நடிகர்கள் : சாண்டி, ஸ்ருதி செல்வம், கெளதம் வாசுதேவ் மேனன், மைம் கோபி, ரமா, ரேஷ்மா
இசை : ஹர்ஷவர்தன்
ஒளிப்பதிவு : சதீஷ் மனோகரன்
தயாரிப்பு : டி.ஜீவிதா கிஷோர்
இயக்கம் : நம்பிக்கை சந்துரு
3:33 மணி வந்தவுடன் கெட்ட கெட்ட கனவுகளால் அச்சுறுத்தப்படும் நாயகன் சாண்டி, சில சமயங்களில் அமானுஷ்ய சக்திகளாலும் அச்சுறுத்தப்படுகிறார். இதனால் மன ரிதியாக பாதிப்படையும் சாண்டி, தனது பிரச்சனையில் இருந்து மீண்டாரா இல்லையா?, அவருக்கு நடக்கும் சம்பவங்களுக்கு பின்னணி ஆவிகளா அல்லது உளவியல் பிரச்சனையா? ஆகிய கேள்விகளுக்கான பதிலை திகில் நிறைந்த காட்சிகளோடு சொல்வது தான் ‘3:33’.
ஆவிகளும், அமானுஷ்ய சக்திகளும் ஒருவரை ஆட்டிப்படைக்கும் திகில் படங்களை தான் பார்த்திருக்கிறோம். ஆனால், குறிப்பிட்ட நேரம் மூலம் ஒருவர் சந்திக்கும் பிரச்சனையை திகிலாக சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.
நாயகனாக நடித்திருக்கும் நடன இயக்குநர் சாண்டி, கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருக்கிறார். உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட ஒருவர் எப்படி நடந்துக்கொள்வார் என்பதை தனது நடிப்பு மூலம் நேர்த்தியாக செய்திருப்பவர், எந்த இடத்திலும் ஓவராக நடிக்காமல் அடக்கி வாசித்திருப்பது நலம்.
சாண்டியின் அம்மாவாக நடித்திருக்கும் ரமா, அக்காவாக நடித்திருக்கும் ரேஷ்மா, காதலியாக நடித்திருக்கும் ஸ்ருதி செல்வம் என அனைவரும் அளவாக நடித்திருப்பதோடு, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நம்மை அலற வைத்துவிடுகிறார்கள்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் மற்றும் மைம் கோபி ஆகியோர் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் வந்து போகிறார்கள்.
ஒரே வீட்டில் நடக்கும் கதையாக இருந்தாலும், தனது கேமரா கோணங்கள் மூலம் ஒவ்வொரு காட்சியிலும் சில வித்தியாசத்தை காட்டும் ஒளிப்பதிவாளர் சதீஷ் மனோகரன், படம் பார்ப்பவர்களையும் தனது காட்சியமைப்பு மூலம் பயப்பட வைத்திருக்கிறார்.
ஹர்ஷவர்தனின் பின்னணி இசை திகில் படங்களுக்கு உண்டான நேர்த்தியோடு படம் முழுவதும் பயணிக்கிறது.
கதை எழுதி இயக்கியிருக்கும் நம்பிக்கை சந்துரு உளவியல் ரீதியிலான பிரச்சனையை மையக்கருவாக எடுத்துக்கொண்டு அதனுடன் அமானுஷ்யத்தை சேர்த்து திரைக்கதை அமைத்துள்ளார்.
சில காட்சிகள் மெதுவாக நகர்வதும், ஒரே காட்சியை வெவ்வேறு விதமாக காட்டுவதும் சற்று சலிப்படைய செய்தாலும்,
ஒரே வீட்டில் நடக்கும் கதையை சொல்லிய விதமும், சில திகில் சம்பவங்களும் படத்தை ரசிக்க வைக்கிறது.
மொத்தத்தில், ‘3:33’ வித்தியாசமான திகில் அனுபவம்