மனநிலையை நுணுக்கமாகப் புரிந்துகொண்டு திரைக்கதையை வடிவமைத்துள்ளார். சமூக வலைதளங்களை வெறும் பின்னணிக் கருவியாக அல்லாமல், கதையின் முக்கிய அங்கமாக இணைத்திருக்கும் அவரது அணுகுமுறை தனித்துவமாகவும் கவனிக்கத்தக்கதாகவும் உள்ளது.
கதையின் இரண்டாம் பாதியை போல் முதல் பாதி கதை வேகமாக சென்றிருந்தால், படம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். படத்தின் முக்கியமான காதல் உணர்வு தெளிவாக வெளிப்பட்டு, அது பார்வையாளர்களின் மனதில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். இருந்தாலும், மென்மையான காதல் பயணத்தை உணர்வுப்பூர்வமாக சொல்லியிருக்கும் இந்த ‘லவ் ஷேர் சப்ஸ்கிரைப்’ படத்தை ஒரு முறை பார்க்கலாம்.
ரேட்டிங் 3/5