’பத்தா’ விமர்சனம்

நடிகர்கள் : விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா, அர்ஜுன் சிதம்பரம், ஹரி கிருஷ்ணன், சாண்டி பாலச்சந்தர், விஷ்ணு கோவிந்த், பாலமுருகன்
இசை : சாய் அப்யங்கர்
ஒளிப்பதிவு : செல்வகுமார் எஸ்.கே
இயக்கம் : பாலாஜி தரணிதரன்
தயாரிப்பு : ஸ்டார் ஸ்டுடியோ18 ,ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் – முராத் கெதானி  , பிரியா அட்லீ, அலோக் ஜெயின் & அஜித் அந்தாரே

ரவுடித்தனம், சாராய வியாபாரம் என்று பல குற்ற செயல்களை செய்து வரும் விஜய் சேதுபதியை பார்த்து ஊரே பயப்பட, ஒரு நாள் சிறுவன் ஒருவன் உதவி செய்தால் மட்டுமே தப்பிக்க முடியும், என்ற சூழ்நிலையில் சிக்கிக் கொள்கிறார். பத்தாவை பார்த்தாலே பயப்படும் சிறுவன் சாய் பிரித்வி ராஜ், தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி பத்தாவுக்கு எத்தகைய பாடம் எடுத்தார் ?, என்பதை ஒரு ரவுடிக்கும், சிறுவனுக்கும் இடையே நடக்கும் கதையை சுவையாக சொல்வதே ‘பத்தா’.

எப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்தாலும் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் அந்த கதாபாத்திரத்தை எளிதில் மக்களிடம் கடத்தும் வித்தையை சிறப்பாக செய்யும் விஜய் சேதுபதி, பத்தவச்சலம் என்கிற பத்தா கதாபாத்திரத்தை தன் நடிப்பாலும், உடல் மொழியாலும் மெருகேற்றியிருக்கிறார். முரட்டுத்தனம் மிக்கவராக தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும், மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் விஜய் சேதுபதி, ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக்கொண்டு தவிக்கும் போது, தனக்குள் ஏற்படும் அச்சம் மற்றும் தவிப்பை மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

சபரி என்ற பள்ளி மாணவர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் சாய் பிரித்வி ராஜ், விஜய் சேதுபதிக்கு இணையாக நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார். விஜய் சேதுபதி உடனான அவரது உரையாடல் மற்றும் நடிப்பு பெரும் பாராட்டு பெறும் விதத்தில் அமைந்துள்ளது.

விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்திருக்கும் லிஜோமோல் ஜோஸ், கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக வலம் வருகிறார்.

சஹஸ்ரா, அர்ஜுன் சிதம்பரம், ஹரி கிருஷ்ணன், சாண்டி பாலச்சந்தர், விஷ்ணு கோவிந்த், பாலமுருகன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களும் தங்களது பணியை நிறைவாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் செல்வகுமார்.எஸ்.கே, 80களில் நடக்கும் கதை என்பதால் அதற்கு ஏற்ப வண்ணங்களையும், விளக்குகளையும் பயன்படுத்தி கதை நடக்கும் காலக்கட்டத்தில் பார்வையாளர்களையும் பயணிக்க வைத்திருக்கிறார்.

சாய் அபயங்கர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கும் காட்சிகளுக்கும் உயிரூட்டியிருப்பதோடு, கதாபாத்திரங்களின் தனித்தன்மை, உணர்வுகள் மற்றும் செயல்பாடுகளுக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

முதல் பாதி படம் மெதுவாக நகர்வது போன்ற உணர்வை ஏற்படுத்தினாலும், ரவுடி மற்றும் சிறுவனை மையப்படுத்திய கதை மற்றும் உணர்ச்சிகரமான சம்பவங்களை படத்தின் முக்கிய அம்சங்களாக்கி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார் படத்தொகுப்பாளர் ஆர். கலைவாணன்.

ஊருக்குள் இருக்கும் எதார்த்தமான உண்மைகளும், மனிதர்களின் குணங்களும், சமூக நிகழ்வுகளும் சிறுவர்களின் உலகில் எத்தகைய வடிவம் பெருகின்றன என்பதை சுவைப்பட சொல்லியிருக்கும் இயக்குநர் பாலாஜி தரணிதரன், ஆணவத்தில் ஆடும் மனிதர்கள் நிலை சட்டென்று தடம் மாறும் என்பதையும், அப்போது அவர்கள் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உடைந்து போவார்கள், என்பதையும் உணர்ச்சிகரமாக சொல்லியிருக்கிறார்.

சாதாரணமான கதைக்கரு என்றாலும், அதற்கான திரைக்கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்பு ஆகியவற்றை மிக சிறப்பாக செய்திருக்கும் இயக்குநர் பாலாஜி தரணிதரன், விஜய் சேதுபதி மற்றும் சிறுவன் இடையிலான உரையாடல்களில் பல்வேறு உணர்வுகளை பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கிறார்.

சிறப்பான கதைக்கரு, சுவாரஸ்யமான திரைக்கதை, காட்சிகளில் இருக்கும் உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தும் நடிகர்கள் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன்.

ரேட்டிங் 4/5

baththa movie reviewbaththa reviewtamil movie baththa reviewதமிழ்ப் படம் பத்தா விமர்சனம்பத்தா திரைப்பட விமர்சனம்பத்தா விமர்சனம்