இயக்குனர் விஜய் டைரக்சனில், பிரேமம் புகழ் மலர் டீச்சரான சாய்பல்லவி முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ள படம் தான் தியா.. தமிழ்ச்சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் முதல் பட வாய்ப்பு வந்தும், அதையெல்லாம் தவிர்த்து இந்த தியா படத்தில் சாய் பல்லவி நடிக்க ஒப்புக்கொண்டார் என்றால் இதில் எதோ சம்திங் ஸ்பெஷல் இருக்கத்தானே வேண்டும்.. பார்க்கலாம் அது என்னவென்று..
கல்லூரியில் படிக்கும்போதே காதலிக்கிறார்கள் சாய்பல்லவியும் நாக சவுர்யாவும்.. எதிர்பாராத விதமாக சாய்பல்லவி கர்ப்பமாகிறார்.. ஆரம்பத்தில் இருதரப்பு பெற்றோர்களும் குய்யோ முறையோ என குதித்தாலும், பின்னர் சமாதானமாகி கருவை கலைக்க வைப்பதுடன், ஐந்து வருடங்கள் கழித்து அவர்கள் திருமணத்தையும் நடத்தி வைக்கின்றனர்.
ஆனால் திருமணம் முடிந்த சில நாட்களிலேயே நாக சவுர்யாவின் அப்பா நிழல்கள் ரவி, சாய்பல்லவியின் அம்மா ரேகா, மாமா ஜெயகுமார், டாக்டர் சுஜிதா என ஒவ்வொருவராக மர்மமான முறையில் மரணத்தை தழுவுகின்றனர். போலீஸ் அதிகாரியான ஆர்ஜே பாலாஜி இதில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்.. ஆனால் சாய்பல்லவிக்கோ, இதன் பின்னணியில் இருப்பது கருவிலேயே கலைக்கப்பட்ட தனது குழந்தை தியா தான் என்பது மெதுவாக தெரிய வருகிறது.
அதன் அடுத்த குறி தனது கணவன் நாக சவுர்யா தான் என்பதையும், அதேசமயம் தான் உடன் இருக்கும்போது தனது கணவனுக்கு எதுவும் ஆகாது என அறிந்துகொள்ளும் சாய்பல்லவி தனது கணவனை தியாவிடமிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறார்.. ஆனால் அவரது நடவடிக்கைகளை பார்த்து கணவன், போலீஸ், டாக்டர் உட்பட பலரும் அவரை மன நோயாளியாக சந்தேகிக்கின்றனர்.. தனது மனைவியை இதிலிருந்து விடுவிப்பதற்காக, அவருக்கு தெரியாமல் வீட்டைவிட்டு வெளியே சென்று தங்குகிறார் நாக சவுர்யா. இந்தநிலையில் தனது கணவனை தியாவிடம் இருந்து சாய்பல்லவி காப்பாற்றினாரா..? தியா எதற்காக இத்தனை பேரையும் பழி வாங்குகிறாள் என்பதை மீதிக்கதை விளக்குகிறது.
முதன்முதலாக ஹாரர் ஏரியாவில் கால் வைத்திருக்கிறார் இயக்குனர் விஜய்.. ஆனாலும் தனது பாணியிலான சென்டிமென்ட்டையும் படம் நெடுக இழையோட விட்டுள்ளார்.. படம் முழுக்க சாய்பல்லவிக்கு, மிகவும் கனமான நடிப்பை வெளிப்படுத்தும் கேரக்டர்.. அதனால் தான் தமிழில் தன்னுடைய அறிமுகப்படமாக இந்தப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் போலும்.. குறிப்பாக கருவில் கலைக்கப்பட்ட தனது மகள் ஆவியாக தனது வீட்டிலேயே இருப்பதை அவர் உணரும் இடம் செம த்ரில்லிங்.
தமிழுக்கு புதுமுகமாக அறிமுகமாகியுள்ள நாக சவுர்யா கதைக்கு தேவையான பங்களிப்பை தந்து, படத்துடன் இயல்பாக ஒன்றியுள்ளார். போலீஸ் அதிகாரியாக வந்தாலும் அதிலும் தனது ட்ரேட் மார்க் நகைச்சுவையுடன் கலக்குகிறார் ஆர்ஜே பாலாஜி. படம் முழுதும் வசனமே இல்லாமல் தனது க்யூட்டான நடிப்பால் நம்மை கவர்ந்து விடுகிறார் பேபி வெரோனிகா. சக நடிகர்களான நிழல்கள் ரவி, ரேகா, சந்தான பாரதி, சுஜிதா, ஜெயக்குமார், குமரவேல் என பலரும் நிறைவான நடிப்பை தந்துள்ளனர்.. மனோதத்துவ டாக்டராக வருடம் எடிட்டர் ஆண்டனியும் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்.
படத்தின் ஜீவனே சாம் சி.சி.எஸ்ஸின் பின்னணி இசைதான். அதிலும் ஆலாலிலோ பாடல் மனதை உருக்குகிறது. அபார்ட்மென்ட் காட்சிகளில் மனதை அள்ளுகிறது நிரவ்ஷாவின் ஒளிப்பதிவு. அடுத்தடுத்த மரணங்களுக்கு இதுதான் காரணம் என முன்கூட்டியே சொல்லாமல் கதையை ட்விஸ்ட் வைத்து நகர்த்தி இருந்தால், இதுவும் வழக்கமான ஹாரர் த்ரில்லராகவே இருந்திருக்கும்.. ஆனால் காரணத்தை முன்கூட்டியே சொல்லிவிடுவதால், இது சென்டிமென்ட்டல் ஹாரர் படமாகி விடுகிறது. அதனாலேயே ஹாரர் படங்களுக்கான இயல்பான பயம் விலகி, கொஞ்சம் உணர்வுப்பூர்வமாகவே கதையுடன் நம்மால் பயணிக்க முடிகிறது.. கருக்கலைப்பு என்பது எவ்வளவு மோசமான விஷயம் என்பதை மிக அழகான படமாக, இல்லையில்லை பாடமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் விஜய்.