சொந்த ஊரில் பெண் கிடைக்காமல் சென்னைக்கு வந்து பெண் தேடும் திருச்சி இளைஞன் படும் பாடு தான் இந்த ‘கன்னா பின்னா’.. டைட்டிலுக்கு ஏற்றமாதிரி கன்னா பின்னாவெனத்தான் படமும் இருக்கிறது. திருச்சியில் இருக்கும் தியாவுக்கு அவனது பெற்றோராக பெண் பார்த்து கல்யாணம் நடத்தி வைப்பது போல தெரியவில்லை..
அதனால் புரோக்கர் மூலமாக பெண் தேட முயற்சிக்கையில் சிக்கல் ஏற்படுகிறது. இனி சொந்த ஊர் பக்கம் பெண்ணே கிடைக்காத நிலையில் சென்னைக்கு சென்று திருமணம் செய்வதாக சபதம் செய்து பஸ் ஏறுகிறார் தியா.. சிங்கார சென்னையில் அவருக்கேற்ற வாழ்க்கைத்துணை கிடைத்ததா இல்லையா என்பதை மீதிப்படத்தில் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்..
கதையின் நாயகன் தியா தான் படத்தின் இயக்குனரும்.. தனக்கு பொருத்தமான கதை இதுதான் என தேர்வு செய்து அதில் ஸ்கோர் பண்ண முயற்சித்திருக்கிறார்.. ஆனால் பாஸ்மார்க் வாங்குவதற்கே சிரமப்பட்டு இருக்கிறார். அவர் பெண் தேடும் படலம், க்ளைமாக்ஸ் வரையில் தான் படும் கஷ்டங்களை நகைச்சுவை ஜூஸாக பிழிந்து கொடுப்பதாக ரசிகர்களை பிழிந்தெடுத்திருக்கிறார் தியா.
முதன்மை கதாநாயகியாக வரும் அஞ்சலி ராவுக்கும் நாயகன் தியாவுக்கும் எந்த தொடர்புமில்லை.. படஹ்தின் மற்ற உபரி கதாநாயகிகளும் வந்தோம் போனோம் என போகிறபோக்கில் காணாமல் போய்விடுகிறார்கள். வில்லனாக வரும் சிவசுப்பிரமணியம் சற்று கவனம் ஈர்க்கிறார். ஜெரால்டு ராஜமாணிக்கத்தின் ஒளிப்பதிவும் ரோஷன் சேதுராமனின் இசையும் கன்னா பின்னாவென அலையாமல் கச்சிதமாக அமைந்திருக்கின்றன.
சிறுவர்களுக்கே பேஸ்புக், வாட்ஸ் அப் தெரிந்திருக்கும் இந்த காலத்தில் பேஸ்புக் பற்றி தெரியாதவர் தான் கதாநாயகர் என்பது காதில் வைத்த மிகப்பெரிய வாழைப்பூ. அதிலும் புரோபைல் பிக்சரில் வைக்க படம் தேவை ஏன் நண்பன் சொன்னான் என்று நள்ளிரவு நேரத்தில் ஸ்டுடியோகாரனை எழுப்பி போட்டோ எடுத்து பிரிந்தும் போட்டுக்கொண்டு வருவதெல்லாம்.. என்ன விளையாட்டு சார் இது..?.
நிறைய இடங்களில் லாஜிக் மீறல்கள் மற்றும் வலிந்து திணிக்கப்பட்ட காட்சிகள் தான் படத்தின் பலவீனம்.. கதை உருவாக்கத்திலேயே இயக்குனர் தியா இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் ஒருவேளை ரசிகனை ஈர்த்திருக்குமோ என்னவோ..?