’அயலான்’ விமர்சனம்

நடிகர்கள் : சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், கருணாகரன், யோகி பாபு, பால சரவணன், சரத் கேல்கர், இஷா கோபிகர்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு : நீரவ்ஷா
இயக்கம் : ஆர்.ரவிகுமார்
தயாரிப்பு : கோட்டபாடி ஜே.ராஜேஷ்

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகியிருக்கும் ‘அயலான்’ படம் எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.

விண்ணில் இருந்து விழும் எரிக்கல்லின் சிறு பகுதி ஒன்று பூமியில் விழுகிறது. அந்த எரிக்கல்லை வைத்து நடத்தப்படும் ஆராய்ச்சியில் அது மிகவும் சக்தி வாய்ந்தது என தெரிய வருகிறது. அந்த கல் மூலமாக பூமியை இதுவரை யாரும் தோண்டாத ஆழத்தில் தோண்டி பூமிக்கு அடியில் உள்ள மிக கொடிய விசவாயுவை எடுத்து அதை ஆயுதமாக தயாரிக்கும் முயற்சியில் வில்லன் ஈடுபடுகிறார். இந்த திட்டத்தை செயல்படுத்தினால் ஒட்டு மொத்த பூமியே அழிந்துவிடும் என்பதை வேற்றுகிரகவாசிகள் அறிந்துக்கொள்கிறார்கள். இந்த பிரபஞ்சம் சமநிலையில் இருப்பதற்கு பூமி மிக முக்கிய காரணம் என்பதால் பூமியை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்யும் அவர்கள், அதற்காக வில்லனிடம் இருக்கும் அந்த எரிக்கல்லை கைப்பற்ற வேற்றுகிரகவாசி ஒருவரை பூமிக்கு அனுப்புகிறார்கள்.

சென்னையில் அமைந்துள்ள ஆராய்ச்சி கூடத்தில் வைக்கப்பட்டிருக்கும் எரிக்கல்லை எடுக்க வரும் வேற்றுகிரகவாசி, சிவகார்த்திகேயனுடன் நட்பாவதோடு, தனது முயற்சியில் அவரையும் சேர்த்துகொள்ள, இருவரும் சேர்ந்து பூமியை அழிவில் இருந்து மீட்டார்களா?, இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

சிவகார்த்திகேயன் வழக்கம் கதாநாயகியை கண்டதும் காதல் கொள்கிறார். உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பை காமெடியாக செய்து சிரிக்க வைக்கிறார். சில இடங்களில் சோகமாக நடிப்பவர், ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டவும் முயற்சித்திருக்கிறார். மொத்தத்தில், வேற்றுகிரகவாசி படம் என்றாலும் சிவகார்த்திகேயன் வழக்கமான கமர்ஷியல் நாயகனாகவே வலம் வருகிறார்.

நாயகியாக நடித்திருக்கும் ரகுல் ப்ரீத் சிங்குக்கு வழக்கமான கமர்ஷியல் கதாநாயகி வேடம் தான். சில காட்சிகளுக்கும், பாடல்களுக்கும் பயன்பட்டிருக்கிறார்.

யோகி பாபு, கருணாகரன் ஆகியோரது காமெடி காட்சிகள் சிரிக்க வைக்கிறது. பால சரவணனும் தனது பங்கிற்கு சிரிக்க வைக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் சரத் கேல்கர் மற்றும் அவரது உதவியாளராக நடித்திருக்கும் நடிகை இஷா கோபிகர் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

வேற்றுகிரகவாசிக்கு குரல் கொடுத்திருக்கும் நடிகர் சித்தார்த் மற்றும் வேற்றுகிரகவாசியாக நடித்திருக்கும் வெங்கட் செங்குட்டுவனின் பணி சிறப்பு.

முனிஷ்காந்த், கோதண்டம், செம்மலர் அன்னம், பானுப்ரியா ஆகியோர் வந்து போகிறார்கள்.

நிரவ்ஷாவின் ஒளிப்பதிவில் கிராமத்து காட்சிகள் கண்களுக்கு விருந்து படைப்பது போல், ஆக்‌ஷன் காட்சிகள் மிரட்டுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் அனைத்தும் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது.

அறிவியல் பூர்வமான கதையை கமர்ஷியல் ஃபார்முலாவோடு இயக்கியிருக்கும் ஆர்.ரவிகுமார், அனைத்து தரப்பினருக்கும் பிடித்த படமாக மட்டும் இன்றி புரியும் படமாகவும் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்.

மனிதர்களை போல் பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களையும் மதிக்க வேண்டும், அவைகளுக்கும் இந்த பூமி சொந்தம் என்ற கருத்தை அழுத்தமாக பதிவு செய்திருப்பதோடு, அதை அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி எளிமையான முறையில் சொல்லியிருக்கிறார்.

கிராபிக்ஸ் மூலம் வடிவமைக்கப்பட்டிருக்கும் வேற்றுகிரகவாசி மிக சிறப்பாக உள்ளது. ஹாலிவுட் படங்களுக்கு நிகரான கிராபிக்ஸ் காட்சி மற்றும் அதன் செயல்பாடு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருப்பதோடு, அதற்காக படக்குழு கடுமையாக உழைத்திருப்பதும் திரையில் தெரிகிறது.

தொழில்நுட்ப ரீதியாக படத்தை தரமாக கொடுத்திருப்பதோடு, அறிவியல் தொடர்பான கதையை எளிமையான முறையில் சொல்லிய விதம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பு மக்களையும் ரசிக்க வைக்கிறது.

ரேட்டிங் 3/5

ayalaan reviewsivakarthikeyan in ayalaan reviewtamil movie ayalaan reviewஅயலான் திரை விமர்சனம்அயலான் திரைப்பட விமர்சனம்அயலான் விமர்சனம்