நடிகர்கள் : ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா, டிடி, பிரதாப் போத்தன்
இசை : யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு : ஈ.கிருஷ்ணசாமி
இயக்கம் : சுந்தர்.சி
தயாரிப்பு : அவினி சினிமேக்ஸ் – குஷ்பு சுந்தர்
சகோதரர்களான ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய் ஆகியோரது வாழ்க்கையில் காதல் மற்றும் திருமணத்தால் பல பிரச்சனைகள் எழ, அந்த பிரச்சனைகள் தீர்ந்து அவர்களின் வாழ்க்கை சரியானதா? அல்லது சரிந்து போனதா? என்பது தான் ‘காபி வித் காதல்’ படத்தின் கதை.
மூத்த சகோதரராக நடித்திருக்கும் ஸ்ரீகாந்த், வழக்கமான பாணியில் நடித்திருந்தாலும், கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். அதிலும், தனது தம்பியின் திருமணத்தை தடுப்பதற்காக முயற்சிக்கும் காட்சிகளில் சிரிக்க வைக்கவும் செய்கிறார்.
இளைய சகோதரராக நடித்திருக்கும் ஜீவா, தனது வேடத்தில் எந்தவித குறையும் இல்லாமல் நடித்திருக்கிறார். தம்பிக்கு பார்த்த பெண் மீது அவருக்கு காதல் வருவதும், பிறகு சூழ்நிலையை புரிந்துக்கொண்டு விலகி போகும் காட்சிகளில் நடிப்பில் கவனம் பெறுகிறார்.
கடைசி பிள்ளையாக நடித்திருக்கும் ஜெய், வேடத்திற்கு ஏற்றவாறு ஜாலியாக நடித்திருக்கிறார். முதலில் ஓட்டல் வைப்பதற்காக திருமணத்திற்கு ஒகே சொல்பவர், பிறகு உண்மையான காதல் பற்றி புரிந்துக்கொண்டு தவிப்பதும், அதற்காக செய்யும் முட்டாள்தனமான விஷயங்கள் காமெடியாக இருக்கிறது.
கதாநாயகிகளாக நடித்திருக்கும் மாளவிகா சர்மா மற்றும் அம்ரிதா ஐயர், கமர்ஷியல் படங்களுக்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள். காதல், காமெடி, ஆட்டம், பாட்டம் என்று அவர்கள் படம் முழுவதும் வருகிறார்கள்.
காமெடி காட்சிகளை கையில் எடுத்தியிருக்கும் யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி வரும் காட்சிகள் அனைத்தும் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது. ஆனால், பல கெட்டப்புகளில் வரும் யோகி பாபு, கெட்டப்பின் எண்ணிக்கையை விட காமெடி காட்சிகளை குறைவாகவே கொடுத்திருக்கிறார்.
ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடித்திருக்கும் சம்யுக்தா, கதாபாத்திரத்திற்கு ஏற்ற வேடத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். மூன்று சகோதர்களின் தங்கையாக நடித்திருக்கும் டிடி-யின் நடிப்பு அளவு. ரைசா வில்சன், பிரதாப் போத்தன் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களும் பொருத்தமான தேர்வு.
காமெடி ஏரியாவை கையில் எடுத்துக்கொண்ட யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி சில இடங்களில் சிரிக்க வைத்தாலும் பல இடங்களில் மொக்கை போடுகிறார்கள். அதிலும் ரெடின் ஒரே மாதிரியாக பேசுவது சில இடங்களில் எரிச்சலை கிளப்புகிறது.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பொருத்தமாக இருக்கிறது. பாடல்கள் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தாலும், படம் முடிந்த பிறகு வரும் “ரம்பம்பம்…ஆரம்பம்…” பாடல்கள் ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஈ.கிருஷ்ணசாமி காட்சிகளை கலர்புல்லாக படமாக்கியிருக்கிறார். சில இடங்களில் கதாநாயகிகளை விட கதாநாயகர்களை கவர்ச்சியாகவும், கலர்புல்லாகவும் காட்டியிருப்பவர் முழு படத்தையும் அழகாக படமாக்கியிருக்கிறார்.
குழப்பமான காதல் கதை, கலாட்டா நிறைந்த திருமண ஏற்பாடு, இரண்டையும் ஒரே கதையில் சொல்வதோடு, அதை பலவித திருப்புமுனைகளோடு சொல்ல வேண்டும் என்பதற்காக படத்தொகுப்பாளர் ஃபென்னி ஆலிவர், பல யுக்திகளை கையாண்டுள்ளார். அதில் சில எடுபட்டாலும், சில எரிச்சலைடைய செய்கிறது.
சுட்டுபோட்டாலும் தன்னால் புதுஷாக யோசிக்க முடியாது, என்று படத்திற்கு படம் நிரூபிக்கும் சுந்தர்.சி-யின் வழக்கமான காமெடி மற்றும் காதல் ஃபார்முலாவின் இந்த கதையும் பயணித்தாலும், இதில் கூடுதலாக கலாச்சார சீரழிவுக்கான கதவையும் அவர் திறந்து விட்டிருக்கிறார்.
குடும்பத்தோடு, பார்க்க வேண்டிய பொழுதுபோக்கு படத்தை தான் எடுப்பேன், என்று கூறிக்கொண்டு தம்பிக்கு முடிவு செய்த பெண் மீது அண்ணனுக்கு காதல் வருவது போலவும், அண்ணன் உடலுறவு கொண்ட பெண்ணை தம்பிக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்வது போலவும் காட்சி வைத்திருக்கிறார்.
இவை எல்லாம் சூழ்நிலையால் நடப்பது என்று எடுத்துக்கொண்டாலும், தான் உடலுறவு கொண்ட பெண்ணை தம்பிக்கு திருமணம் செய்து வைக்க கூடாது, என்று முடிவு செய்து திருமணத்தை அண்ணன் தடுக்க முயன்றாலும், அந்த பெண், ஒரு இரவு எல்லாம் சாதாரணம், என்று திருமணத்திற்கு ரெடியாவது போன்ற காட்சிகள் எல்லாம் காலக்கொடுமை.
காமெடியாக படம் எடுத்தால் லாஜிக் பார்க்க கூடாது என்று சொல்வார்கள், ஆனால் இயக்குநர் சுந்தர்.சி இந்த படத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் காமத்துக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்திருப்பதால் பல காட்சிகள் முகம் சுழிக்க வைக்கிறது.
மொத்தத்தில், ‘காபி வித் காதல்’ காமம் வித் காதல்.
ரேட்டிங் 2.5/5