5 மனிதர்கள், 4 வாழ்க்கை முறைகள், 3 கொலைகள், 2 மணிநேரம், 1 பழிவாங்குதல். இந்த ஐந்தும் ஒன்று சேரும் கதையை திரைக்கதை வடிவமாக சைக்கோ த்ரில்லர் பாணியில் படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் ராகவேந்திர பிரசாத்..
கதை..? பள்ளியில் படிக்கும் சிறுவயது பையன்கள் இருவர்.. இதில் தன்னை யாருடனும் ஒப்பிட்டு பேசுவது பிடிக்காத சபீர் முரட்டு சுபாவம் கொண்டவன்.. தன்னைவிட படிப்பில் முந்தும் அர்வின் மீது கோபம் வந்து அவனை தாக்குகிறான்.. அவனது கோபத்தால் அர்வினின் அம்மா எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி இறக்க, சபீரின் அப்பா ரவி ராகவேந்தர், அர்வினை தனது வீட்டில் வைத்து வளர்க்கிறார்.
இது சபீரின் கோபத்தை இன்னும் அதிகமாக்க, இதை தட்டிக்கேட்கும் தனது தாயையும் எதிர்பாராத விதமாக கொன்று, சிறுவயதிலேயே ஜெயிலுக்கு செல்கிறார். மனச்சிதைவு நோய்க்கு ஆளாகி சைக்கோ வாலிபனாக வளர்ந்து அர்வின் மீதான தனது வஞ்சத்தை தீர்த்துக்கொள்ள அவரை தேடி வருகிறார் சபீர்.
அரவின், அர்வின் மனைவி பவித்ரா, தனது தந்தை ரவி ராகவேந்தர், இன்னும் ஒரு குழந்தை அனைவரையும் அர்வினின் வீட்டிலேயே கட்டிப்போட்டு, அந்த குழந்தையை அர்வின் கொலைசெய்தால் அவர் மனைவியை விட்டுவிடுவதாக கட்டளையிடுகிறார். அர்வின் அதற்கு மறுக்க, பவித்ராவின் ஒவ்வொரு விரலாக வெட்டுகிறார் சபீர். இந்த சூழலில் திருடுவதற்காக வந்து அங்கே இந்த களேபரத்தில் தன்னையறியாமல் சிக்குகிறான் ஒரு திருடன்..
மனைவியை காப்பாற்ற குழந்தையை அர்வின் கொன்றாரா..? அந்த குழந்தை யார்..? ஒளிந்திருந்த திருடனும் சபீரிடம் சிக்கிக்கொண்டானா.? இல்லை இவர்கள் அனைவரும் சபீரிடமிருந்து மீண்டார்களா என்பதை இரண்டு மணி நேரம் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார்கள்.
சங்கிலியால் கட்டிப்போட்ட புலியாய் துள்ளும் நாயகன் அர்வினை விட தனது சைக்கோத்தனமான நடிப்பால் பல அடிகள் சிறுத்தையாக முன்னோக்கி பாய்ந்திருக்கிறார் சபீர்.. அவர் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை எப்போதும் டென்ஷனுடன் வைத்திருப்பதில் வெற்றி பெறுகிறது. அதிலும் பார்வதியின் விரலை வெட்டும்போதும், தனது தந்தையை தயவு தாட்சண்யம் பாராமல் அடிக்கும்போதும் என்னா வில்லத்தனம்..?
நாயகி பவித்ராவுக்கு வாயில் பிளாஸ்திரி ஒட்டியபடியே முக்கால்வாசி படத்தில் நடிக்கவேண்டிய சூழல்.. நயமாகத்தான் செய்திருக்கிறார். திருட வந்த வீட்டிற்குள் மாட்டிக்கொண்டு, தன்னை வெளிப்படுத்திக்கொள்ளவும் முடியாமல், பணத்துடன் தப்பிக்கவும் முடியாமல் உயிருக்கு அஞ்சி நடுங்கும் கேரக்டரில் ரசிகர்கள் அனைவரையும் கவனிக்க வைத்துவிட்டார் நடிகர் ஜெயக்குமார் ஜானகிராமன். ரவிராகவேந்தர், ரோகிணி ஆகியோரின் பங்கும் ஸிரப்பூ..
ஜோஸ்வா ஸ்ரீதரின் இசையும் பானு முருகனின் ஒளிப்பதிவும் இந்த சைக்கோ த்ரில்லரின் காரத்தை இன்னும் கூட்டுகின்றன. அர்வின்-பவித்ரா காதல் காட்சிகள் படத்திற்கு வேகத்தடை போடுகின்றன. குழந்தைகளை ஒருவரோடு மற்றொருவரை ஒப்பிட்டு திட்டுவது, கண்டிப்பது, கேலி செய்வது எல்லாம் எவ்வளவு பெரிய விபரீதத்தில் கொண்டுபோய்விடும் என்பதை இரண்டு மணி நேரம் திக் திக் என உட்கார வைத்து பாடம் நடத்தியிருக்கிறார் இயக்குனர் ராகவேந்திர பிரசாத்..
படம் ஓஹோ ஹிட் ரகம் இல்லையென்றாலும் இரண்டு மணி நேரம் போரடிக்காமல் உங்களை திகிலடிக்கும் என்பது மட்டும் உறுதி.