அரிமாநம்பி விமர்சனம்

காதலியை கொல்லும் அரசியல்வாதி.. அதை அம்பலப்படுத்த துடிக்கும் இளைஞன்.. இருவருக்கும் இடையில் நடக்கும் சதுரங்க விளையாட்டுதான் அரிமாநம்பி..

பிரியா ஆனந்தை பார்த்ததுமே விக்ரம் பிரபுவுக்கு லவ்.. நட்பாகும் அடுத்த காட்சியிலேயே பிரியா கடத்தப்பட காதலியையும், கடத்தலுக்கான காரணத்தையும் தேடி அலைகிறார் விக்ரம் பிரபு. தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் சக்கரவர்த்தி தன் கள்ளக்காதலியை கொல்லும் வீடியோவை திரும்ப பெறுவதற்காக அதை வைத்திருக்கும் ஒரு சேனல் சி.இ.ஓவை மிரட்டத்தான் அவரது மகளான பிரியாவை கடத்தியிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது..

ஒருகட்டத்தில் காதலியும் வீடியோவும் விக்ரம் பிரபு கைக்கு கிடைக்கின்றன. ஒருபக்கம் அமைச்சரின் ஆட்கள் துரத்தல், இன்னொரு பக்கம் காதலர்கள் இருவரையும் குற்றவாளிகாளாக சித்தரித்து போலீசாரின் ரவுண்டப்… இதையெல்லாம் தாண்டி மெமரி கார்டில் இருக்கும் அந்த வீடியோவை மீடியாவிடம் சேர்க்க நினைக்கிறார் விக்ரம் பிரபு. பிடி இறுகும் வேளையில் எதிர்பாராத விதமாக மெமரி கார்டு உடைகிறது. இனி விக்ரம் பிரபு எப்படி சமாளிக்கிறார் என்பது க்ளைமாக்ஸ்.

படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடத்திலேயே ரன்வேயில் இருந்து டேக் ஆப ஆகும் விமானம் போல மேலே எழுகிறது கதை. வேகமான கதைக்கு விக்ரம் பிரபுவின் நடிப்பு, ஆக்ஷன் இரண்டுமே கைகொடுக்கின்றன. க்ளைமாக்ஸ் காட்சியில் போலீசை சுத்தலில் விடுவது சூப்பர். கதையில் முக்கியத்துவம் இருந்தாலும் பிரியா ஆனந்த் பெரிய அளவில் நம் கவனத்தை ஈர்க்கவில்லை.

வாவ்… பத்து நிமிடம் வரும் எம்.எஸ்.பாஸ்கரின் கதாபாத்திரம் அவருக்கு மட்டுமல்ல, நமக்கும் புதுசு.. ஒரு காட்சியில் அவர் காட்டும் அதிரடி அட்டாக்.. சான்சே இல்லை.. வில்லனாக சக்கரவர்த்தி.. 25 வருஷத்துக்கு முன் ‘உதயம்’ படத்தில் பார்த்த அதே முகத்துடன் ஆச்சர்யப்படுத்துகிறார். ஒரு மோசமான அரசியல்வாதி என்ன செய்வானோ.. இதிலும் அதையே தவறாமல் செய்திருக்கிறார். ஐந்து நிமிடம் மட்டுமே வந்து இரண்டு நிமிடம் ரொமான்ஸ் பண்ணிவிட்டு பரிதாபமாக செத்துப்போகிறார். லேகா வாஷிங்டன். ரவுடியாக வரும் அருள்தாஸ் ‘மிரட்டல்’ தாஸ்..

படத்தின் வேகத்தில் சிவமணியின் இசையில் வரும் பாடல்கள் காற்றோடு கலந்துவிடுகிறது. ரசிகனை ரெண்டரை மணி நேரம் சீட் நுனியில் உட்கார வைக்கும் வேலையை செவ்வனே செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஆனந்த் ஷங்கர். அரசியல்வாதி வில்லனாகவும் சாதாரண இளைஞன் ஹீரோவாகவும் இருந்தால் என்னென்ன லாஜிக் இடிக்குமோ அதெல்லாம் இதிலும் இடிக்கவே செய்கிறது. ஆனால் அதை மறக்கவைக்கும் விதமாக டெக்னாலஜியை எவ்வளவு உபயோகப்படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் பயன்படுத்தி காட்சிக்கு காட்சி நம் பல்சை எகிறவைத்திருக்கிறார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர்..

மொத்தத்தில் பொழுதுபோக்கிற்கு நூறு சதவீதம் உத்தரவாதம் தருகிறார் அரிமாநம்பி.

ArimanambiPriya AnandVikram Prabhuவிக்ரம் பிரபு