’ஐடென்டிட்டி’ (Identity) விமர்சனம்

நடிகர்கள் : டோவினோ தாமஸ், திரிஷா, வினய் ராய், ஷம்மி திலகன், ஆத்யா மேனன், அர்ஜு வர்க்கீஸ், மந்திரா பேடி, அர்ச்சனா ரவி
இசை : ஜேக்ஸ் பிஜாய்
ஒளிப்பதிவு : அகில் ஜார்ஜ்
இயக்கம் : அகில் பால் – அனஸ் கான்
தயாரிப்பு : ராகம் மூவிஸ் & கான்ஃபிடண்ட் குரூப் – ராஜு மல்லியத் & ராய்.சி.ஜே

டோவினோ தாமஸ், திரிஷா நடித்திருக்கும் மலையாளத் திரைப்படமான ‘ஐடென்டிட்டி’ தமிழ் ரசிகர்கள் மனதிலும் தஞ்சம் அடைந்ததா? அல்லது ரசிகர்களால் கண்டுக்கொள்ளாமல் தட்டிவிட்டு போக வைக்குதா?, விமர்சனத்தை பார்ப்போம்.

துணிக்கடையில் பெண்கள் ஆடை மாற்றும் அறையில் செல்போனை மறைத்து வைத்து அதன் மூலம் அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறிப்பவரை, அவரது இடத்திற்கே சென்று எரித்து கொலை செய்கிறார் மர்ம நபர் ஒருவர். அந்த கொலையாளியை நேரில் பார்த்த சாட்சியான திரிஷா, மூலம் கொலையாளியை பிடிக்க களத்தில் இறங்கும் போலீஸ் அதிகாரி வினய், குற்றவாளிகளின் அடையாளங்களை வைத்து அவர்களை அப்படியே வரையும் அதீத திறன் படைத்த டோவினோ தாமஸின் உதவியை நாடுகிறார். அதன்படி, திரிஷா சொல்லும் அடையாளங்களை வைத்து டோவினோ தாமஸ் வரையும் உருவம் அவரைப் போலவே இருக்கிறது.

கொலையாளி நான் தான் என்றால், என்னையே காட்டிவிட்டு போகலாமே பிறகு ஏன் இப்படி அடையாளம் சொல்ல வேண்டும்? என்ற டோவினோ தாமஸின் கேள்வி ஒரு பக்கம். மீண்டும் மீண்டும் ஒரே அடையாளத்தை எந்தவித தடுமாற்றமும், குழப்பமும் இல்லாமல் சொல்லும் திரிஷா, கொலை செய்யப்பட்டது யார்?, கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும்? என்பதை விட கொலையாளியை எப்படியாவது பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டும் போலீஸ் அதிகாரி வினய், இவர்கள் மூன்று பேருக்கும் அந்த கொலைக்கும் என்ன சம்மந்தம்? என்பதை பரபரப்பான கிரைம் திரில்லர் ஜானரில் மட்டும் இன்றி ஸ்டைலிஷான ஆக்‌ஷன் கமர்ஷியல் ஜானரிலும் சொல்வது தான் ‘ஐடென்டிட்டி’.

வித்தியாசமான கதைக்களங்களில் நடித்து தொடர்ந்து கவனம் ஈர்க்கும் நாயகன் டோவினோ தாமஸ், ஹரன் சங்கர் என்ற கதாபாத்திரத்தில் அதீத திறன் படைத்தவராக, ஸ்டைலிஷான லுக்கில் அழுத்தமாக நடித்திருக்கிறார். தனித்துவமான மேனரிசம் மூலம் பார்வையாளர்களின் ஒட்டு மொத்த கவனத்தையும் தன் கதாபாத்திரத்தின் மீது திருப்பும் டோவினோ தாமஸ், நடிப்பை தாண்டி, ஆக்‌ஷன் மற்றும் ஸ்டைலிஷ் என இரண்டிலும் அமர்க்களப்படுத்துகிறார்.

