நடிகர்கள் : சமுத்திரக்கனி, லக்ஷ்மி பிரியா சந்திரமெளலி, கெளதம் வாசுதேவ் மேனன், அபிநயா
இசை : மியூசிக்லவுட் ஸ்டுடியோஸ் & டெக்னாலஜி
ஒளிப்பதிவு : யுவராஜ் தக்ஷன்
இயக்கம் : ராம் சக்ரி
தயாரிப்பு : அருண் ரங்கராஜுலு
ராம் சக்ரி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கார்மேனி செல்வம்’ மக்களை கவருமா ?, விமர்சனத்தை பார்ப்போம்.
கார் டிரைவராக வேலை செய்யும் நாயகன் சமுத்திரக்கனியின் மனைவி லக்ஷ்மி பிரியா சந்திரமெளலி தள்ளுவண்டி டிபன் கடை நடத்துகிறார். இவர்களுக்கு ஒரு ஆண் பிள்ளை இருக்கிறார். அளவான குடும்பம், அமைதியான வாழ்க்கை என்று மகிழ்ச்சியாக இருக்கும் இவர்களது வாழ்க்கையை, சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை புரட்டிப்போடுகிறது.
ஆரம்பத்தில் அவசர தேவைக்காக கடன் வாங்கும் சமுத்திரக்கனி, அதன் சிக்கலை அறியாமல் பெரும் கடனாளியாகி விடுகிறார். இதனால் கடன் பிரச்சனையில் சிக்கிக்கொள்பவர், அதில் இருந்து மீள்வதற்காக வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முடிவு செய்கிறார். அவரது முடிவு, அவரை பிரச்சனையில் இருந்து மீட்டெடுத்ததா ? என்பதை நடுத்தர வர்க குடும்ப வாழ்க்கையின் பிரதிபலிப்பாக சொல்வதே படத்தின் மீதிக்கதை.
எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை எதார்த்தமாக கையாண்டு பாராட்டுப் பெறும் சமுத்திரக்கனி, செல்வம் என்ற கதாபாத்திரத்தில் எளிய மனிதரின் எதிர்பார்ப்பு, ஏமாற்றம், மன போராட்டம், இயலாமை என அனைத்து உணர்ச்சிகளையும் மிக நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.
சமுத்திரக்கனிக்கு இணையாக நடிப்பில் அசத்தியிருக்கிறார் அவரது மனைவியாக நடித்திருக்கும் லக்ஷ்மி பிரியா சந்திரமெளலி. நடுத்தர வர்க்க குடும்ப பெண்களின் ஆசைகள், எதிர்பார்ப்பு, ஏமாற்றம் ஆகியவற்றை தனது கண்கள் மூலமாக வெளிக்காட்டியிருக்கும் அவர், ஆசையை விட அமைதியான வாழ்க்கையே போதும், என்ற தன் மனநிலைக்கு கணவரை மாற்ற முயற்சிக்கும் இடங்களில் எதார்த்தமாக நடித்து படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.
சமுத்திரக்கனியின் முதலாளியாக நடித்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனன், அவரது மனைவியாக நடித்திருக்கும் அபிநயா, சமுத்திரக்கனியின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் கரண் சக்கரவர்த்தி ஆகியோரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரும் துணையாக பயணித்திருக்கிறார்கள்.
நெரிசல் மிக்க நகரம் மற்றும் நகரத்தில் இருந்து விலகியிருந்தாலும் அமைதி நிறைந்த நாயகனின் குடியிருப்பு மூலம் மனிதர்களின் வேகமான வாழ்க்கையையும், ரசிக்க மறந்த வாழ்க்கையும் மிக அழகியலோடு காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் யுவராஜ் தக்ஷன்.
மியூசிக்லவுட் ஸ்டுடியோஸ் & டெக்னாலஜியின் (Musicloud Studio & Technology) இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்து பலம் சேர்த்திருக்கிறது.
ஜெகன்.ஆர்.வி மற்றும் தினேஷ்.எஸ் ஆகியோரின் படத்தொகுப்பும், சங்கரின் கலை இயக்கமும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.
இருப்பதை வைத்து மகிழ்ச்சியுடன் வாழ்வதே வாழ்க்கை, அதை விட்டுவிட்டு இல்லாததற்கு ஏங்கினால் அந்த வாழ்க்கை பெரும் ஏமாற்றத்தை கொடுக்கும், என்ற உண்மை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராம் சக்ரி.
மெதுவாக நகரும் திரைக்கதை, லாஜிக் இல்லாத கருத்தீயல் ஆகியவை எதார்த்தத்தை விட்டு சற்று விலகிச் செல்வது படத்தின் பலவீனமாக இருந்தாலும், எந்த வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது, என்பதை மனதுக்கு நெருக்கமாக சொல்லியிருக்கும் இயக்குநர் ராம் சக்ரியை மனதாரா பாராட்டி, படத்தை தாராளமாக வரவேற்கலாம்.
ரேட்டிங் 3/5