’ஜெயில்’ விமர்சனம்


நடிகர்கள் : ஜி.வி.பிரகாஷ்குமார், அபர்ணதி, பாண்டி, ரவி மரியா
இசை : ஜி.வி.பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு : கணேஷ் சந்திரா
தயாரிப்பு : ஸ்ரீதரன் மரியதாசன்
இயக்கம் : வசந்தபாலன்

சென்னை புறநகர் பகுதியில் உள்ள மிகப்பெரிய குடிசை மாற்றுவாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நாயகன் ஜி.வி.பிரகாஷும், அவரது நண்பர்களும் சிறு சிறு குற்றங்களை செய்து வர அவர்களை வைத்து அரசியல்வாதிகளும், காவல்துறை அதிகாரியும் ஆதாயம் தேட முயற்சிக்கிறார். இதனால், அவர்களுடைய வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களும் அதனை தொடர்ந்து ஏற்படும் விளைவுகளும் தான் படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துவதோடு, தனது துள்ளல் நடிப்பால் கவர்கிறார். அவருடைய நண்பராக நடித்திருக்கும் நடிகர் மற்றும் ஜிவி பிரகாஷ்குமாருடன் மோதலில் ஈடுபடுபவர்கள் என அனைவரும் பொருத்தமான தேர்வு.

நாயகியாக நடித்திருக்கும் அபர்ணதி அதிரடியான நடிப்பால் அமர்க்களப்படுத்துகிறார்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் “காத்தோடு காத்தாக…” பாடல் மட்டும் திரும்ப திரும்ப கேட்கும் ரகமாக இருக்கிறது. மற்ற பாடல்களும், பின்னணி இசையும் சுமார் ரகமே.

ஒளிப்பதிவாளர் கணேஷ் சந்திரா, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு காட்சிகளை பிரமாண்டமாகவும், அம்மக்களின் வாழ்வியலை இயல்பாகவும் படமாக்கியுள்ளார்.

சென்னையில் இருக்கும் குடிசைப்பகுதிகளை அகற்றுவதற்காக அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இருப்பிடங்களை அரசு உருவாக்கி கொடுத்தாலும் அவை அம்மக்களை கைதிகளாகவே வைத்திருக்கும் ஒருவை சிறை தான், என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்ய முயற்சித்திருக்கும் இயக்குநர் வசந்தபாலன், பல இடங்களில் சமரசம் செய்துக்கொண்டு திரைக்கதையை சினிமாத்தனமாக நகர்த்தியிருப்பது படத்தின் பெரும் பலவீனம்.

இருந்தாலும், ஒரு சில காட்சிகளில் குறிப்பிட்ட ஒரு தரப்பு மக்களை இந்த சமூகம் எப்படி குற்றவாளிகளாக சித்தரிக்கிறது என்பதையும், அதனால் பலர் தங்களது வாழ்க்கையை எப்படி தொலைக்கிறார்கள் என்பதையும் சொல்லிய விதத்திற்கு இப்படத்தை ஒரு முறை பார்க்கலாம்.

abarnathiGV Prakash Kumarjail reviewkollywood movie reviewtamil movie jailtamil movie jail reviewVasanthabalan