காதல், டூயட் பாடல் உள்ளிட்ட கமர்ஷியல் அம்சங்கள் இல்லாத நாயகியாக திரைக்கதையில் முக்கிய பங்கு வகித்திருக்கும் திரிஷாவின் குழப்பமான மனநிலை மற்றும் விபத்தில் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

ஆரம்பத்தில் போலீஸ் அதிகாரியாக வரும் வினய், அடுத்தடுத்த காட்சிகளில் எடுக்கும் அவதாரங்கள் எதிர்பாராத திருப்பங்களாக இருப்பதோடு, திரைக்கதையின் விறுவிறுப்புக்கு பெரும் துணையாக பயணித்திருக்கிறது.

அஜு வர்க்கீஸ், மந்திரா பேடி, அர்ச்சனா கவி, ஷம்மி திலகன், ஆர்ய, அர்ஜுன் ராதாகிருஷ்ணன், விஷாக் நாயர், மேஜர் ரவி, சுஜித் சங்கர் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும் திரைக்கதையின் வேகத்திற்கும், விறுவிறுப்புக்கும் ஈடுகொடுக்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் அகில் ஜார்ஜின் கேமரா கிரைம் திரில்லர் ஜானர் படத்திற்கு ஏற்ப பயணித்திருப்பதோடு, விமானத்தில் நடைபெறும் சண்டைக்காட்சி, கார் சேசிங் உள்ளிட்டவைகளை பிரமாண்டமாகவும், நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறது.

இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை திரைக்கதையில் இருக்கும் பரபரப்பு மற்றும் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் பயணித்திருப்பதோடு, பல இடங்களில் காட்சிகளுக்கு உயிரோட்டமாகவும் பயணித்திருக்கிறது.

கிரைம் திரில்லர் ஜானரில் தொடங்கும் கதை இரண்டாம் பாதியில் வேறு ஒரு ஜானரில் பல கிளைக்கதைகளோடும், பல்வேறு காதாபாத்திரங்களோடும் பயணித்தாலும், அனைத்தையும் நேர்த்தியாக தொகுத்து பார்வையாளர்களுக்கு புரியும்படி சொல்லியிருக்கிறார் படத்தொகுப்பாளர் சாமன் சாக்கோ.

ஒரு கொலை, அதை செய்வதர் யார்? என்பதை கதையின் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டு, அதன் பிறகு வரும் ஒவ்வொரு காட்சிகளையும் சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும்படி வடிவமைத்திருக்கும் இயக்குநர்கள் அகில் பால் – அனஸ் கான், பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை எதாவது ஒரு திருப்பத்தின் மூலம் படத்தை பரபரப்பாக நகர்த்தி செல்கிறார்கள்.

கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ், கொலையாளியை பார்த்தவர், கொலை செய்தவர், இவர்களை தாண்டிய ஒரு குற்றவாளி என அனைவரையும் ஒரே இடத்தில் பயணிக்க வைத்ததோடு, ஒன்றாக பயணிக்க வைத்து அவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களின் மூலம் பார்வையாளர்களை பதற்றமான மனநிலைக்கு அழைத்துச் செல்லும் இயக்குநர்கள், இரண்டாம் பாதியில் கிரைம் திரில்லர் ஜானரையும் தாண்டி, ஏர் மார்சல், இந்திய பாதுகாப்பு படை, விமான போக்குவரத்து முறை, சாட்சி பாதுகாப்பு திட்டம் மற்றும் அதற்கான ஒரு அதிகாரி, அதை வைத்து நடத்தப்படும் அடையாளம் தொடர்பான மோசடி, என பல புதிய விசயங்கள் மூலம் திரைக்கதையை தொய்வில்லாமல் நகர்த்தி செல்கிறார்.

ரேட்டிங் 3.5/5

identity movie reviewidentity reviewtamil and malayalam movie identity reviewஐடென்டிட்டி சினிமா விமர்சனம்ஐடென்டிட்டி திரைப்பட விமர்சனம்ஐடென்டிட்டி விமர்சனம்