நடிகர்கள் : சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், வினய், யோகி பாபு, அர்ச்சனா மற்றும் பலர்
இசை : அனிருத்
ஒளிப்பதிவு : விஜய் கார்த்திக் கண்ணன்
இயக்கம் : நெல்சன்
தயாரிப்பு : சிவகார்த்திகேயன், கோடப்பாடி ஜே.ராஜேஷ்
நாயகி பிரியங்கா மோகனின் அண்ணன் மகள் காணாமல் போக, அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் நாயகன் சிவகார்த்திகேயனுக்கு, சிறுமிகளை கடத்தி வெளிநாட்டில் விற்பனை செய்யும் கும்பல் பற்றி தெரிய வருகிறது. அவர்களால் கடத்தப்பட்ட சிறுமிகள் அனைவரையும் மீட்கும் முயற்சியில் இறங்கும் சிவகார்த்திகேயன், அதை எப்படி செய்து முடிக்கிறார், என்பது தான் படத்தின் கதை.
சீரியசான கதைக்களம் என்றாலும், அதை இயக்குநர் நெல்சன் நகைச்சுவையாக கையாண்டிருப்பதோடு, காட்சிகளை சுவாரஸ்யமாகவும் அமைத்திருப்பது படத்திற்கு மிக்கப்பெரிய பலம்.
நடிப்பில் வித்தியாசத்தை காட்டியிருக்கும் சிவகார்த்திகேயனின் புதிய முயற்சிக்கு வெற்றி கிடைத்திருக்கிறது. மவுனமாக இருந்தே பல இடங்களில் நம்மை சிரிக்க வைக்கும் சிவகார்த்திகேயன், கூட இருக்கும் நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்துவிட்டு ஒதுங்கியிருப்பது படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
நாயகி பிரியங்கா மோகன் ரொம்ப கொள்ளை அழகாக இருந்தாலும், நடிப்பில் ஏதோ குறை இருப்பது போலவே நடிக்கிறார்.
யோகி பாபுவின் காமெடி காட்சிகள் சிரிக்க வைக்கிறது. அவருடன் கூட்டணி அமைத்திருக்கும் டோனி, எப்போதும் வேகமாக பேசுவது சலிப்படைய வைக்கிறது.
வில்லனாக நடித்திருக்கும் வினயின் லுக் மற்றும் நடிப்பு ரொம்ப ஸ்டைலிஷாக இருக்கிறது. அவருடைய கதாப்பாத்திரத்தை இன்னும் கூட பயன்படுத்தியிருக்கலாம் என்று நினைக்க வைக்கிறது.
அர்ச்சனா, இளவரசு, தீபா என படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, கொடுத்த வேலையை சரியாகவும் செய்திருக்கிறார்கள்.
அனிருத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனின் கேமரா ஜாலம் செய்திருக்கிறது.
இயக்குநர் நெல்சன் தனது முதல் படமான கோலமாவு கோகிலா படத்தில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் அதன் பின்னணியை நகைச்சுவையாக சொல்லியிருந்தார். அதே பாணியில் தான், இந்த படத்திலும் பெண் கடத்தலையும் அதன் பின்னணியையும் நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார்.
அவரது நகைச்சுவை யுக்திகள் ரொம்ப சிறப்பாகவே இருக்கிறது. ரசிகர்களும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். ஆனால், அவர் எடுத்துக் கொண்ட பெண் கடத்தல் என்ற விஷயத்தைப் பற்றி தெளிவாக சொல்லாமல், மேலோட்டமாக சொல்லியிருப்பது படத்திற்கு சற்று பாதகமாக அமைந்திருக்கிறது.
மொத்தத்தில், ‘டாக்டர்’ சிரிப்பு மட்டுமே.