எங்க அம்மா ராணி – விமர்சனம்

மலேசியாவில் வசிக்கும் சாய் தன்ஷிகாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் (டிவின்ஸ்).. கம்பெனி வேலை விஷயமாக கம்போடியா நாட்டுக்குப்போன அவரது கணவரின் நிலை மூன்று மாதமாக என்ன ஆனது என்றே தெரியாத நிலை. கிராமத்தில் இருவீட்டரையும் எதிர்த்து காதல் மனம் புரிந்த சாய் தன்ஷிகாவுக்கு கணவன் இல்லாமல் சொந்த ஊருக்கு செல்ல முடியாத நிலை.. தனது மற்றும் குழந்தைகளின் விசாவை நீட்டிக்க வேலைக்கு செல்கிறார் சாய் தன்ஷிகா.. இந்நிலையில் இரண்டு மகள்களில் ஒரு சிறுமி திடீரென மரணம் அடைகிறார்..

இதனால் அதிர்ச்சியாகும் சாய் தன்ஷிகா இதற்கு மருத்துவமனையின் அலட்சியம் தான் காரணம் என நினைக்கிறார். ஆனால் டாக்டரோ சிறுமியின் உடலில் திடீரென உயிரை பறிக்கும் நோய் ஆரம்பத்தில் இருந்தே இருந்துள்ளது என்பதை கண்டறிகிறார். மேலும் இன்னொரு குழந்தைக்கும் அந்த நோய் இருக்க வாய்ப்பு இருப்பதையும் கண்டறிந்து சாய் தன்ஷிகாவிடம் சொல்கிறார். ஆரம்பத்தில் நம்ப மறுக்கும் சாய் தன்ஷிகாவுக்கு உண்மை விளங்குகிறது..

தீர்வே இல்லாத இந்த நோயின் உக்கிரத்தை சற்று தள்ளிப்போட குளுமையான மலைப்பகுதிக்கு சென்று கொஞ்ச காலம் தங்குமாறு அறிவுறுத்துகிறார் டாக்டர். அங்கே சென்று தங்கும்போது சாய் தன்ஷிகாவின் இன்னொரு மகள் மீது பக்கத்து வீட்டில் இருந்து இறந்துபோன ஒரு சிறுமியின் ஆவி பிடித்துக்கொள்கிறது..

ஆனால் ஆச்சர்யமாக அதன்பின் மகளுக்கு நோய் இருந்ததற்கான அறிகுறிகள் சுத்தமாக இல்லாததையும் தன் மகள் மீது பிடித்திருக்கும் ஆவிதான் காரணம் என்பதையும் அறிகிறார் சாய் தன்ஷிகா. தனது சாவுக்கு காரணமான இரண்டு நபர்களை பழிவாங்கி விட்டு, அதன்பின் உடனே சிறுமியின் உடலை விட்டு கிளம்பி விடுவேன் என கெடு வைக்கிறது ஆவி.

ஆவி இருந்தால் கொலைப்பழி தன் மகள் மீது விழும்.. ஆவி போய்விட்டால் தன் மகள் நீண்ட நாள் உயிர் பிழைக்க மாட்டாள் என்கிற சூழலில் ஒரு தாயாக சாய் தன்ஷிகா என்ன முடிவெடுக்கிறார் என்பது மனம் கனக்க வைக்கும் க்ளைமாக்ஸ்.

காட்சிக்கு காட்சி தாயன்பை பிரதிபலிக்கும் அற்புதமான கதை.. அதை தனது அருமையான நடிப்பால் படம் முழுக்க தாய்மையுடன் தாங்கி பிடித்திருக்கிறார் தன்ஷிகா. இந்தப்பெண்ணுக்கு ஏன் தான் இத்தனை சோதனை என கேட்கவைத்தாலும், தன்னம்பிக்கையுடன் அதை சாய் தன்ஷிகா எதிர்கொள்ளும் விதம் இன்றைய பெண்கள் கடைபிடிக்கவேண்டிய ஒன்று.. ஆனால் க்ளைமாக்ஸில் அவர் எடுக்கும் முடிவு..?

டிவின்ஸ் குழந்தைகளாக நடித்துள்ள வர்ணிகா மற்றும் வர்ஷா தங்களது துறுதுறு நடிப்பால் நம் மனதை கொள்ளையடிக்கிறார்கள். டாக்டராக வரும் சங்கர் ஸ்ரீஹரி முக்கியமான கேரக்டரில் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

டிபார்ட்மென்ட் ஸ்டோர் முதலாளியாக வரும் நமோ நாராயணன் ஜொள்ளு பார்ட்டியாக வந்தாலும், தாய்மாமனாக மாறும்போது தனது கேரக்டரை கௌரவப்படுத்துகிறார். வில்லனாக அனில் முரளி, சீப் டாக்டராக நடித்துள்ள ரியாஸ் அஹமது, குழந்தைக்கு டியூசன் சொல்லி கொடுக்கும் சீன மாஸ்டர் என மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் சோடை போகாத தேர்வு.

குமரன் மற்றும் சந்தோஷ் குமார் இருவரின் கூட்டு முயற்சியில் ஒளிப்பதிவில் மிகவும் நேர்த்தி. சுற்றுலா தளமாக பார்த்து ரசித்த மலேசியாவை ஒரு வாழ்விடமாக நம் மனதில் பதியவைத்துள்ளனர்.. இசைஞானி இளையராஜாவின் இரண்டு பாடல்களும் படத்தின் சூழலோடு பார்க்கும் யாரையும் கண்கள் கசிய வைக்கும் என்பதை மறுக்க முடியாது.. பின்னணி இசையில் மனதை ஊடறுத்து காட்சிகளின் வீரியத்தை நம் மீது ஏற்றுகிறார் ராஜா.

அறிமுக இயக்குனரான பாணி எந்தவித பிசிறும் இல்லாத கதையை எடுத்துக்கொண்டதற்காக பாராட்டலாம். சாய் தன்ஷிகாவுக்கு எந்தவிதத்திலாவது உதவி கிடைத்து விடுமோ என நம்மை எதிர்பார்க்கவைத்து, அதேசமயம் யதார்த்தம் என்ன என்பதையும் பொட்டில் அடித்த மாதிரி சொல்லியிருக்கிறார்..

குழந்தைக்குள் ஆவி புகுந்ததை அவர் கையாண்ட விதம் சரிதான் என்றாலும், இறுதியில் சாய் தன்ஷிகா அப்படி ஒரு முடிவு எடுப்பதை நம்மால் ஜீரணிக்க முடியவில்லை.. அதற்கு மாற்றாக ஒரு வழி சொல்லியிருந்தால் மனம் சமாதனப்பட்டிருக்கும். இருந்தாலும் மகள்களுக்காகவே வாழ்ந்த இந்த ராணி (சாய் தன்ஷிகா) நிச்சயம் போற்றுதலுக்கு உரியவள் தான்..

Enga Amma Rani Tamil Movie ReviewSai Dhanshikaஎங்க அம்மா ராணி – விமர்சனம்சாய் தன்ஷிகாவர்ணிகாவர்ஷா