‘இரும்பன்’ விமர்சனம்

நடிகர்கள் : ஜுனியர் எம்.ஜி.ஆர், ஐஸ்வர்யா தத்தா, யோகி பாபு, செண்ட்ராயன், சம்பத்ராம், ஷாஜி சவுத்ரி, ரக்‌ஷிதா, அஷ்வினி, மணிமாறன், யோகி தேவராஜ்
இசை : ஸ்ரீகாந்த் தேவா
ஒளிப்பதிவு : லெனின் பாரதி
இயக்கம் : கீரா
தயாரிப்பு : தமிழ் பாலா, ஆர்.வினோத்குமார்

கீரா இயக்கத்தில் ஜுனியர் எம்.ஜி.ஆர் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம் ‘இரும்பன்’. தமிழ் பாலா மற்றும் ஆர்.வினோத்குமார் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் எப்படி இருக்கிறது? விமர்சனத்தை பார்ப்போம்.

நரிக்குறவரான நாயகன் ஜுனியர் எம்.ஜி.ஆர், தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில், வைரக்கல்லுக்காக ஒரு பெண்ணை தேடி செல்கிறார். தான் தேடி வந்த பெண் ஐஸ்வர்யா தத்தா தான் என்று தெரியாமலேயே அவர் மீது காதலும் கொள்கிறார். ஐஸ்வர்யா தத்தா ஜுனியர் எம்.ஜி.ஆரிடம் நட்பாக பழகிறார். இதற்கிடையே தனது காதலை ஐஸ்வர்யா தத்தாவிடம் ஜுனியர் எம்.ஜி.ஆர் சொல்ல முயற்சிக்கும் போது, அவர் துறவியாக முடிவு செய்து ஜெயின் ஆசிரமத்தில் சேர்ந்துவிட, ஜுனியர் எம்.ஜி.ஆரின் காதல் என்ன ஆனது? ஐஸ்வர்யா தத்தா துறவியாக முடிவு செய்தது ஏன்? என்பதை முழுக்க முழுக்க கமர்ஷியலாக சொல்வதே ‘இரும்பன்’ படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஜுனியர் எம்.ஜி.ஆர் முதல் படத்திலேயே காதல், செண்டிமெண்ட், நகைச்சுவை, சண்டைக்காட்சி, நடனம் என அனைத்து ஏரியாவிலும் தனது திறமையை நிரூபிக்க கடுமையாக உழைத்திருக்கிறார். இருந்தாலும், நடனம் மற்றும் சண்டைக்காட்சிகளில் அசத்தியிருக்கிறார். அதே சமயம், நடிப்பில் கொஞ்சம் கூடுதல் பயிற்சி எடுத்துக்கொண்டால் நிச்சயம் கோலிவுட்டில் கவனம் ஈர்க்கும் நடிகராக வலம் வரலாம். ஆக்‌ஷன் படங்களுக்கு ஏற்றவாறு இருக்கும் ஜுனியர் எம்.ஜி.ஆர், நல்ல படங்களில், நல்ல வேடங்களில் நடித்து தனது நடிப்பு திறமையை வளர்த்துக்கொண்டால் நல்ல எதிர்காலம் உண்டு.

நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா, கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருப்பதோடு குட்டை பாவடை உள்ளிட்ட ஆடைகள் மூலம் கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார்.

யோகி பாபு வரும் காட்சிகள் அதிகமாக இருப்பது போல், காமெடியும் நிறைவாகவும் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. கூடுதல் காமெடிக்காக பயன்படுத்தப்பட்டிருக்கும் செண்ட்ராயன் தன்னால் முடிந்தவரை சிரிக்க வைக்க முயற்சிக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் ஷாஜி சவுத்ரி, போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள சம்பத்ராம், நாயகனின் தந்தையாக நடித்துள்ள யோகி தேவராஜ், மணிமாறன், அஸ்வினி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் அளவான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

லெனின் பாலாஜியின் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் பளிச்சென்று இருப்பதோடு, கவனம் ஈர்க்கும் வகையிலும் இருக்கிறது. கடல் மற்றும் கடல் சார்ந்த பகுதிகளை அழகாக படமாக்கியிருக்கிறார்.

ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் இனிமையாகவும், துள்ளல் ரகமாகவும் இருக்கிறது. ”நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி…” பாடலின் ரீமிக்ஸ் திரையரங்கையே ஆட்டம் போட வைப்பது உறுதி. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் கீரா, நரிக்குறவர்கள் பற்றிய படமாக எடுக்க முயற்சித்தி பிறகு நாயகன் ஜுனியர் எம்.ஜி.ஆருக்கான படமாக இயக்கியிருக்கிறார். முழுக்க முழுக்க கமர்ஷியலான படமாக கொடுக்க முடிவு செய்திருப்பவர் சில இடங்களில் சிறுசிறு சமூக அரசியல் பேசி கவனம் பெறுகிறார்.

வேகமான திரைக்கதை, பாடல்கள், சண்டைக்காட்சிகள் மற்றும் நகைச்சுவை காட்சிகள் என ரசிகர்களை மகிழ்விக்க தேவையான அனைத்து அம்சங்களும் நிறைவாக இருப்பதால் ‘இரும்பன்’ படத்தை தாராளமாக பார்க்கலாம்.

ரேட்டிங் 3/5

Aishwarya Duttairumban reviewjunior mgrKeerakollywood movie irumban reviewkollywood movie reviewtamil movie irumban reviewYogi BAbu